கூலிப்படையை ஏவி கணவனை கொன்ற மனைவி…
தஞ்சாவூரில் கணவர் வெளிநாடு சென்ற நேரத்தில் முகநூல் காதலர்களுடன் சேர்ந்து சொத்துக்களை அபகரித்த குற்றச்சாட்டுக்குள்ளான, இலங்கை பெண் ஒருவர் ஊர் திரும்பிய கணவரை கூலிப்படை ஏவி தீர்த்துக்கட்டியதாக கைது செய்யப்பட்டுள்ளார்.
தஞ்சை விளார் சாலை காயிதே மில்லத் நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஜோசன் என்கிற யூசுப். இவருக்கு திருமணமாகி மனைவி குழந்தைகள் திருச்சியில் வசித்து வருகின்றனர்.
குவைத்துக்கு வேலைக்குச் சென்ற யூசுப் அங்கு தன்னுடன் வேலை பார்த்த அசிலா என்ற இலங்கையைச் சேர்ந்த பெண்ணை காதலித்து திருமணம் செய்துகொண்டார். அசிலாவை தஞ்சாவூர் அழைத்து வந்து வீட்டில் தங்க வைத்தவர், தஞ்சை, திருச்சி என இரு மனைவிகளுடனும் குடும்பம் நடத்தி வந்ததாக கூறப்படுகின்றது.
தற்போது காதல் மனைவி அசிலாவின் நடவடிக்கை பிடிக்காமல் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து வாழ்ந்து வந்தார் யூசுப். இந்த நிலையில் கடந்த 25ஆம் தேதி யூசுப் சென்ற காரை பின் தொடர்ந்து சென்ற மர்ம கும்பல் ஒன்று அவரை அரிவாளால் ஓட ஓட விரட்டி சரமாரியாக வெட்டிக் கொன்றது.
இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் கொலையாளிகளை தேடி வந்த நிலையில் 5 வழக்கறிஞர்களுடன் காவல் நிலையத்தில் ஆஜரான அசிலா, கணவன் கொலைக்கும் தனக்கும் தொடர்பு இல்லை என்பதுபோல் போலீசில் விளக்கம் அளித்தார். பெண் போலீசார் மூலம் நடத்தப்பட்ட விசாரணையில் யூசுப் கொலைக்காண மர்மம் விலகியது.
2016 ஆம் ஆண்டில் யூசுப் வெளிநாடு சென்ற பின்னர் வீட்டில் தனியாக இருந்த அசிலா, முகநூல் மூலம் ஏராளமான இளைஞர்களோடு நட்பை ஏற்படுத்திக் கொண்டு, அவர்களை வீட்டுக்கு வரவழைத்து தனிமையை கழித்து வந்ததாகக் கூறப்படுகிறது.
அதோடில்லாமல் யூசுப் வங்கி கணக்கு வைத்திருந்த வங்கியின் மேலாளரை தனது வலையில் வீழ்த்திய அசிலா, யூசுப்பின் வங்கி லாக்கரில் இருந்த 300 சவரன் நகைகள், மற்றும் கோடிக்கணக்கான மதிப்புள்ள சொத்துக்களை தன் பெயருக்கு மாற்றிக் கொண்டதாகவும் கூறப்படுகின்றது.
இந்தத் தகவல் நண்பர்கள் மூலம் யூசுப்புக்குத் தெரியவரவே, கடந்த 2018ஆம் ஆண்டு அவர் குவைத்திலிருந்து தஞ்சை திரும்பியுள்ளார். அசிலாவின் தவறான உறவு தொடர்பாக இருவருக்கும் எழுந்த தகராறில் அவரை பிரிந்துள்ளார். ஆனால் அதற்கு முன்பாகவே பாஸ்போர்ட் மோசடி வழக்கில் சிக்கிய அசிலாவுக்கு சில வழக்கறிஞர்களின் அறிமுகம் கிடைத்துள்ளது. அவர்கள் மூலமாக தன் உயிருக்கு ஆபத்து இருப்பதாக யூசுப் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
மேலும் கடந்த 2019 ஆம் ஆண்டு நீதிமன்றத்தில் யூசுப் விவாகரத்து வழக்கு தொடர்ந்துள்ளார். வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் அசிலாவிடம் இருந்து தனது சொத்துக்களை மீட்க யூசுப் சட்ட நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியதாக கூறப்படுகின்றது. இதனால் தான் அபகரித்த பலகோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் பறிபோய்விடுமோ என்ற அச்சத்தில் கணவரை தீர்த்துக் கட்ட அசிலா திட்டமிட்டு தனது நண்பர்கள் மூலம் 10 லட்சம் ரூபாய் கொடுத்து திருச்சியில் இருந்து கூலிப்படையை அழைத்து வந்து யூசுப்பை தீர்த்துக்கட்டியது தெரியவந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
ஆனால் இதனை மறைத்து போலீசிடம் அளித்த வாக்குமூலத்தில் யூசுப் தன்னை போலவே பல பெண்களிடம் தொடர்பு வைத்திருந்ததாலும், தனக்கு பணம் கொடுப்பதை நிறுத்தியதாலும் ஏற்பட்ட ஆத்திரத்தில் அவரை கூலிப்படையை ஏவி கொலை செய்ததாக வாக்கு மூலம் அளித்திருந்ததாக கூறப்படுகின்றது.
குவைத்தில் இருந்து அழைத்து வந்து ஆடம்பர வாழ்க்கை தந்த காதல் கணவனை மறந்து, முகநூலில் பழக்கமான சீசன் நண்பர்களை நம்பி மோசடியில் ஈடுபட்டதோடு, கூடா நட்பால் கொலைப்பழியிலும் சிக்கி கம்பி எண்ணும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார் இலங்கை பெண் அசிலா என்கின்றனர் காவல்துறையினர்.
அதே நேரத்தில் குடும்பத்தை மறந்து காதலியின் அழகில் மயங்கி கிடந்தால் முடிவில் என்ன மாதிரியான விபரீதம் நிகழும் என்பதற்கு இந்த சம்பவம் ஒரு எச்சரிக்கை பாடம்.
–உதுமான்அலி