திருப்பூரில் கிளி ஜோதிடர் கொலை பின்னணி என்ன?
திருப்பூர் பார்க் ரோடு பகுதியில் கிளி ஜோதிடம் பார்த்து வந்த ரமேஷ் என்பவர், பென்னி காம்பவுன்ட் பகுதியில் சாலையில் நடந்து சென்றபோது, அவரை பின்னால் வந்த ஹெல்மெட் அணிந்த நபர் அரிவாளால் வெட்டினான். முதல் வெட்டிலேயே நிலைகுலைந்து கீழே விழுந்த ஜோதிடர் ரமேஷை, தொடர்ந்து சரமாரியாக ஆத்திரத்தோடு வெட்டிய ஹெல்மெட் அணிந்த நபர், நீதிமன்றத்தில் சரண் அடையப் போவதாக கூச்சலிட்டு, அங்கிருந்து தப்பியோடினான். இந்த காட்சிகள் அனைத்தும், வணிக நிறுவனம் ஒன்றில் பொருத்தியிருந்த சி.சி.டிவி. கேமராவில் பதிவாகியிருந்தன.
பின்னர் கொலை செய்த நபர், சிறிது தூரம் சென்றுவிட்டு அச்சடிக்கப்பட்ட காகிதங்களை சாலையில் வீசிவிட்டுச் சென்றான். அதில், கிளி ஜோதிடர் ரமேஷ், பூங்காவுக்கு வரும் பெண்களை வசியப்படுத்தி பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி வந்ததாகவும், ஏராளமான பெண்கள் ரமேஷின் பிடியில் இருந்ததாகவும் அச்சடிக்கப்பட்டிருந்தது. மேலும், தனக்கும் போயம்பாளையத்தைச் சேர்ந்த மோகனப்பிரியா என்ற பெண்ணுக்கும் ஏற்பட்ட தவறான பழக்கத்தால் ஒரு குழந்தை உள்ள நிலையில், அனுப்பர்பாளையம் காவல் நிலையத்தில் இருவரும் பிரிக்கப்பட்டதாகவும், தற்போது மோகனப்பிரியா கிளி ஜோதிடர் ரமேஷின் பிடியில் சிக்கியிருப்பதாகவும், இதன் பின்னணியில் ஏராளமானோர் இருப்பதாகவும் கொலையாளி வீசிச் சென்ற காகிதத்தில் கூறப்பட்டிருந்தது. சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், கிளி ஜோதிடர் ரமேஷின் உடலைக் கைப்பற்றியதோடு, வீசிச்சென்ற நோட்டீசையும் கைப்பற்றி விசாரணையை தீவிரப்படுத்தினர்.
அப்போதுதான், கொலைக்கான பின்னணி தெரியவந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். போயம்பாளையத்தைச் சேர்ந்த மோகனப்பிரியா, தமது கணவரை பிரிந்து வந்து, கும்பகோணத்தைச் சேர்ந்த ரகுவுடன் குடும்பம் நடத்தியதாக கூறப்படுகிறது. அவர்களுக்கு ஒரு குழந்தை பிறந்தநிலையில், மோகனப்பிரியாவின் இருப்பிடத்தை அறிந்த முதல் கணவர், அனுப்பர்பாளையம் காவல்நிலையத்தில் புகார் அளித்ததாக சொல்லப்படுகிறது. இதையடுத்து, 3 பேரையும் வரவழைத்த போலீசார், பேச்சுவார்த்தை நடத்தி, மோகனப்பிரியாவை அவரது முதல் கணவருடன் அனுப்பிவிட்டு, ரகுவையும் எச்சரித்து அனுப்பியுள்ளனர். ஆனால், கள்ளக்காதலியின் பிரிவை தாங்க முடியாத ரகு, கிளி ஜோதிடர் ரமேஷை நாடி, மோகனப்பிரியாவை வசியம் செய்து தருமாறு கூறியுள்ளான்.
அதற்கு ஒப்புக்கொண்டு, ரகுவிடம் இருந்து கணிசமான பணத்தை வாங்கிய ஜோதிடர் ரமேஷ், அதன்பிறகு பிடிகொடுக்காமல் இருந்ததாக கூறப்படுகிறது. பலமுறை அலைந்தும் கிளி ஜோதிடர் ரமேஷ், தமது கள்ளக்காதலியை வசியம் செய்து தராததால் ஆத்திரமடைந்த ரகு, கடந்த ஆண்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டு, இரும்பு கம்பியால், ரமேஷை குத்தியுள்ளான். இந்த வழக்கு திருப்பூர் – மங்கலம் காவல் நிலையத்தில் உள்ள நிலையில்தான், தற்போது கிளி ஜோதிடர் ரமேஷ் கொலை செய்யப்பட்டுள்ளார் என்று கூறியுள்ளனர் போலீசார்.
கும்பகோணம், குத்தாலம், காரைக்குடியில் உள்ள ரகுவின் உறவினர் வீடுகள் உள்ளிட்ட இடங்களில் அவரை போலீஸார் தேடி வந்தனர். இந்த நிலையில், சென்னை அம்பத்தூரில் உள்ள நீதித் துறை நடுவர் நீதிமன்றத்தில் ரகு சரண் அடைந்தார். அவரை 15 நாள்கள் நீதிமன்றக் காவலில் அடைக்க குற்றவியல் நீதித் துறை நடுவர் அனிதா ஆனந்த் உத்தரவிட்டார். இந்த உத்தரவின்பேரில் ரகு புழல் சிறையில் அடைக்கப்பட்டார். ரகுவை நீதிமன்றக் காவலில் எடுத்து விசாரணை நடத்த திருப்பூர் வடக்கு காவல் துறையினர் முடிவு செய்துள்ளனர்.