தமிழக சட்டசபையில் மறைந்த முன்னாள் முதல்- அமைச்சரும், திருவாரூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான கருணாநிதி மறைவுக்கு இரங்கல் தெரிவித்து, தீர்மானத்தை வாசித்த துணை முதலமைச்சர் ஒ.பன்னீர்செல்வம் “மனஉறுதி கொண்டவர், எழுத்தாளர், பேச்சாளர், தமிழ் பற்றாளர், அழகு தமிழால் அனைவரையும் அரவணைத்தவர், அரசியல் மாற்று கருத்து கொண்டவர்களையும் அவரது தமிழால் ஆட்கொண்டவர் கருணாநிதி. 94 ஆண்டுகள் நாட்டுக்காகவும், கட்சிக்காகவும் உழைத்தவர். கருணாநிதியின் மறைவு தமிழகத்துக்கு ஈடு செய்ய முடியாத இழப்பு.
சுதந்திர தினத்தன்று, முதல்வர்கள் தேசிய கொடியை ஏற்றும் உரிமையை பெற்றுத்தந்தவர். சமூக நீதிக்காக போராடியவர். அரசியலுக்கு அப்பாற்பட்டு எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் கருணாநிதி மீது அளவற்ற பற்று கொண்டவர். ஒரு நிமிடத்தில் சட்டசபையை கலகலப்பாக ஆக்க கூடியவர். பச்சை தமிழர் பன்னீர்செல்வம் என முரசொலியில் கருணாநிதி கூறியது இன்றும் என் மனதில் பசுமையாக உள்ளது” என்று புகழாரம் சூட்டினார்.
இதையடுத்து சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவரும், தி.மு.க. பொருளாளருமான துரைமுருகன் பேசும்போது, “கலைஞர் கருணாநிதி ஒரு தனி மனிதரல்ல. அவர் ஒரு பன்முக தோற்றம் கொண்டவர்.
அவர் மொத்தம் வாழ்ந்த நாட்கள் 34,258. அதாவது 95 ஆண்டு காலம். அவர் சட்டமன்றத்தில் பணியாற்றிய நாட்கள் 20,411. அதாவது 56 ஆண்டுகள். வாழ்ந்த 95 ஆண்டு காலத்தில் 56 ஆண்டு காலம் இந்த அவையிலேயே கழித்தவர். தான் வாழ்ந்த நாட்களில் பாதி நாட்களுக்கு மேல் இந்த அவையிலேயே கழித்திருக்கிறார்.
13 தேர்தல்களில் நின்றவர், வென்றவர். எதிர்க்கட்சி உறுப்பினராக இருந்தவர், எதிர்க்கட்சி கொறடாவாக இருந்தவர். எதிர்க்கட்சி தலைவராக இருந்தவர். அவர் முதல்-அமைச்சராக இருந்த நாட்கள் 6,163 நாட்கள். 49 ஆண்டுகள் கட்சியினுடைய தலைவராக இருந்தார். ஆக, அவர் வாழ்க்கை முழுவதும் மக்களோடு ஒன்றியிருந்து பணியாற்றியுள்ளார். கருணாநிதி தனது காலத்தில் வரலாற்று சிறப்புமிக்க, இன்னும் நூறாண்டுகள் ஆனாலும் நினைத்து பார்க்கக்கூடிய சாதனைகளை எல்லாம் செய்திருக்கிறார்.
மதராஸ் என்று இருந்ததை சென்னை என்று பெயர் மாற்றியிருக்கிறார். ஆகஸ்டு 15-ந் தேதி எல்லா மாநில முதல்-அமைச்சர்களும் தேசிய கொடியை ஏற்றும் உரிமையை பெற்றுத்தந்தவர் கருணாநிதி.
தமிழ்நாட்டில் தமிழ் மொழிக்கு ஒரு வாழ்த்து பாடல் இல்லை என்று கேட்டபோது, மனோன்மணியம் சுந்தரனார் பாடலில் இருந்து “நீராரும் கடலுடுத்த…” என்ற பாடலை கலைஞர் கருணாநிதி தந்தார். தமிழுக்கு செம்மொழி அந்தஸ்தை பெற்றுத்தந்தவர் கருணாநிதி.
மத்தியிலே கூட்டாட்சி, மாநிலத்தில் சுயாட்சி என்ற தத்துவத்தை நிலைநாட்டுவதற்காக, மாநில சுயாட்சியை இந்தியா முழுவதும் கொண்டுவந்து சேர்த்தவர் கருணாநிதி. பெண்களுக்கு சொத்தில் சமபங்கு உண்டு என்ற சட்டத்தை போட்டவர் அவர். உள்ளாட்சியில் பெண்களுக்கு 33 சதவீதம் இடஒதுக்கீடு கொண்டுவந்தவர் கருணாநிதி.
உயர்நீதிமன்றம் தொடங்கிய 125 ஆண்டு காலத்தில், ஒரு தாழ்த்தப்பட்டவர் கூட நீதிபதியாக இருந்ததில்லை. அதை மாற்றி ஜோலார்பேட்டையில் இருந்து வரதராஜன் என்பவரை கொண்டு வந்து நீதிபதியாக்கிய பெருமை கருணாநிதியையே சாரும். அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற சட்டத்தை கொண்டு வந்தவரும் அவர் தான். பஸ்களை தேசிய மயமாக்கியவரும் அவர் தான். மத்தியில் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களுக்காக மண்டல் கமிஷனை கொண்டுவர துணையாக இருந்தவர் கருணாநிதி. மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையாக மாநில அரசு ஊழியர்களுக்கும் சம்பளத்தை உயர்த்தியவர் கருணாநிதி. இப்படி பல திட்டங்களை நிறைவேற்றியவர் அவர்.
எனக்கு ஒரு வருத்தம். காரணம், சாதாரண குடியானவரின் மகனாக இருந்த என்னை இந்த நிலைக்கு உயர்த்தியவர் கருணாநிதி. எனக்கு சென்னை தெரியாது. பச்சையப்பன் கல்லூரியில் படிக்க சேர்ந்தபோது வழிதெரியாமல், அண்ணா மேம்பாலத்தில் இருந்து தகரப்பெட்டியை தலையில் வைத்துக்கொண்டு, ஒவ்வொருவரிடமும் கேட்டுக்கொண்டே பச்சையப்பன் கல்லூரி போய் சேர்ந்தேன்.
அப்படியிருந்த என்னை, நீ என்ன சாதி?, பணக்காரனா?, ஏழையா? என்று பார்க்காமல், என்னை தத்தெடுத்த பிள்ளையாக நினைத்து, 40 ஆண்டு காலத்திற்கு மேலாக இந்த அவையில் என்னை உட்கார வைத்து, 10, 15 ஆண்டு காலம் அமைச்சராக்கியவர் கருணாநிதி.
இவ்வாறு துரைமுருகன் பேசிக் கொண்டிருந்தார். தொடர்ந்து அவர் தழுதழுத்த குரலில் கண்ணீர் விட்டு அழுதபடி பேசினார். அப்போது அவர், “எனக்கு ஒரேயொரு ஆசை உண்டு. அந்த ஆசை 2007-ம் ஆண்டு நிறைவேறியிருக்க வேண்டும். ஒருவருக்கு அப்பா, அம்மா ஒருமுறை தான் உயிர் கொடுப்பார்கள். ஆனால், எனது தலைவர் எனக்கு 2-வது முறையாகவும் உயிர் கொடுத்தார். எனக்கு அறுவை சிகிச்சை. அறுவை சிகிச்சைக்கு முந்தைய நாள் தலைவர் கருணாநிதி எனக்கு போன் செய்து, துரை தூங்கிவிட்டாயா?, அல்லது பயப்படுகிறாயா?, காலையில் ஆபரேஷன்?, எனக்கு தெரியும்டா.. நீ கோழை, அப்படியே இரு.. நான் வந்து உன்னுடன் அறையில் தங்கிவிட்டு, காலையில் உன்னை ஆபரேஷன் தியேட்டருக்கு அழைத்து சென்றதும் செல்கிறேன் என்று கூறினார். என் பிணத்தின் மீது எனது தலைவரது கண்ணீர் பட்டால் அதுவே நான் பெற்ற பேறு என்று நினைத்திருந்தேன். அப்போதே நான் மறைந்திருந்தால், எனது தலைவர் கண்ணீர் சிந்தியிருப்பார். ஆனால், துரதிர்ஷ்டம். எனது தலைவர் பிணத்தின் மீது நான் கண்ணீர் சிந்த வேண்டிய நிலை வந்துவிட்டதே. கடைசி வரை எனது ஆசை நிறைவேறவில்லையே” என்று கண்ணீர் விட்டு அழுதார்.
இருக்கையில் அமர்ந்து கண்ணீர் வடித்த அவருக்கு அருகில் இருந்த எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் ஆறுதல் கூறினார். அப்போது, தி.மு.க. உறுப்பினர்கள் பலரும் கண்ணீர் விட்டு விம்மி அழுதனர். இதனால் அவையே நிசப்தமானது. சற்று நேரத்தில், அவை இயல்பு நிலைக்கு திரும்பியது.
இதையடுத்து உரை நிகழ்த்திய முதலமைச்சர் பழனிச்சாமி, 5 முறை தமிழக முதல்வராக பணியாற்றி பல சாதனைகளை படைத்தவர் கலைஞர் என புகழாரம் சூட்டினார். இந்தி மொழி திணிப்பை எதிர்த்து 13 வயதிலேயே போராடியவர் என தமிழக சட்டப்பேரவையில் கலைஞர் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து பேசினார்.