தமிழ்நாடு, காஷ்மீர், குஜராத் மாநிலங்களிலும் பறவை காய்ச்சல் பரவும் அபாயம் உள்ளதாக மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
கேரள மாநிலம் ஆலப்புழா, கோட்டயம் மாவட்டங்களில், காக்கை, கோழி, வாத்து உட்பட 46,000 மேற்பட்ட பறவைகளுக்கு நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த பறவை காய்ச்சலால் மனிதர்களுக்கும் ஆபத்து உண்டாகும் என கண்டறியப்பட்டுள்ளதால் மாநில பேரிடராக கேரள அரசு அறிவித்துள்ளது. அத்துடன், பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான பறவைகளை கொல்லும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது.
கேரளாவில் பறவை காய்ச்சல் வேகமாக பரவுவதால், அங்கிருந்து கோழி உள்ளிட்ட பறவைகள், கோழி தீவனம் ஏற்றிக்கொண்டு தமிழகம் வரும் வாகனங்கள் திருப்பி அனுப்பப்படுகின்றன. அத்துடன், தமிழக எல்லைகளில் 26 இடங்களில் சோதனைச் சாவடிகள் அமைந்து கண்காணிக்கப்படுகின்றன.
இதன் ஒருபகுதியாக, கேரளாவில் இருந்து கோழி மற்றும் முட்டைகளை ஏற்றி வரும் வாகனங்கள் கன்னியாகுமரி மாவட்டம் படந்தலுமூடு சோதனைச்சாவடியில் தடுத்து நிறுத்தப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டன. மற்ற வாகனங்களுக்கு குளோரின் டை ஆக்ஸைடு கிருமி நாசினி தெளிக்கப்பட்டு, தமிழகத்திற்குள் அனுமதிக்கப்படுகின்றன. கேரளா, ராஜஸ்தான், அரியானா, மத்திய பிரதேசத்தை தொடர்ந்து 5-வது மாநிலமாக இமாச்சல பிரதேசத்தில் பறவை காய்ச்சல் பரவியுள்ளது.
தமிழ்நாடு, காஷ்மீர், குஜராத் ஆகிய மாநிலங்களிலும் பறவை காய்ச்சல் பரவும் அபாயம் உள்ளதாக மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால், உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.