சென்னை ஐஐடியில் பரவிய கொரோனா : பள்ளி, கல்லூரிகள் திறப்புக்கு தந்த எச்சரிக்கையா?
சென்னை ஐஐடி வளாகத்தில் 180-க்கும் மேற்பட்ட மாணவர்கள் மற்றும் ஊழியர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், தமிழகத்தின் மற்ற கல்வி நிறுவனங்களின் நிலை என்னவாக இருக்கிறது?
தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகளைத் திறக்க அரசு அனுமதி அளித்திருந்தது. இந்தநிலையில், சென்னை ஐஐடி-யில் பயிலும் 180-க்கும் அதிகமான மாணவர்கள் மற்றும் ஊழியர்களுக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார்கள். ஐஐடி வளாகத்திலிருக்கும் உணவகத்தில் பணியாற்றிய நான்கு ஊழியர்களுக்குத் தொற்று உறுதியான நிலையில், அங்குள்ள பலருக்கும் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
ஐஐடி-யைத் தொடர்ந்து, அண்ணா பல்கலைக்கழக மாணவர்கள் விடுதியிலும் பல மாணவர்களுக்கு தொற்று அறிகுறி காணப்பட்டதால், அங்குள்ள 550-க்கும் அதிகமான மாணவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில், ஆறு பேருக்குத் தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டிருக்கிறது. இந்தச் சூழலில், தமிழகத்தில் பல்வேறு கல்லூரிகள் இறுதியாண்டு மாணவர்களுக்குக் கல்லூரி திறக்கலாம் என்று கூறியிருக்கின்றன. இந்தநிலையில், ஐஐடி-யில் நடந்ததைப்போல தமிழகத்தில் மற்ற கல்லூரிகளில் நடக்காது என்பது என்ன நிச்சயம் என்ற கேள்வி எழுந்திருக்கிறது. தொற்று பரவாமலிருக்க அரசு சார்பிலும், கல்லூரி நிர்வாகங்கள் சார்பிலும் என்ன மாதிரியான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன என்பதையும் பார்க்க வேண்டியிருக்கிறது. தற்போது, சென்னையிலுள்ள மற்ற கல்லூரி விடுதிகளில் தங்கியிருக்கும் மாணவர்கள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்ய மாநகராட்சி சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.
பள்ளிகளைத் திறக்க மத்திய அரசு அனுமதி அளித்திருந்த நிலையில், ஆந்திராவில் கடந்த நவம்பர் மாதம் 2-ம் தேதி 9, 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகள் செயல்படத் தொடங்கின. பள்ளிகள் தொடங்கிய நான்காவது நாளே 575 மாணவர்கள், 829 ஆசிரியர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டது. அதேபோல, ஹரியானாவில் பள்ளிகள் திறந்த சில தினங்களிலேயே நூற்றுக்கணக்கான மாணவர்களுக்குத் தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டது. இந்தியாவில் மட்டுமல்லாமல் உலக அளவிலும் கல்வி நிறுவனங்களைத் திறந்த பல்வேறு நாடுகளில் இதேநிலைதான் ஏற்பட்டது.
தமிழகத்தில் கலை அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், மருத்துவம் உள்ளிட்ட அனைத்துக் கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் இளநிலை இறுதியாண்டு மாணவர்களுக்குக் கடந்த 7-ம் தேதி வகுப்புகள் தொடங்க அரசு அனுமதி அளித்தது. அதோடு, அனைத்து வகையான விடுதிகளையும் திறக்கவும் உத்தரவிட்டது. பல்வேறு பாதுகாப்பு வழிமுறைகளோடு கல்லூரிகளைத் திறக்க அரசு அனுமதி அளித்திருந்தாலும். அந்த விதிமுறைகள் பின்பற்றப்படுகின்றனவா என்பதற்கு ஐஐடி-யில் நடந்ததை ஓர் உதாரணமாகச் சொல்லலாம். இது போன்ற தொடர் சம்பவங்கள் மாணவர்கள் மத்தியிலும், பெற்றோர்கள் மத்தியிலும் அச்சத்தை ஏற்படுத்தியிருக்கின்றன.
இது குறித்து சுகாதாரத்துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறுகையில், “ஐஐடி-யில் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு கிண்டி கொரோனா மருத்துவமனையில் உயர்தர சிகிச்சை வழங்கப்பட்டுவருகிறது. அண்ணா பல்கலைக்கழகத்தில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் ஒரு சதவிகித மாணவர்களுக்குத் தொற்று இருப்பது கண்டறியப்பட்டிருக்கிறது. இது குறித்து அச்சம்கொள்ளத் தேவையில்லை. அரசு வழங்கியிருக்கும் பாதுகாப்பு வழிமுறைகளை மாணவர்களும், கல்வி நிர்வாகங்களும் கண்டிப்பாகப் பின்பற்ற வேண்டும். தமிழகத்தில் கொரோனா தொற்று கட்டுக்குள்ளிருக்கும் நிலையில், ஒரு சிறிய தவறும் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தக்கூடும். தவற்றுக்குக் காரணமானவர்கள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். முகக்கவசங்களை அனைவரும் கண்டிப்பாக அணிய வேண்டும். எப்போதுமே தனிமனித இடைவெளியைப் பின்பற்ற வேண்டும்“ என்று கூறினார்.
இந்தநிலையில், “அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் அரையாண்டுத் தேர்வு ரத்து செய்யப்படுகிறது. தனியார் பள்ளிகளில் தேவைப்பட்டால் மட்டும் ஆன்லைன் வழியாகத் தேர்வை நடத்திக்கொள்ளலாம். பாடத் திட்டங்களைப் பொறுத்தவரை ஒன்பதாம் வகுப்பு வரை 50% பாடமும், 10 முதல் 12-ம் வகுப்பு வரை 35% பாடத்திட்டமும் முதல்வரின் ஒப்புதலோடு குறைக்கப்பட்டிருக்கிறது” என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்திருக்கிறார்.
கல்வி நிறுவனங்கள் மேற்கொள்ளவேண்டிய பாதுகாப்பு வழிமுறைகள் பற்றி சூழல் பாதுகாப்புக்கான மருத்துவர் சங்கத்தைச் சேர்ந்த மருத்துவர் புகழேந்தி கூறுகையில், “தற்போது ஐஐடி-யில் நடந்த சம்பவத்தை நாம் ஒரு படிப்பினையாக எடுத்துக்கொள்ள வேண்டும். காரணம், அங்கு அதிகபட்ச பாதுகாப்பு வசதிகள் இருக்கின்றன. அங்குள்ள மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் அனைவருக்குமே அறிவியல் அறிவு உள்ளது. எல்லாவற்றுக்கும் மேலாக வளாகத்துக்குள்ளேயே மருத்துவமனை இருக்கிறது. வசதிகள் இருந்தும் ஐஐடி-யில் இத்தனை நபர்கள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்றால், நமது அரசுப் பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் மாணவர்கள் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்புகளைப் பற்றி யோசிக்க வேண்டும்.
ஐஐடி-யில் தொற்று பரவியதற்கான முக்கிய காரணமாகக் கூறப்படுவது, மூடிய நிலையிலிருந்த உணவகம், பொதுக்கழிப்பறை மற்றும் தண்ணீர் குடிக்கும் இடம் போன்றவைதான். இதே தவறு மற்ற கல்வி நிறுவனங்களிலும் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம். எனவே, இது போன்ற தவறு நடக்கும் அனைத்து வாய்ப்புகளையும் சரிசெய்வதை அரசு உறுதி செய்ய வேண்டும். அதோடு, அந்தந்தக் கல்வி நிறுவனங்களில் பெற்றோர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் ஊழியர்கள் அடங்கிய குழு ஒன்றை உருவாக்கி விதிமுறைகள் சரியாகப் பின்பற்றப்படுகின்றனவா என்பதை உறுதி செய்ய வேண்டும்“ என்று கூறினார்.
– உதுமான்அலி