மதவெறிப் பேச்சுக்களை உடனடியாக நிறுத்த வேண்டும்… : எச்சரிக்கும் ‘திமுக’ முரசொலி
தமிழக அரசு தொடர்பாக மதுரை ஆதினம் பல்வேறு விமர்சனங்களை வைத்து வருகிறார். அறநிலையத்துறை மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளதோடு அதனை கலைக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார். இந்நிலையில், மதுரை ஆதினத்தை விமர்சித்து திமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலியில் கட்டுரை வெளியிடப்பட்டுள்ளது.
‘அத்துமீறும் மதுரை ஆதினம் அறிவதற்கு’ என தலைப்பிடப்பட்டுள்ள அந்த கட்டுரையில், அது என்ன சாபக்கேடோ தெரியவில்லை, சமீப காலங்களாக பெருமை மிகு மதுரை ஆதினத்துக்கு கர்த்தர்களாக வருபவர்கள் வரம்பு மீறி, வாய்துடுக்காய் பேசி அந்த ஆதினத்தின் சிறப்பை சீரழித்து வருகின்றனர். மதுரை பாஷையில் சொல்வதென்றால், தாங்கள் ஆதினம் என்பதை மறந்து ஏதாவது ‘குண்டக்க, மண்டக்க’ என பேச்சிலும் செயலிலும் ஈடுபடுகின்றனர்! தேவையற்ற விவாதங்களில் ஈடுபட்டு, ‘நுணலும் தன் வாயால் கெடும்’ என்ற நிலைக்குள்ளாக்கியுள்ளனர்!முன்பு ஆதினமாக இருந்து மறைந்த அருணகிரி ஆதினம் காலத்தில், அவரது செயல்களால் பல சர்ச்சைகள் ஏற்பட்டதை நாடறியும்!
அவரது பல செயல்பாடுகள் விமர்சனத்துக்கு ஆளாகி, ஆதினத்தையே தலைகுனிய வைத்தது! அவர் ஆன்மிகத்தில் அரசியலை நுழைத்து – ஆன்மிகவாதியாகவோ – அரசியல் வாதியாகவோ இல்லாமல் இரண்டும் கெட்டானாக நடத்திய ‘கோமாளி’ கூத்துக்களால் திருநாவுக்கரசர் தோற்றுவித்த சீர்மிகு அந்த ஆதினம் பல தலைக்குனிவுகளை சந்தித்தது!
நித்யானந்தா எனப் பெயர் சூட்டிக்கொண்டு, நித்தம் ஆனந்தம் அனுபவித்துவிட்டு, அதனால் பல வழக்குகளில் சிக்கிக் கொண்டு நாட்டை விட்டு ஓடி, இன்று தேடப்படும் குற்றவாளியாக உள்ள ஒரு கிரிமினலை அன்று மதுரை ஆதினத்தின் பீடாதிபதியாக நியமித்து மிகப்பெரிய சர்ச்சைக்குள்ளானார் அன்றைய பீடாதிபதி அருணகிரி!
நித்யானந்தாவை வாரிசாகவும் அடுத்த பீடாதிபதியாகவும் நியமித்த அன்றைய மதுரை ஆதினத்தின் செயல் கடும் கண்டனத்துக்கு உள்ளானது மட்டுமல்ல; அந்த நியமிப்பின் மூலம் பல கோடி கைமாறியதாக குற்றமும் சாட்டப்பட்டது. அருணகிரி பணம் பெற்றுக்கொண்டு பீடாதிபதி பதவியை நித்யானந்தாவுக்கு வழங்கியதாக விஸ்வ ஹிந்து பரிசத் அமைப்பினர் தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர்.
காஞ்சி மடமும், திருவாவடுதுறை ஆதின மடம் உள்ளிட்ட சைவமதங்கள் பலவும் மடாதிபதி அருணகிரியின் செயலுக்கு கண்டனக்குரல் எழுப்பின!
மதுரை ஆதினம் இருப்பது தமிழ்நாடு! இந்த மண்ணில் பல சைவ ஆதினங்கள் உள்ளன! அவை அனைத்தும் தங்கள் பணிகளை எந்தவித சலசலப்புமின்றி செய்து வருகின்றன! அவர்கள் போற்றுதலுக்குரியவர்கள்! ஆனால் மதுரை ஆதினம் எல்லை மீறுகிறார்! பொறுமைக்கும் எல்லை உண்டு என்பதை அவர் உணர வேண்டும்.
அவருக்கு ஒன்றை நினைவூட்ட விரும்புகிறோம்! காஞ்சி மடத்தில் – அம்மையார் ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் நடைபெற்றது என்ன என்பதை அவர் அறிந்திருப்பார் என்று எண்ணுகிறோம். இந்தியாவின் குடியரசுத் தலைவர்கள் முதல் மாநில, மத்திய அமைச்சர்கள் பலரும் அந்த காஞ்சி பீடத்துக்கு விஜயம் செய்துள்ளனர். அவர் பெயரை உச்சரிக்கக் கூடமாட்டார்கள் – பெரியவாள், “சின்னவாள்” என்று பயபக்தியுடன்தான் அழைப்பார்கள்! அந்த சங்கராச்சாரியார் தரிசனம் கிடைப்பதே பெரும் பாக்யம் என்று நாட்டிலே பலர் மணிக்கணக்கில், நாட்கணக்கில் காத்துக் கிடப்பர்! ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் சின்னவாள், ஜெயேந்திரருக்கு என்ன கதி ஏற்பட்டது?
அந்த மகாகுருவையே சிறைக்கம்பிகளை எண்ண வைத்த நிகழ்வுகள் மதுரையின் இன்றைய பீடாதிபதிக்கு நினைவிருக்கும் எனக் கருதுகிறோம்! கைது செய்து சிறைக்கூடத்துக்கு மட்டும் அனுப்பவில்லை; அதனைத் தொடர்ந்து அவரது நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் எத்தனை நிகழ்வுகள் நடந்தன என்பதை மதுரை ஆதினம் உணர்ந்திருப்பார் என்று எண்ணுகிறோம்! இவை எல்லாம் மதுரை ஆதினத்தை மிரட்ட தரும் தகவல்கள் என அவர் கருதிவிடக் கூடாது; “பிரதமர் மோடியிடம் செல்வேன்; அமித்ஷாவிடம் செல்வேன்” – என்று பூச்சாண்டி காட்டும் மதுரை ஆதினத்தின் புரிதலுக்காக இதனை நினைவூட்டுகிறோம்!
இவர் பிரதமரைத் தேடிச் செல்லும் நிலையில் உள்ளார்; ஆனால் காஞ்சி சங்கராச்சாரியார் அவர்களைப் பிரதமர், குடியரசுத்தலைவர் போன்றவர்கள் எல்லாம் காத்திருந்து, தேதி வாங்கி பேட்டி கண்டு சென்றவர்கள்! அப்படிப்பட்ட காஞ்சி சங்கராச்சாரியாருக்கு ஏற்பட்ட நிலையை எல்லாம் எண்ணிப் பார்த்து பேச்சில் மதுரை ஆதினம் சிறிது நிதானம் காட்ட வேண்டும்!
காஞ்சி சங்கராச்சாரியாருக்கு இருந்த அரசியல் பலம், பத்திரிகை பலம், பக்தர்கள் பலம் இவற்றோடு ஒப்பிட்டால் அரிஹர தேசிக ஞான சம்பந்தர் ஒரு ‘ஜீரோ’! மதத்தலைவர் என்ற போர்வையினால் பாதுகாப்பு கிடைக்கும், எதை வேண்டுமானாலும் பேசலாம் என்று கருத வேண்டாம். தன்னை சிவபெருமானின் மறு அவதாரம் என்று கூறித் திரிந்து கொண்டிருக்கும் நித்யானந்தாவை கருநாடகப் போலிஸ் கைது செய்தது. ஒரு தேடப்படும் குற்றவாளியாக இந்தியாவுக்குள்ளே நுழைய முடியாத அளவு ஓடி ஒளிந்து திரிகிறார் அவர்! அவர்கூட மதுரை ஆதினத்தின் ஆதின கர்த்தராக முடிசூட்டப்பட்டவர்.
பொது அமைதிக்கு ஊறுதேடுபவர்கள், கிரிமினல் குற்றங்களில் ஈடுபடுவர்களை – அவர்கள் யாராக இருந்தாலும் வேடிக்கைப் பார்க்கஇயலாது; சட்டம் தனது கடமையை செய்திடும் என்பதை மதுரை ஆதினம் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக மேலே கண்ட நிகழ்வுகளை நினைவுபடுத்தினோம். தமிழகத்தில் சட்டம் ஒழுங்குக்கு குந்தகம் ஏற்படும் நிலையிலும், வன்முறையை தூண்டும் வகையிலும், மதவெறிப் பேச்சுக்கள் பேசுவதை மதுரை ஆதினம் உடனடியாக நிறுத்த வேண்டும்!
தமிழக முதல்வர் குறித்து பி.ஜே.பி.யின் எச்.ராஜா கூறியதையும் மதுரை ஆதினத்துக்கு சுட்டிக்காட்டிட விரும்புகிறோம். “Stalin is more Dangerous than Karunanithi” எச்.ராஜாவின் இந்தப் பதிவில் பல பொருள்கள் பொதிந்துள்ளன. இதனையும் அரிஹர தேசிகர் உணரவேண்டும்” என்று கூறப்பட்டுள்ளது.