தமிழகம்

லட்சக்கணக்கில் குவிந்த பட்டாசுத் தொழிலாளர்கள்..! : திணறிய விருதுநகர்

நாடு முழுவதும் சுமார் 1,500 பட்டாசு ஆலைகள் உள்ளன. அவற்றில், விருதுநகர் மாவட்டத்தில் மட்டும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகள் உள்ளன.

விவசாயம் பொய்த்துப்போன விருதுநகர் மாவட்டம் மற்றும் பக்கத்து மாவட்ட மக்களுக்கு சிவகாசி பட்டாசு ஆலைகளே பிரதான வாழ்வாதாரம். ஆனால், பட்டாசு தயாரிப்பது மற்றும் வெடிப்பது தொடர்பாக உச்ச நீதிமன்றம் பிறப்பித்த பல்வேறு கட்டுப்பாடுகளால் சிவகாசியில் ஒட்டுமொத்த பட்டாசு ஆலைகளும் கடந்த ஒன்றரை மாதமாக மூடிக்கிடக்கின்றன. சுமார் எட்டு லட்சம் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளது. பட்டாசுத் தொழிலைச் சார்ந்த அட்டைப் பெட்டிகள் தயாரித்தல், காகிதக்குழாய் தயாரித்தல், ஆப்செட் பிரின்டிங் உட்பட வேறு பல தொழில்களும் பாதிக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில்தான், பட்டாசுத் தொழிலைப் பாதுகாக்கவும், பட்டாசு ஆலைகளை உடனே திறக்கவும் மத்திய, மாநில அரசுகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, விருதுநகரில் கலெக்டர் அலுவலகம் முன்பாக பட்டாசுத் தொழிலாளர்கள் தங்கள் குடும்பத்தினருடன் டிசம்பர் 21-ம் தேதி முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்படியொரு போராட்டத்தை இதுவரை விருதுநகர் கண்டதில்லை. லட்சக்கணக்கில் தொழிலாளர்கள் திரண்ட அந்தப் போராட்டத்தால், விருதுநகர் அதிர்ந்தது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு, சி.ஐ.டி.யூ தலைவர் அ.சவுந்தரராசன் உள்ளிட்டோர் தலைமை தாங்கினர்.

நல்லகண்ணு பேசுகையில், ‘‘விருதுநகர் மாவட்டத்தில் தீப்பெட்டி தொழில் ஏற்கெனவே அழிந்துவிட்டது. தற்போது பட்டாசுத் தொழிலும் அழியும் நிலையில் உள்ளது. மக்கள் விரும்பாத ஸ்டெர்லைட் ஆலையைத் திறப்பதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படுகிறது. ஆனால், மக்களின் வாழ்வாதாரத்தைக் காக்கும் பட்டாசு ஆலைகளைத் திறக்க எந்த நடவடிக்கையும் இல்லை. பட்டாசுத் தொழிலைப் பாதுகாக்க மத்திய அரசை, மாநில அரசு வலியுறுத்த வேண்டும். உச்ச நீதிமன்றத் தீர்ப்பை மறு பரிசீலனை செய்ய வேண்டும். மாசுக் கட்டுப்பாடு வாரியத்தில், பட்டாசுத் தொழிலுக்கு விலக்கு அளிக்க வேண்டும்’’ என்றார்.

போராட்டத்தை ஆதரித்துப் பேசிய அமைச்சர் ராஜேந்திரபாலாஜி, ‘‘நானும் சிறுவயதில் பட்டாசு ஆலையில் வேலை செய்தவன்தான். உங்களில் ஒருவனாக, பட்டாசுத் தொழிலைப் பாதுகாக்கப் பாடுபடுவேன். உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி, பசுமைப் பட்டாசு தயாரிக்க முடியாது என்பதால், மாவட்டத்தின் பிரதானத் தொழிலான பட்டாசுத் தொழில் முடங்கிக்கிடக்கிறது. பட்டாசு ஆலைகளைத் திறக்க சட்டரீதியான போராட்டங்கள் நடத்தி வருகிறோம். பேரியம் நைட்ரேட் இல்லாமல் எப்படி பட்டாசுத் தயாரிக்க முடியும் என்பதை, அறிவியல்ரீதியாக மத்திய அரசு தெளிவுபடுத்த வேண்டும்’’ என்றார்.

சி.ஐ.டி.யூ தலைவர் அ.சவுந்தரராசன், “பட்டாசு ஆலைத் தொழிலாளர்கள் பசி, பட்டினியால் குடும்பத்துடன் தவிக்கிறார்கள். பட்டாசுத் தொழில் அழிந்தால், ஆண்டுக்கு ரூ.6,000 கோடி இழப்பு ஏற்படும். இது தமிழ்நாட்டின் ஒட்டுமொத்தப் பொருளாதார அழிவாக மாறும்’’ என்று எச்சரித்தார்.

பட்டாசுத் தொழிலாளர்களின் பிரச்னை குறித்து, மதுரை வந்திருந்த மத்திய இணை அமைச்சர் பொன்.ராகிருஷ்ணனிடம் கேட்டபோது, ‘‘பட்டாசுத் தொழிலாளர்களின் பிரச்னையில் மத்திய அரசு கவனம் செலுத்தி நல்ல முடிவு எடுக்கும்’’ என்று கூறினார்.

– மதுரை உசேன்

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button