தமிழகம்

சிதம்பரம் நடராஜர் கோவில் : அறநிலையத்துறை Vs தீட்சிதர்கள்

சிதம்பரத்தில் உள்ள பிரசித்தி பெற்ற நடராஜர் கோவிலின் கணக்குகளை ஆய்வு செய்வதற்காக இந்து சமய அறநிலையத் துறையின் அதிகாரிகள் சில நாட்களுக்கு முன் சென்றபோது, அவர்களுக்கு கணக்குகளைக் காட்டுவதற்கு அங்கிருந்த தீட்சிதர்கள் மறுத்துவிட்டனர். இரண்டாவது நாளாக மீண்டும் ஆய்வை மேற்கொள்ள அறநிலையத் துறை முயற்சித்தது. தீட்சிதர்கள் அதற்கு அனுமதிக்கவில்லை. கண்டிப்பாக ஆய்வுகளை நடத்தியே தீருவோம் என்கிறது அறநிலையத் துறை. ஆனால், இந்தக் கோவில், தீட்சிதர்களின் கட்டுப்பாட்டில் உள்ள கோவில், இதில் ஆய்வு நடத்த அறநிலையத் துறைக்கு அதிகாரம் இல்லை என்கிறார்கள் தீட்சிதர்கள்.

வைணவர்கள் ‘கோவில்’ என்று குறிப்பிட்டால், அது திருவரங்கம் ரங்கநாதசுவாமி கோவிலைக் குறிப்பதைப்போல, சைவர்கள் ‘கோவில்’ என்று குறிப்பிட்டால் அது சிதம்பரம் நடராசர் கோவிலையே குறிக்கும். அப்பர், சுந்தரர், சம்பந்தர், மாணிக்கவாசகர் என சைவ சமய குரவர்கள் நால்வராலும் பாடப்பட்ட கோவில் இது. ஒரே தருணத்தில் கட்டப்படாமல், பல்வேறு காலகட்டங்களில் பல்வேறு அரசர்களால் கட்டப்பட்டு தற்போதைய நிலையை அடைந்துள்ளது இந்தக் கோவில். தேவாரப் பாடல்கள் இந்தக் கோவிலில்தான் பூட்டி வைக்கப்பட்டிருந்து, ராஜராஜ சோழன் காலத்தில் மீட்கப்பட்டதாக சொல்லப்படுவதுண்டு.

ஆனால், இந்தக் கோவில் மீதான தங்கள் அதிகாரம் குறித்து தீட்சிதர்கள் நீண்ட காலமாகவே வழக்குகளைத் தொடுத்து, வாதாடி, வந்துள்ளனர்.

பல ஆண்டுகளுக்குப் பிறகு, 1982இல் அப்போதைய ஆணையர் யு. சுப்பிரமணியம் அந்தக் கோவிலில் பல்வேறு முறைகேடுகள் இருப்பதாகக் கூறி, ஏன் செயல் அலுவலரை நியமிக்கக்கூடாது என கேள்வியெழுப்பினார். இதனை எதிர்த்து, தீட்சிதர்கள் நீதிமன்றம் சென்றனர். 1987இல் ஜூலையில் புதிதாக நிர்வாக அதிகாரியும் நியமிக்கப்பட்டார்.

இதனை எதிர்த்து 2004ஆம் ஆண்டில் துறையின் செயலரிடம் தீட்சிதர்கள் மேல் முறையீடு செய்தனர்.

இந்த முறையீடு 2006ஆம் ஆண்டில் பிறப்பிக்கப்பட்ட ஒரு அரசாணையின் மூலம் நிராகரிக்கப்பட்டது. இதை எதிர்த்து தீட்சிதர்கள் உயர் நீதிமன்றத்தை நாடினர். அந்த மனுவை நீதிபதி பானுமதி 2009ல் தள்ளுபடி செய்தார். அந்தத் தீர்ப்பில், தீட்சிதர்கள் தனி சமயப் பிரிவினரா என்பது குறித்தும் கேள்வி எழுப்பப்பட்டது.

ஆனால், இதனை தீட்சிதர்கள் ஏற்கவில்லை. 1951லேயே தாங்கள் தனி சமயப் பிரிவினர் என உச்ச நீதிமன்றம் ஒப்புக்கொண்டுவிட்ட நிலையில், அந்த விவகாரம் குறித்து விவாதிக்க ‘முன் தீர்ப்புத் தடை’ (Res Judicata) இருக்கிறதெனக் கூறி, இரு நீதிபதிகள் அடங்கிய அமர்வில் மேல் முறையீடு செய்தனர். அந்த அமர்வும், தீட்சிதர்களுக்கு எதிராகத் தீர்ப்பளித்தது. அரசியல் சட்டப்பிரிவு 26ஐ ஆராய்ந்த நீதிபதிகள், வழிபாடு நடத்தத்தான் உரிமை உள்ளதே தவிர, சொத்துக்களை நிர்வகிப்பது சட்டப்படிதான் நடக்க வேண்டும் என்றனர். தீட்சிதர்களின் மேல் முறையீடு தள்ளுபடி செய்யப்பட்டது.

இதற்கிடையில், கோவிலுக்கு செயல் அலுவலர் நியமிக்கப்பட்டார். கோவில் நிர்வாகம் செயல் அலுவலரின் கீழ் வந்தது. உயர் நீதிமன்றம் தங்கள் வழக்கைத் தள்ளுபடி செய்ததை எதிர்த்து மூன்று தரப்பினர் உச்ச நீதிமன்றத்தை நாடினர். தீட்சிதர் தரப்பு, தீட்சிதர்களுக்கு ஆதரவாக ஒருவர், பாரதிய ஜனதா கட்சியின் தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணியன் சுவாமி என மூன்று மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன.

இந்த மனுக்களை உச்ச நீதிமன்றம் ஒன்றாக விசாரித்தது. 2014ஆம் ஆண்டு ஜனவரி ஆறாம் தேதி இந்த வழக்கில் தீர்ப்பளிக்கப்பட்டது.

“கோவில் நிர்வாகத்தில் தவறுகள் இருந்தால், அவற்றைச் சரிசெய்வதற்காக அரசு எடுத்துக் கொண்டால், தவறுகள் சரிசெய்யப்பட்ட பிறகு, அதனை உரியவர்களிடம் ஒப்படைத்துவிட வேண்டும். ஆனால், தற்போது செயல் அலுவலரை நியமிக்கும் அரசாணையில், அவருக்கான கால வரையறை இல்லாததால், அந்த உத்தரவு செல்லாது” என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்த உத்தரவின் அடிப்படையிலேயே தற்போது தீட்சிதர்கள் கோவிலை நிர்வகித்து வருகின்றனர்.

இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகளை அனுமதிக்காதது குறித்து, தீட்சிதர்கள் தரப்பு வழக்கறிஞரான சந்திரசேகர் கூறும்போது, உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பின்படி கோவிலில் ஆய்வு செய்ய அறநிலையத் துறைக்கு அனுமதி கிடையாது என்று தெரிவித்தார். “உச்ச நீதிமன்றம் 2014ஆம் ஆண்டு அளித்த தீர்ப்பின்படி, தீட்சிதர்கள் தனி சமயப் பிரிவு என அங்கீகரிக்கப்பட்டுள்ளனர்” என்றார்.

ஆனால், 2014ஆம் ஆண்டின் தீர்ப்பின்படி, தவறு நடப்பதாக தகவல் வந்தால், ஆய்வு நடத்த அறநிலையத் துறைக்கு அனுமதி உண்டுதானே என்று கேட்டபோது, “ஏன் அது பொருந்தாது என்பதை விளக்கி 14 பக்கத்திற்கு அவர்களுக்கு விளக்கம் கொடுத்திருக்கிறோம். இருந்தபோதும் அதை ஏற்காமல் ஆய்வுசெய்வேன் என்கிறார்கள்.

கனக சபையில் நின்று பாடுவதற்கு பக்தர்களை அனுமதிக்க வேண்டுமென ஒரு அரசாணையை வெளியிட்டு, உடனடியாக அதனை செயல்படுத்த வேண்டுமென வற்புறுத்துகிறார்கள்” என்றார்.

இது குறித்து இந்து சமய அறநிலையத் துறையின் இணை ஆணையர் அசோக்குமார் கூறும்போது, “அவர்கள் கணக்குகளைக் காட்ட மறுக்கிறார்கள். அவர்கள் அப்படி மறுக்க முடியாது. இனி சட்ட ரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்வோம்” என்று தெரிவித்திருக்கிறார்.

சிதம்பரம் நடராஜர் கோவிலைப் பொறுத்தவரை, சர்ச்சைகளோ, வழக்குகளோ புதிதல்ல. இரு தரப்பும் தங்கள் நிலைப்பாட்டில் பிடிவாதமாக இருக்கும் நிலையில், இந்தப் பிரச்னை இப்போதைக்குத் தீர்வதைப் போல தெரியவில்லை.

நமது நிருபர்

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button