தமிழகம்

வேலூரில் கள்ளநோட்டு கும்பல் தலைவன் கைது!: சிக்கலில் அமைச்சர் வீரமணியின் மருமகன்

வேலூர் மாவட்டம் ஆம்பூர் ஆலாங்குப்பத்தில் கள்ளநோட்டு மாற்ற முயன்ற இளைஞர் ஒருவர் பிடிபட்டார். அதைத் தொடர்ந்து, போலீஸார் நடத்திய விசாரணையில் அ.ம.மு.க நிர்வாகிகள் இருவர் கள்ளநோட்டு அச்சடித்து விநியோகித்துவந்தது தெரியவந்தது. இந்தச் சம்பவம், வேலூர் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆலாங்குப்பத்தில் உள்ள மளிகைக்கடை ஒன்றில் கடந்த 2-ம் தேதி ஓர் இளைஞர் இரண்டாயிரம் ரூபாய் நோட்டை மாற்றியுள்ளார். அந்த நோட்டைப் பார்த்த கடைக்காரருக்குச் சந்தேகம் ஏற்பட்டது. சிக்கப்போகிறோம் என்பதை உணர்ந்து, அந்த இளைஞர் ஓட்டம் பிடித்தார். கடைக்காரர் கூச்சலிடவே பொதுமக்கள் அவரை விரட்டிப்பிடித்தனர். அவரிடம் மேலும் சில இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகள் இருந்தன. அத்தனையும் கள்ளநோட்டுகள். அந்த இளைஞரை ஆம்பூர் போலீஸாரிடம் மக்கள் ஒப்படைத்தனர். அவரை போலீஸார் விசாரித்தபோது, அவரது பெயர் சதாம் உசேன் என்பதும், சென்னை மூலக்கடையைச் சேர்ந்த அவர், ஜோலார்பேட்டையில் உள்ள தன் மாமியார் வீட்டில் தங்கியிருப்பதும் தெரியவந்தது.
ஜோலார்பேட்டை வக்கணம்பட்டியில் வசிக்கும் அலெக்ஸாண்டர் என்பவர், அ.ம.மு.க-வின் ஜோலார்பேட்டை நகரத் துணைச் செயலாளராக உள்ளார். அவருடன் சதாம் உசேனுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. அலெக்ஸாண்டர், கள்ள நோட்டுகளை அச்சடித்து சதாம் உசேனிடம் கொடுத்துள்ளார். ரூ. 20 ஆயிரம் மதிப்பிலான 2,000 ரூபாய் நோட்டுகளை மாற்றிக்கொடுத்தால், ரூ.4,000 ஆயிரம் கமிஷன் தருவதாக அலெக்ஸாண்டர் கூறியுள்ளார். கமிஷனுக்கு ஆசைப்பட்டுக் கள்ளநோட்டுகளை மாற்றியதாக சதாம் உசேன் வாக்குமூலம் கொடுத்துள்ளார். அலெக்ஸாண்டரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
இந்தக் கள்ளநோட்டு விவகாரத்தில், தமிழக வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத் துறை அமைச்சர் கே.சி.வீரமணியின் அக்கா மகனான தென்னரசுவின் பெயர் அடிபட்டது.
இதுகுறித்து போலீஸ் வட்டாரத்தில் விசாரித்தபோது, ‘‘சதாம் உசேனை வைத்து போன் செய்யச் சொல்லி, அலெக்ஸாண்டரை ஓர் இடத்துக்கு வரவழைத்துக் கைது செய்தோம். அலெக்ஸாண்டரின் வீடு மற்றும் அ.ம.மு.க அலுவலகத்தில் சோதனையிட்டோம். அப்போது, கள்ளநோட்டுகளும் அவற்றை அச்சடிக்கப் பயன்படுத்தப்பட்ட கலர் ஜெராக்ஸ் மெஷின் மற்றும் கட்டர் ஆகியவற்றைக் கைப்பற்றினோம். இதன் பின்னணியில் அமைச்சர் வீரமணியின் சொந்த அக்கா மகன் தென்னரசு இருப்பதாகத் தெரியவந்துள்ளது.
அமைச்சர் வீரமணி தன் சொந்தத் தாய்மாமன் என்பதால், அமைச்சருடன் அவர் வலம்வந்துகொண்டிருந்தார். அமைச்சரைச் சந்திப்பதற்கே தென்னரசுவிடம் அனுமதிபெற வேண்டிய நிலை ஒருகாலத்தில் இருந்தது. அமைச்சருக்கும், தென்னரசு குடும்பத்திற்கும் இடையே மனக்கசப்பு ஏற்பட்டு, அமைச்சரிடமிருந்து தென்னரசு விலகினார். சசிகலா தலைமையிலான அ.ம.மு.க-வில் இணைந்தார். இவருக்கு அந்தக் கட்சியில் ஜோலார்பேட்டை நகரச் செயலாளர் பதவி வழங்கப்பட்டது.
அதன் பின், அமைச்சரிடம் இருந்த தன் ஆதரவாளர்களைத் தன் பக்கம் இழுத்துக்கொண்டார். அப்படி வந்தவர்தான் அலெக்ஸாண்டர். இவருக்கு நகரத் துணைச் செயலாளர் பொறுப்பை தென்னரசு வழங்கினார். குடும்பப் பகையைக் கட்சிப் பகையாக மாற்றி, அமைச்சரைக் கடுமையாக எதிர்க்கத் தொடங்கினார் தென்னரசு. இந்தச் சூழலில்தான், அ.ம.மு.க அலுவலகத்திலேயே கலர் ஜெராக்ஸ் மெஷின் மூலம் 2,000 ரூபாய் நோட்டுகளை அச்சடித்துள்ளனர். தென்னரசு அரசியல் செல்வாக்கு உடையவர் என்பதால், அவர் மீது நடவடிக்கை எடுப்பதில் காலதாமதமாகிறது. இதுவரை எவ்வளவு நோட்டுகளை அச்சடித்துப் புழக்கத்தில் விட்டுள்ளனர் என்பது பற்றி விசாரணை மேற்கொண்டுவருகிறோம்” என்றனர்.
இந்த விவகாரம் அமைச்சர் தரப்புக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்றும், வழக்கு விசாரணையைத் துரிதப்படுத்த அமைச்சர் தரப்பு போலீஸுக்கு அழுத்தம் கொடுத்துவருகிறது என்றும், இதனால் அமைச்சர் தரப்பிடம் சரண்டராகும் மனநிலையில் தென்னரசு இருக்கிறார் என்றும் சொல்கிறார்கள் உள்விவரம் அறிந்தவர்கள்.
இதுகுறித்து தென்னரசுவிடம் பேசினோம். “கள்ளநோட்டு விவகாரத்துக்கும் எனக்கும் சம்பந்தமில்லை. சிறு வயதிலிருந்து மிகவும் கஷ்டப்பட்டுப் படிப்படியாக உயர்ந்து வந்திருக்கேன். குறுக்கு வழியில் சம்பாதிக்கும் ஆள் நானில்லை. என் கட்சி அலுவலகக் கட்டுமானப் பணி நடைபெறுகிறது. அலுவலகத்தில் கள்ளநோட்டுகள் அச்சடிக்கப்படவில்லை. கள்ளநோட்டு விவகாரத்தில் கைதான அலெக்ஸாண்டரை அ.ம.மு.க நகரத் துணைச் செயலாளர் பதவியில் இருந்து நீக்கிவிட்டோம். கட்சித் தலைமையிடம் நான் விளக்கம் அளித்துவிட்டேன்” என்றார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button