மகாகவி பாரதி 139
மதுரகவி பாஸ்கரதாஸ், மகாகவி பாரதியை கம்பனை போல் கவிச்சக்கரவர்த்தி என்று அழைத்தார். தமிழ்த் தாத்தா உ.வே.சா, பாரதி மீது எதிர்வினையில் இருந்தார் என்ற கருத்து ஒருபுறம் தவறாக சொல்லப்படுகிறது. ஆனால், ’கவிச்சக்கரவர்த்தி சுப்பிரமணிய பாரதி சரிதம்’ என்ற புத்தகத்துக்கு உ.வே.சா 1936ஆம் ஆண்டில் எழுதிய அணிந்துரையில் ‘எட்டையபுரம் ஸ்ரீ சுப்பிரமணிய பாரதியை உலகம் நன்கு அறியும், பாரதி என்றாலே அவர்தான், நல்ல கவிஞர்’ என குறிப்பிட்டுள்ளார்.
இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற இலக்கிய ஆளுமை பாரதி. அவர் நம் தேசத்தின்குரல். அந்நியர்க்கு அடிமைப்பட்டும், உள்நாட்டில் ஒடுக்கப்பட்டும் தவித்த மக்களின் குரலாக ஒலித்தவர். தமிழுக்கு பொதுவுடைமை, புரட்சி போன்ற சொற்செல்வங்களைச் சேர்த்தவர். ரஷ்யாவின் 1917 அக்டோபர் புரட்சியைப் பாடிய முதல் இந்தியக் கவிஞரும் அவரே. அதனால் மொழிகளின் எல்லைகளைக் கடந்து அவர் நினைவுகூரப்படுகிறார்.
சுபகிருது ஆண்டில் (1903) தமக்கு தேசபக்தி ஏற்பட்டதாக பாரதி கூறுவார். அதற்கு முன்பே ஆங்கில ஆட்சி மீது அவருக்கு வெறுப்பிருந்தது. தமிழ் புறக்கணிக்கப்படுவதும், ஆங்கிலம் போற்றப்படுவதும் கண்டு மனம் வருந்தினார்.
15 வயது முடிந்த பின்பு தந்தையை இழந்த பாரதி, 1898ல் அத்தையாரின் ஆதரவைத் தேடி காசிக்கு சென்றார். அலகாபாத் பல்கலைக்கழகத்தில் கல்வி கற்றார். ஆங்கிலம், இந்தி, சமஸ்கிருதம் மூன்றிலும் அவருக்கு புலமை.
பெண் கல்வி, சமத்துவம் இந்த இரு விஷயங்களில் பாரதி அதிக கவனம் செலுத்தியதாக நாராயண அய்யங்கார் கூறுகிறார். சரஸ்வதி பூஜையன்று அத்தை வீட்டில் ஒரு கூட்டத்தைக் கூட்டி, பெண்கல்வி குறித்து பாரதி பேச, சீத்தாராம் சாஸ்திரி அதைக் கண்டித்து வெளியேறினாராம். அதுவே,
பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும்
பாரினில் பெண்கள் நடத்த வந்தோம்
எட்டு மறிவினில் ஆணுக்கிங்கே பெண்
இளைப் பில்லை காண்.
என்று பாரதியை கும்மியடிக்க வைத்தது.
திலகர் அரவிந்தர், விபின் சந்திரபாலா ஆகியோரின் தீவிரத் தேசியவாத அரசியலில் பாரதியும் குதித்தார். அவர்கள் இந்தியாவை, இந்துக்களின் தெய்வப்படிமங்களான காளி, துர்க்கை, பவானி, பைரவி வடிவங்களாக சித்தரித்தனர். பாரதியும் பாரதத்தைக் காளியாக உருவகித்தே பாடினார். இந்த சித்தரிப்பையும், வந்தே மாதரம் முழக்கத்தையும் முகமதியர் ஏற்கவில்லை. ஒரே நேரத்தில் இந்து தேசியமும் இஸ்லாமியத் தேசியமும் பொங்கி எழுந்தன.
இதன் ஆபத்தை உணர்ந்தார் பாரதி. 1906 ஜூலை 23, ‘இந்தியா’ இதழில் ‘இசுலாமியர்களின் பூர்வீகக் குற்றங்களை எடுத்துரைத்தல் தப்பிதம்’ என்றும், ‘அக்பர் போன்ற மகமதிய மகான்களின் உற்சவத்தைக் கொண்டாட வேண்டுமென்றும்’ கேட்டுக்கொண்டார். ‘சத்ரபதி சிவாஜி’ பாடலின் முன்னுரை ஒன்றில் “இந்தச் செய்யுளில் மகமதியச் சகோதரர்களுக்கு விரோதமாக சில வசனங்கள் உபயோகிக்க நேர்ந்தது பற்றி விசனமடைகிறோம்” என்று வருத்தமும் தெரிவித்தார்.
சூரத் காங்கிரஸ் மகாசபையில் திலகரின் தீவிர தேசியவாதக் கட்சிக்கு சென்னை மாகாணச் செயலராக வ.உ.சிதம்பரனார் தேர்வானார். 1908 மார்ச்சில், வ.உ.சி, பாரதி, சுரேந்திரநாத் ஆர்யா மேலும் நால்வர் சேர்ந்து, ‘சென்னை ஜனசங்கம்’ அமைப்பை உருவாக்கி, சுய ராஜ்ய தினம் கொண்டாடத் திட்டமிட்டனர். பாரதியும் சுரேந்திரநாத் ஆர்யாவும் அரும்பாடுபட்டு மாணவர்களையும் மற்றவர்களையும் திரட்டினர். கழுத்தில் மாலையுடன் மேளதாளங்கள் முழங்க, பெரும்படை ஒன்றை நடத்திச் செல்லும் தளபதிபோல் ஊர்வலத்தைப் பாரதி நடத்தி சென்றுள்ளார்.
தூத்துக்குடியிலும் திருநெல்வேலியிலும் சுயராஜ்ய தினம் கொண்டாடியதற்காக வ.உ.சி.யும் சுப்பிரமணிய சிவாவும் 12-.03.1908ல் கைது செய்யப்பட்டனர். இருவர் மீதும் ராஜ துரோக வழக்கு போடப்பட்டது. மறுநாளே மக்கள் போராட்டம் வெடித்தது. போலீசாரின் துப்பாக்கிச் சூட்டில் நான்குபேர் சாவு, நூற்றுக்கும் மேற்பட்டோர் கைது.
ஆயுள் தண்டனையும், ஆஷ் கொலையும்
07-.07-.1908ல் வ.உ.சிக்கு 40 ஆண்டுகளும், சிவாவுக்குப் 10 ஆண்டுகளும் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. ஆகஸ்ட்டில் பாரதியின் இந்தியா அலுவலகத்தில் சோதனை நடந்தது. அதன் உரிமையாளர் எம்.சீனிவாசன் கைதானார். பாரதி தலைமறைவாகி புதுச்சேரியில் அடைக்கலமானார். 10-.10-.1908ல் புதுவையிலிருந்து ‘இந்தியா’ வெளிவந்தது. அதன் முகப்பில் ‘சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம்,’ என்றும் பிரெஞ்சு புரட்சியின் முழக்கங்கள்.
1911 ஜூன் 17 அன்று மணியாச்சி ரயில் நிலையத்தில் வாஞ்சிநாதன், ஆஷ் துரையை சுட்டுக் கொன்று, தம் உயிரையும் மாய்த்துக்கொண்டார். படுகொலை, கைது,சோதனை என ஆங்கில அடக்குமுறைகள். தேசபக்தர்கள் சிதைந்து சிதறுண்டு போயினர்.
1908 முதல் 1911 வரை நடந்த நிகழ்வுகள், பயங்கரவாதம் வெற்றி தராது என்பதையே உணர்த்தின. பாரதியும் தீவிரத் தேசியவாதத்தின் மீது நம்பிக்கை இழந்தார் எனலாம். அரசியலில் இறங்குமுகத்தில் இருந்த அவர், இலக்கியத்தில் ஏறுமுகம் கண்டார். ‘பகவத்கீதை தமிழாக்கம்’, ‘கண்ணன் பாட்டு’, ‘குயில் பாட்டு’, ’பாஞ்சாலி சபதம்’ என அவர் கவியாற்றல் ஊற்றெடுத்துப் பெருகிற்று. எனினும், விடுதலை உணர்வோ, சீர்திருத்தச் சிந்தனைகளோ அவரை விட்டு நீங்கவில்லை.
1918 நவம்பர் 20ல் கடலூர் அருகே பிரிட்டிஷ் அரசு பாரதியைக் கைது செய்தது. 25 நாள்களுக்குப் பின் அவர் விடுதலையானார். 1919ல் சென்னை வந்த பாரதி, மூதறிஞர் ராஜாஜி வீட்டில் மகாத்மா காந்தியைச் சந்தித்தார். ரௌவுலட் சட்ட எதிர்ப்பு இயக்கத்துக்கு ஆதரவு திரட்ட காந்தி சென்னை வந்திருந்தார். “மிஸ்டர் காந்தி தாங்கள் ஆரம்பிக்கப் போகும் இயக்கத்தை நான் ஆசீர்வதிக்கிறேன்” என பாரதி கை உயர்த்தி சென்றாராம். 1921 ஜூலையில் பார்த்தசாரதி கோயில் யானைக்கு மதம்பிடித்தது. துதிக்கையால் பாரதியைத் தூக்கி வீசி எறிந்தது. ரத்தப்பெருக்கோடு அவர் நினைவிழந்து கிடந்தார். குவளைக் கண்ணன் அவரை மருத்துவமனைக்குத் தூக்கி சென்றார். பாரதி ஓரளவு நலம் பெற்றார்.
1921 செப்டம்பர் முதல் நாளில் பாரதிக்கு வயிற்றுப்போக்கு. அது ரத்தக்கடுப்பாக மாறி அவரை வேதனைப்படுத்தியது. 11ஆம் நாள் இரவு ஒரு மணிக்குமேல் தமிழ்நாடு தன் புரட்சிக் கவிஞனை இழந்தது.
“பார் மீது நான் சாகாதிருப்பேன் காண்பீர்” என சூளுரைத்தவர் பாரதி. அப்படியிருக்க, சுதந்திர தேவியைத் தொழுதிட மறவாத, சாதிப் படைக்கு மருந்தான அந்தப் பைந்தமிழ்த் தேர்ப்பாகன் சாகமுடியுமா? நாட்டுக்காகவும் சமூகநீதிக்காகவும் போராடும் கடைசி மனிதன் இருக்கும் வரை பாரதியும் வாழ்ந்து கொண்டிருப்பார். மக்களுக்கான வாழ்வுரிமைப் போராட்டங்களோடு ஒன்றித்து இயங்கும் படைப்பாளி இறவாத இலக்கியங்கள் படைக்க முடியும் என்பதற்கான தலையாய சான்று பாரதியே.
– கே.எஸ்.இராதாகிருஷ்ணன்