கண்துடைப்புக்காக கல்குவாரி.. கருத்து கேட்பு கூட்டம் ! அதிகாரிகள் ஆவணங்களை மறைத்தாலும், கூகுள் மறைக்காது என விவசாயிகள் ஆவேசம்

திருப்பூர் மாவட்டம், பல்லடம் தாலுகா, கோடங்கிபாளையம் அருகே உள்ள பூமலூர் கிராமத்தைச் சேர்ந்த குமாரசாமிக்கு சொந்தமான கரடுமுரடான கல் & சரளை குவாரி, பூமலூர் SFNo. 253/2B, 261/1பி1, 1சி1 & 2 (10.00 ஏக்கர்), சென்னியப்பனுக்கு சொந்தமான கரடுமுரடான கல் & சரளை குவாரி, SFNo.302/1A & 1B, 303/3A1& 2A2B(p), (03.00 ஏக்கர்) பரப்பளவில் முன்மொழியப்பட்ட கரடுமுரடான சரளை மற்றும் கல்குவாரி ஆகியற்றிற்கான கருத்துக்கேட்பு கூட்டம் பள்ளிபாளையம் ஸ்ரீ அம்மன் கலையரங்கத்தில் நடைபெற்றது.

மாவட்ட வருவாய் அலுவலர் மோகன சுந்தரம் மற்றும் மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் ( தெற்கு ) கோட்டபொறியாளர் சத்யன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் பொதுமக்கள், தமிழ்நாடு சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கம், தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் மற்றும் சட்டவிரோத கல் குவாரி எதிர்ப்பு இயக்கங்களை சேர்ந்த ஏராளமான நிர்வாகிகள் கலந்துகொண்டனர். காலை முதலே நடைபெற்ற கூட்டத்தில் பேசிய பலரும் கல்குவாரி அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து கருத்துக்களை பதிவு செய்தனர்.
இந்த கூட்டத்தில் முகிலன் ( சுற்றுச்சூழல் ஆர்வலர் ) கூறுகையில், குவாரி இருந்தால் குறிப்பிட்ட தூரத்திற்கு குடியிருப்பு, உயர் மின் கோபுரம், நீர் நிலைகள் இருக்க கூடாது என்ற விதிமுறை உள்ளது. ஆனால், ஆவணங்களில் இவற்றை மறைத்து அனுமதி வழங்கப்படுகிறது. அனுமதி கோரப்பட்டுள்ள குவாரிக்கு, 300 மீட்டரில், 9 வீடுகள் உள்ளன. விதிமுறை மீறலுக்கு ஆதரவாக குவாரியின் மையப்பகுதியில் இருந்து தவறாக அளவீடு செய்யப்படுகிறது. வி.ஏ.ஓ., ஆர்.ஐ., தாசில்தார் ஆவணங்களை மறைத்தாலும் ‘கூகுள்’ மறைக்காது. கைப்புண்ணுக்கு கண்ணாடி தேவையா ? வயநாடு, மியான்மரில் நடந்த சம்பவம் இங்கும் நடக்கும் அபாயம் உள்ளது என கூறினார்.

மேலும் பாலசுப்பிரமணியம் ( கிடாத்துறைபுதூர் ) கூறுகையில்,
கருத்து கேட்பு கூட்டம் நடத்துவதானால் எத்தனை நாட்களுக்கு முன் சொல்ல வேண்டும் ? என அதிகாரிகளிடம் வினா எழுப்பியவர், தான் முன்னாள் மக்கள் பிரதிநிதி எனவும், தனக்கே முதல்நாள் தான் தகவல் தெரியும். யாருக்கும் தெரிவிக்காமல் திருட்டுத்தனமாக கூட்டம் நடத்துகிறீர்களா ? யாருக்கும் பாதிப்பு இல்லாமல் தொழில் செய்தால் யார் கேள்வி கேட்பார்கள். உள்ளூர் மக்களுக்கு சொல்லாமல் வெளியூர் நபர்களை கொண்டு நடத்துவதுதான் கருத்து கேட்பு கூட்டமா ? என கேள்வி எழுப்பினார்.
ஈஸ்வரன் (மாவட்ட தலைவர், கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கம்) கூறுகையில்,
விவசாயிகளுக்கு பாதிப்பு என்றால் கருத்து கேட்பு கூட்டமே அவசியம் இல்லை. ஒரு தொழிலை விவசாயிகள் கெடுத்தார்கள் என்பது சரியாக இருக்காது. ஆய்வு செய்து கனிம வள கடத்தலை தடுப்பதுடன், விதிமுறை மீறாமல் தொழில் நடப்பதை உறுதி செய்ய வேண்டும். கருத்து கேட்டபின் கருத்துக்களுக்கு முழுமையான செயல்வடிவம் தர வேண்டும் என வலியுறுத்தினார்.

ராமாத்தாள் (பூமலூர்) பேசுகையில்,
கல்குவாரி தொழிலால் ஆடு மாடுகள், விவசாய தொழில் கடுமையாக பாதிக்கப்படுவதாகவும், குவாரிக்கு அருகிலுள்ள தோட்டத்தில் உள்ளவர்களிடம் கருத்துக்கள் பெறாமல், எங்கோ உள்ளவர்களிடம் அதிகாரிகள் கருத்து பெறுகின்றனர் ? இதுதான் அதிகாரிகள் செய்யும் வேலையா ? என கூறினார்.
விஸ்வநாதன் ( தேவராயம்பாளையம் ) குவாரிகளால் முற்றிலும் பாதிப்பு இல்லை என்றும் சொல்ல முடியாது. ஆனால், குவாரியே வேண்டாம் என்றால் எதை பயன்படுத்தி வீடு, கட்டடங்கள் கட்டுவது? ரோடு போடுவோம் என்பதை சிந்திக்க வேண்டும். குவாரிகளில் இருந்துதான் அனைத்து கட்டுமான மூலப்பொருட்களும் கிடைப்பதால். அனுமதி மறுப்பது தவறு. வரைமுறைக்கு உட்பட்டு குவாரிகள் பாதுகாப்புடன் செயல்பட அனுமதி வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.
பெரும்பாலான கருத்துக்கள் கல்குவாரிக்கு எதிர்ப்பாக பதிவு செய்திருக்கும் நிலையில் கல்குவாரி கருத்துக்கேட்பு கூட்டம் கண்துடைப்புக்காக நடத்தப்படுவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.