தமிழகம்

5 கோடி மதிப்பிலான போதைப் பொருட்கள், செம்மரக்கட்டைகள் : சர்வதேச கடத்தல் கும்பல் கைது

ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி கடற்கரை பகுதியில் இருந்து இலங்கைக்கு கடல் வழியாக படகில் போதைப் பொருட்கள் கடத்த இருந்த போது ராமநாதபுரம் மாவட்ட எஸ்பி வருண் குமாருக்கு வாட்ஸ்அப் தொலைபேசி எண்ணில் ரகசிய தகவல் கிடைத்தது.

தகவலை தொடர்ந்து ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள சிறப்பாக பணியாற்றக்கூடிய தனிப்படை அடங்கிய ஒரு குழுவை தொண்டி டிஎஸ்பி புகழேந்தி தலைமையில் உருவாக்கினார். அதில் தமிழக கடற்கரை பகுதிகளில் ரகசிய கண்காணிப்பு செய்யப்பட்டது. இதில் ராமநாதபுரம் பகுதியில் இருந்து தொண்டி வரக்கூடிய புறவழிச்சாலை பகுதியில் ஒரு நபர் தொலைபேசி மூலம் கடத்தல் கும்பலிடம் உரையாடுவது குறித்த செல்போன் ரகசிய தகவல் கிடைத்தது. அதனை தொடர்ந்து போலீஸ் அதிரடி படையினர் தொண்டி பகுதியில் பதுங்கியிருந்த 9 நபர்களையும் அவர்கள் வைத்திருந்த ஹெராயின், மெத்தகோலன், சுமார் 20 டன் செம்மரக்கட்டை உள்ளிட்ட பல்வேறு விதமான கடத்தல் பொருட்களையும் 20க்கும் மேற்பட்ட செல்போன்கள் ரூபாய் இரண்டு லட்சம் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்த இருந்த ஆட்டோ, பைக் ஆகியவையும் தனிப்படை குழுவினர்கள் அதிரடியாக பறிமுதல் செய்து 9 நபர்களையும் கைது செய்தனர்.

இது தொடர்பாக ராமநாதபுரம் எஸ்.பி வருண் குமார் திருவாடனை காவல் நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது கூறுகையில், தற்போது ராமநாதபுரம் மாவட்டத்தில் கைது செய்யப்பட்ட ஒன்பது நபர்கள் பல்வேறு குற்ற வழக்குகளில் ஏற்கனவே தொடர்புடையவர்கள் ஊரடங்கு உத்தரவு இருக்கும்போது போலீசாரை திசை திருப்பி விட்டு கடத்தல் கும்பல் கடத்தி இருந்தது குற்ற நடவடிக்கைகளில் தெரியவந்துள்ளது இவர்கள் கடற்கரை பகுதியில் இருந்து கடல் வழியாக இலங்கைக்கு பல்வேறு பொருட்களை கடத்த இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது ஒரு சர்வதேச கடத்தல் கும்பலாக கருதப்படுகிறது. அனைவரும் வெளி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள். இந்த குற்றம் நிரூபிக்கப்பட்டால் சுமார் 20 ஆண்டுகள் வரை கடுங்காவல் சிறை தண்டனை கிடைக்கும். இதுபோன்ற சம்பவங்களில் யாரும் ஈடுபடக்கூடாது என்றும் எச்சரிக்கை விடுத்தார்.

ராமநாதபுரம் மாவட்ட காவல் துறையின் நடவடிக்கைகள் ஒருபுறம் இருந்தாலும் மற்றொருபுறம் இலங்கைக்கு கடத்தல் சம்பவம் அதிகரித்து வருகிறது.

ராமநாதபுரம் மாவட்டத்திலிருந்து சமீபகாலமாக கடற்கரை பகுதிகளில் மீனவர்களின் போர்வையில் இலங்கைக்கு பல்வேறு பொருட்களை கொண்டு செல்வதும் அங்கிருந்து தங்க கட்டிகள் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை கடத்தி வந்து தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் விற்பனை செய்து வரும் சர்வதேச கூலிப்படையினர் தொடர்ச்சியாக பல்வேறு சம்பவங்களை அரங்கேற்றி வருகின்றனர். ஊரடங்கு உத்தரவால் பொதுமக்களுக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் சர்வதேச கடத்தல் கும்பலுக்கு கட்டுப்பாடுகள் இல்லையா என்பதே காவல்துறைக்கு வெளிச்சம்.

மேலும் ஊரடங்கு உத்தரவை பயன்படுத்தி போலி பாஸ் மூலம் பல்வேறு கடத்தல் பொருட்களை சிறுகச்சிறுக திருவாடனை பகுதியில் சேகரித்து வைத்து அங்குள்ள படகு மூலம் கடலில் இலங்கைக்கு கடத்த இருந்த கடத்தல் பொருளுடன் சர்வதேச கும்பல் பிடிபட்டது இதுவே முதல் முறையாகும். கடத்தும் பொருளை விட்டுவிட்டு கடத்தல்காரர்கள் தப்பி ஓடுவது தான் எப்போதும் உள்ள நிகழ்வு கடத்தல்காரர்களை போலீசாரும் பிடித்திருப்பது உயர் அதிகாரிகளே பாராட்டியுள்ளனர்.

கடத்தல் பொருட்கள் எந்தெந்த மாநிலத்தில் இருந்து வாங்கப்பட்டது? யாருக்காக கடத்த இருந்தனர்? இதில் அரசியல் முக்கிய புள்ளிகள் உள்ளார்களா? என்பது பற்றி காவல்துறை தீவிரமாக செயல்பட்டு முக்கிய குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

  • ராஜா

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button