கரைபுரண்டோடும் போதை மாத்திரைகள் ! கரையேறுமா கரைப்புதூர் ஊராட்சி ?
திருப்பூர் மாவட்டம் பல்லடம் தாலுக்காவிற்குட்பட்ட பகுதியில் அமைந்துள்ளது கரைப்புதூர் ஊராட்சி. சுமார் லட்சக்கணக்கில் மக்கள் தொகையை கொண்ட இந்த ஊராட்சிக்குட்பட்ட லட்சுமி நகர், அருள்புரம், தண்ணீர் பந்தல், உப்பிலிபாளையம், குன்னங்கல்பாளையம், சின்னக்கரை உள்ளிட்ட ஏராளமான பகுதிகளை உள்ளடக்கியது. மேலும் இப்பகுதியில் பிரபலமான சாய சலவை மற்றும் பின்னலாடை நிறுவனங்கள் இயங்கி வருகிறது. இதனால் இப்பகுதியில் வெளி மாநில, மாவட்ட தொழிலாளர்கள் அதிக அளவில் குடும்பத்தினருடன் வந்து தங்கி பணியாற்றி வருகின்றனர். மேலும் இங்கு தனியார் கல்லூரியும் இயங்கி வருகிறது.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் போதை மாத்திரைகள் பயன்படுத்தியதாக உளவு பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்ததை அடுத்து கரைப்புதூரில் தீவிர சோதனை மேற்கொண்ட பல்லடம் போலீசார் சிலரை பிடித்து விசாரணை மேற்கொண்டதில், மங்கலம் காவல் எல்லைக்கு உட்பட்ட இடுவாய் கிராமத்தில் முக்கிய குற்றவாளியை கைது செய்து, சுமார் 800 போதை மாத்திரைகளை கைப்பற்றியதோடு, மேலும் 8 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இதனிடையே கரைப்புதூர் ஊராட்சிக்குட்பட்ட லட்சுமி நகர் பகுதியில் தனியார் கல்லூரிக்கு பின்புறம் உள்ள தனியாருக்கு சொந்தமான இடத்தில் பயன்படுத்தப்பட்ட போதை ஊசிக்கள் குவியல் குவியலாய் சிதறிக்கிடப்பதாக இணைய தளத்தில் வீடியோ பரவி வைரல் ஆனது. அதனையடுத்து களத்தில் இறங்கிய பல்லடம் போலீசார் 2 பேரை தட்டித்தூக்கி சிறையில் அடைத்தனர். இதனிடையே போதை மாத்திரைகள் குறித்து பல்வேறு அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
டேப்பெண்டோல், டைடோல் ஆகிய வலி மாத்திரைகளை இணையத்தில் ஆர்டர் செய்து மாத்திரைகளை வாங்கி அதிக விலைக்கு இளைஞர்களை குறி வைத்து விற்கும் கும்பல், மாத்திரைகளை என்.எஸ் எனப்படும் கலவையுடன் கலந்து ஊசி மூலமாக நரம்பில் ஏற்றிக்கொள்கின்றனர். ஏற்றியவுடன் போதை தலைக்கேறி சுமார் 3 மணி நேரம் வரை தாக்கு பிடிக்கிறது. பின்னர் திரும்பவும் இது போன்று போதை ஏற்றிக்கொள்ள போதை மாத்திரைகளை ஊசி மூலம் ஏற்றி ஒரு கட்டத்தில் போதைக்கு அடிமையாகி உடல் நிலை கடுமையாக பாதிக்கப்படுகிறது.
வலி நிவாரணி மாத்திரைகளை இது போன்று போதைக்கு பயன்படுத்தும் கும்பல் வாகனத்தை தாறுமாறாக இயக்கி விபத்து ஏற்படுத்துவது, சட்டவிரோத காரியங்களில் ஈடுபடுவது என திசைமாறி இளமையிலேயே வாழ்க்கையை தொலைத்து விடுகின்றனர். எனவே போர்கால அடிப்படையில் கரைப்புதூரில் காவல் நிலையம் அமைத்து, கரையேர அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும்.