ரேஷன் அரிசி கடத்திய மாஃபியா கும்பல் ! 13 டன் அரிசி மூட்டைகள், வாகனங்கள் பறிமுதல் !
ரேஷன் அரிசி கடத்தலைத் தடுக்கும் நோக்கில், குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுப் பிரிவு போலீசார், தமிழகம் முழுவதும் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். பொதுமக்களுக்கு இலவசமாக தமிழ்நாடு அரசு வழங்கும் அரிசியை, ரேஷன்கடை விற்பனையாளர்கள், பொதுமக்களிடம் குறைந்த விலைக்கு வாங்கி, முறுக்கு மற்றும் மிக்சர் கம்பெனிகளுக்கும், வெளி மாநிலங்களுக்கு கொண்டுசென்று அதிக விலைக்கு விற்பனை செய்து வருவதை, சிலர் தொழிலாக செய்து வருகின்றனர்.
இந்நிலையில் சென்னை வடக்கு பிரிவு, குடிமைப் பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு ஆய்வாளர் தாம்சன் சேவியர் தலைமையில், பழைய வண்ணாரப்பேட்டை பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது, அவருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், காளிங்கராயன் 3வது தெருவில் 6,450 கிலோ ரேஷன் அரிசியை பதுக்கி வைத்திருந்த முருகவேல் ( எ ) ஆமோஸ் என்பவரைப் பிடித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
அப்போது அவர் துணி வியாபாரம் செய்ததாகவும், அதில் போதிய வருமானம் இல்லாததால் ஐந்து நபர்களை வைத்து ஆறு இருசக்கர வாகனங்கள் மூலம், இப்பகுதிகளில் உள்ள ரேஷன் கடைகளிலும், பொதுமக்களிடமிருந்தும் அரிசியை வாங்கி மாவாக அரைத்து, முறுக்கு மற்றும் மிக்சர் கம்பனிகளுக்கும், மதுரையிலுள்ள கோழிப்பண்ணைகளுக்கும் கொடுத்து வந்ததாக தெரிவித்துள்ளார். ரேஷன் அரிசியை கடத்த முயன்ற குற்றத்திற்காக முருகவேல் எ ஆமோஸ் உள்ளிட்ட ஆறு பேர் மீது வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
இதேபோல் அயனாவரம் பகுதியில், 1250 கிலோ ரேஷன் அரிசியை கடத்திய, கடத்தல் மன்னன் மனோகரன் அவரது மகன் சதீஷ் ஆகிய இருவரையும் கைது செய்ததோடு, கடத்தலுக்கு பயன்படுத்திய லாரி மற்றும் மூன்று சக்கர வாகனங்களையும் பறிமுதல் செய்துள்ளனர். மேலும் கொளத்தூர் பகுதியில் உள்ள லூர்துராஜ் என்பவரிடம் வெளிமாநிலங்களுக்கு கடத்த இருந்த 5200 கிலோ ரேஷன் அரிசியை பறிமுதல் செய்ததோடு, வழக்குப் பதிவு செய்து கடத்தலுக்கு பயன்படுத்திய வாகனங்களையும் பறிமுதல் செய்து நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
பின்னர் ரேஷன் அரிசியை கடத்தலில் ஈடுபடுபவர்கள் மீது குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என எச்சரித்துள்ளனர்.
– கே.எம். சிராஜூதீன்