போலி சீம்பால் மோசடிகள்… : சுகாதாரத்துறை நடவடிக்கை எடுக்குமா?
தமிழகம் முழுவதும் பெருநகரங்கள் முதல் அனைத்து நகர்புறங்களில் வணிக வளாகங்கள், சூப்பர் மார்க்கெட், பேக்கரிகள் என புதிய வடிவில் புதிதுபுதிதாக ஏராளமாக உருவாகி வருகிறது. இந்த கடைகளில் தற்போது உடலுக்கு ஆரோக்கியமான வேறு எங்கும் கிடைக்காத சீம்பால் கட்டி கிடைக்கும் என்று விளம்பர பதாகைகளும், சுவரொட்டிகளும் ஒட்டி வைத்து பிரதானமாக விளம்பரங்களும் செய்து வருகிறார்கள்.
ஒரு காலத்தில் கிராமப்புறங்களில் அனைத்து வீடுகளிலும் பசுமாடுகளை வளர்த்து பால் கறந்து வீடுகளுக்கு பயன்படுத்தியது போக மீதி பாலை விற்பனை செய்து வந்தார்கள். காலப்போக்கில் விவசாயம் செய்வதும் குறைந்து விளை நிலங்கள் வீட்டுமனைகளாக விற்பனை செய்யப்பட்டு கிராமங்களும் தற்போது நகரங்களாக மாறிப் போனது. பசுமாடு கன்று ஈன்றதும் பசுவின் மடுவில் இருந்து பால் கறப்பார்கள். அந்தப் பால் மஞ்சளும், வெள்ளையும் கலந்த நிறத்தில் கட்டியாக வரும். பசு கன்று ஈன்றதும் முதன் முதலில் கறந்த பாலை காய்ச்சி உறவினர்களுக்கு சீம்பால் என்று வழங்குவார்கள். இந்தப் பால் உடலுக்கு ஆரோக்கியமானதாக தற்போதும் கிராமப்புறங்களில் அருந்தி வருகிறார்கள்.
பசு கன்று ஈனும் போது மிகவும் அரிதாக கிடைக்கக் கூடிய சீம்பாலை தற்போது வணிக வளகாங்களிலும், பேக்கரிகளிலும், சூப்பர் மார்க்கெட்களிலும் பிரமாண்டமாக விளம்பரங்கள் செய்து விற்பனை செய்யத் தொடங்கி விட்டார்கள். இவ்வாறு விற்பனை செய்யப்படும் சீம்பால் கட்டி எப்படி இவ்வளவு எளிதாக அதிகமான அளவில் நகரங்களில் கிடைக்கிறது என்று விசாரித்த போது பல அதிர்ச்சியான தகவல்களை பல்வேறு தரப்பினரும், நம்மிடம் பகிர்ந்து கொண்டனர்.
தனியார் பால் நிறுவனங்களில் மீதமான பாலையும், தயிரையும் கேன்களில் அடைத்து வைத்து பின்னர் அந்த கேன்களில் ஒட்டி இருக்கும் ஆடைகளை தனியாக எடுத்து அதோடு சில ரசாயன பொருட்களையும், வாசனைத் திரவியங்களையும் கலந்து சீம்பால் என்ற பெயரில் விற்பனை செய்கின்றார்களாம்.
இவ்வாறு விற்பனை செய்யப்படும் சீம்பால் கட்டியை நன்கு படித்தவர்களும், படிக்காத பாமரர்களும் தங்களது குழந்தைகளுக்கு வாங்கிக் கொடுத்து மகிழ்ந்து வருகின்றனர். இவ்வாறு விற்பனை செய்யப்படும் சீம்பால் கட்டியை வாங்கி சாப்பிடுவதால் பல்வேறு விதமான நோய்கள் வர வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.
அரசு மருத்துவமனைகளில் குழந்தைகள் பிறந்தவுடன் சீம்பால் கொடுக்க வேண்டும் என அறிவுறுத்துவதால் தற்போது மருத்துவ மனைகளுக்கு எதிராக அமைந்திருக்கும் கடைகளிலும் இந்த சீம்பால் கட்டி விற்பனை சூடுபிடித்துள்ளது.
அதே போல் பள்ளி வளாகங்கள் அமைந்திருக்கும் கடைகளிலும் சீம்பால் கட்டி விற்பனை செய்யப்பட்டு வருகிறதாம். இந்த சீம்பால் கட்டி தங்களது குழந்தைகளுக்கு ஆரோக்கியத்தை தரும் என்று நம்பி பெற்றோர்கள் குழந்தைகளுக்கு வாங்கி கொடுக்கிறார்கள். ஆனால் இதனால் ஏற்படும் பின்விளைவுகளை அறியாதவர்களாகவே பெற்றோர்கள் இருக்கிறார்கள்.
மிகவும் அரிதாக கிடைக்கும் சீம்பாலை எளிதாக விற்பனை செய்யும் வணிக நிறுவனங்களை சுகாதாரத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து தவறு செய்வது உறுதிபடுத்தப்பட்டால் அந்த நிறுவனங்கள் மீதும், அதற்கு காரணமானவர்கள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பெரும்பாலானவர்களின் கோரிக்கையாக இருக்கிறது.
- சௌந்திரராஜன்