கூலி தொழிலாளி மீது போலீசாரின் கொடூர தாக்குதலால் எலும்பு முறிவு! : மனித உரிமை ஆணையத்தில் பரபரப்பு புகார்!!
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்துள்ளது தெற்குபாளையம். இங்கு குடியிருந்து வருபவர் அருண்பிரசாத் (35). திருமணம் ஆன நிலையில் மனைவியை பிரிந்து தனது மாற்று திறனாளி தந்தை பொன்னுசாமி மற்றும் தாயார் லட்சுமியுடன் அங்குள்ள அரிசன காலனியில் குடியிருந்து வருகிறார். இந்நிலையில் கடந்த சில மாதங்களாக அருகில் குடியிருந்து வரும் மூதாட்டிக்கும் இவருக்கும் பிரச்சனை இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் மூதாட்டி பல்லடம் காவல் நிலையத்தில் அருண்பிரசாத் மீது புகார் அளித்துள்ளார்.
புகாரின் பேரில் கடந்த ஆகஸ்ட் 25 ஆம் தேதி காலை சுமார் 6.30 மணிக்கு வீட்டிற்கு சென்ற காவலர்கள் அருண்பிரசாத்தை ஆய்வாளர் அழைப்பதாக கூறி காவல் நிலையம் அழைத்து வந்துள்ளனர். பின்னர் அங்கு பணியில் இருந்த காவலர் ஜெகநாதன் ஜாதி பெயரை கூறி அருண்பிரசாத்தை தரையில் அமரவைத்துள்ளார். பின்னர் காலை 10 மணிக்கு காவல் நிலையம் வந்த ஆய்வாளர் லெனின் அப்பாதுரை காவலர்கள் குமரேசன், அருண் ஆகியோரிடம் இவனை மேல கூட்டிட்டு போய் சர்வீஸ் பண்ணி கூட்டிட்டு வாங்க என கூறினார். பின்னிட்டு அருண்பிரசாத்தை மாடிக்கு அழைத்துச்சென்ற போலீசார் பிளாஸ்டிக் பைப் கொண்டு தாக்கியுள்ளனர்.
பின்னர் எழுந்து நிற்கச்சொல்லியும், நடக்கச்சொல்லியும் பார்த்துவிட்டு குதிக்க சொல்லிவிட்டு, பின்னர் கையை நீட்டச்சொல்லி தாக்கியுள்ளனர். அதன்பிறகு வலி தாங்க முடியாமல் கதறிய அருணை கீழே அழைத்து வந்து ஆய்வாளர் லெனின் அப்பாதுரையிடம் ஆஜர்படுத்தியுள்ளனர். அப்போது அங்கு வந்த தந்தை பொன்னுசாமியிடம் தன்னை தாக்கியதாக கூறி அழுதுள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த பொன்னுசாமி ஆய்வாளரிடம் ஏன் விசாரிக்காமல் அடித்தீர்கள் என கேட்டுள்ளார். அதற்கு உனக்கு வாய் கொழுப்பு என கூறியதோடு திரும்பவும் சுமார் 2 மணி நேரம் தரையில் அருண்பிரசாத்தை அமரவைத்துள்ளனர். பின்னிட்டு தைராய்டு நோயினால் பாதிக்கப்பட்டு மருந்து எடுத்து வந்த நிலையில், அதற்கும் போலீசார் அனுமதிக்கவில்லை. பின்னிட்டு மன்னிப்பு கடிதம் வாங்கிவிட்டு அனுப்பிவிட்டனர்.
இதனை அடுத்து பல்லடம் அரசு மருத்துவமனைக்கு சென்ற அருண்பிரசாத் நடந்தவற்றை மருத்துவர்களிடம் கூறி சிகிச்சை அளிக்க கூறியுள்ளார். ஆனால் சிகிச்சை அளிக்க மறுத்ததோடு எலும்பு டாக்டர் இல்லை என கூறி அனுப்பியுள்ளனர். பின்னர் திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு சென்று எக்ஸ்ரே எடுத்து பார்த்ததில் சுண்டு விரல் எலும்பு முறிந்துள்ளது தெரியவந்தது. இதனை அடுத்து தனிப்பிரிவு போலீசாருக்கு தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து கூறியுள்ளார். பின்னர் தன்னை விசாரிக்காமல் கடுமையாக தாக்கி காயம் ஏற்படுத்திய போலீசார் மீது நடவடிக்கை எடுக்க கோரி மனித உரிமை ஆணையத்தில் புகார் மனு அளித்துள்ளார். இதனிடையே தலித் இளைஞர் அருண்பிரசாத் மீது போலீசார் விசாரணை செய்யாமல் தாக்குதல் நடத்தியதில் எழும்பு முறிவு ஏற்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.