தமிழகம்

கடன்மோசடிக் கும்பல் கைது -: சென்னை காவல்துறை நடவடிக்கை..!

வீட்டில் இருக்கும் பொது மக்களிடம் செல்பேசியில் தொடர்பு கொள்ளும் மோசடிக் கும்பல் புகழ்பெற்ற நிறுவனங்களின் பெயரைச் சொல்லிக் குறைந்த வட்டிக்கு கடன் தருவதாகக் கூறி அதற்குக் குறிப்பிட்ட தொகையை அவர்களின் வங்கிக் கணக்கில் இருப்பு வைக்க வேண்டும் என்று தெரிவிக்கின்றனர்.

அவர்களது வங்கிக் கணக்கு விவரங்களைப் பெற்றுக்கொள்ளும் இந்த மோசடிக் கும்பல் அந்தக் கணக்கில் உள்ள தொகையை நூதன முறையில் தங்கள் கணக்குக்கு மாற்றி விடுகிறது. அவர்கள் சொல்லும் வங்கிக் கணக்குக்குக் குறிப்பிட்ட தொகையைச் செலுத்தினால் கடன் கிடைக்கும் எனக் கூறுவதையும் நம்பிப் பலரும் பணம் செலுத்தி ஏமாந்துள்ளனர்.

ஊரடங்கு காலத்தில் இதுபோன்ற மோசடிகள் குறித்துப் புகார்கள் குவிந்தன. இதையடுத்துச் சென்னை மத்தியக் குற்றப்பிரிவில் உள்ள வங்கி மோசடி தடுப்புப் பிரிவு உதவி ஆணையர் தலைமையில் தனிப்படை அமைத்து விசாரித்ததில் இந்தக் கும்பல் டெல்லியில் இருந்து செயல்பட்டு வருவது தெரிந்தது.

இதையடுத்து டெல்லிக்கு விரைந்த தனிப்படையினர் ஜனக்புரியில் போலியாக கால் சென்டர் நடத்தி வந்த அசோக்குமார், அவர் மனைவி காமாட்சி, அவர்களுக்கு உடந்தையாக இருந்த ராஜவேல் மற்றும் அபிஷேக்பால் ஆகிய 4 பேரைக் கைது செய்தனர். டெல்லிவாழ் தமிழர்களான இவர்களிடம் இருந்து, 8 லட்ச ரூபாய் பணம், நூற்றுக்கணக்கான சிம்கார்டுகள் மற்றும் செல்போன்களையும் பறிமுதல் செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் தமிழகம், கேரளம், ஆந்திர மாநிலங்களில் பொதுமக்களிடம் நூதன முறையில் கோடிக்கணக்கில் கொள்ளை அடித்திருப்பது தெரியவந்தது.

ஜியோ நிறுவனத்தின் டவர் நிறுவுவதாகக் கூறியும் நூற்றுக்கணக்கானோரிடம் மோசடி செய்திருப்பதாகவும் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து 4 பேரையும் துவாரகா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி விமானம் மூலம் சென்னைக்குக் கொண்டு வந்து விசாரித்து வருகின்றனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button