காஞ்சி கோவிலில் கிடைத்த தங்கப் புதையல்… : அரசிடம் நிபந்தனையுடன் ஒப்படைத்த ஊர்மக்கள்…
காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூரில் 500 ஆண்டு கால பழமையானதாக கருதப்படும் குழம்பேஸ்வரர் கோயிலில் கண்டெடுக்கப்பட்ட தங்கப் புதையல் அரசிடம் ஒப்படைக்க ஊர்மக்கள் சம்மதித்துள்ளனர். முதலில் தங்க புதையலை அரசு வசம் ஒப்படைக்க மறுத்து அடம்பிடித்து வந்த ஊர்மக்கள், அதிகாரிகளின் எச்சரிக்கையை அடுத்து நிபந்தனையுடன் ஒப்புக் கொண்டனர்.
காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூரில் இரண்டாம் குலோத்துங்கச் சோழன் காலத்தில் கட்டப்பட்டதாக நம்பப்படும் குழம்பேஸ்வரர் கோயில் உள்ளது. பழமையான இந்த கோயில் சிதிலமடைந்த நிலையில் இருந்ததால், தரைமட்டமாக இடித்துவிட்டு, புதிதாக கோயில் கட்டி கும்பாபிஷேகம் நடத்த, ஊர் பொதுமக்களும், கோயில் விழாக்குழுவினரும் முடிவு செய்தனர்.
வருவாய்த்துறையினரிடம் எவ்வித அனுமதியும் பெறாமலேயே அதற்கான பணிகளையும் தொடங்கியுள்ளனர். ஜே.சி.பி இயந்திரம் கொண்டு கருவறையின் நுழைவு வாயிலின் முன்புள்ள கருங்கற்களாலான படிக்கட்டுகளை அகற்றிய போது, துணியால் சுற்றப்பட்ட சிறிய அளவிலான மூட்டை ஒன்று கிடைத்துள்ளது. அதனை பிரித்து பார்த்த ஊர்மக்களுக்கு அதிர்ச்சியும் ஆச்சரியமும் காத்திருந்தது. அதில், சுமார் 100 சவரன் அளவிலான ஆபரணங்களும், நாணயங்களும் இருந்தன. அங்கு பணியில் ஈடுபட்டிருந்த சிலர், தங்கத்தை எடுத்துச் சென்றதாகவும் கூறப்படுகிறது.
கோயில் முழுவதும் தரைமட்டமாக்கப்பட்ட நிலையில், தகவல் அறிந்து வருவாய்த்துறையினர், போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். சுதாரித்துக் கொண்ட ஊர்மக்கள், முதலில் புதையலை தங்கள் வசப்படுத்திக்கொண்டு அரசிடம் ஒப்படைக்க மறுத்தனர். வட்டாட்சியர், ஆர்.டி.ஓ. என பல கட்ட பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டும், புதையலை ஒப்படைக்கமுடியாது எனக் கூறிய ஊர்மக்கள், பேச்சுவார்த்தையை புறக்கணித்து பாதியிலேயே எழுந்து சென்றனர்.
இடையில் மூதாட்டி ஒருவர் சாமி வந்தவராக எழுந்து நகைகள் ஊரை விட்டு எடுத்துச் செல்லப்பட்டால், ஊர் மக்களுக்கு தீங்கு ஏற்படும் என்று கூறி ஆவேசமாக ஆடத் தொடங்கினார்.
இதனையடுத்து, இன்னும் ஒரு மணி நேரத்தில் புதையலை முறையாக ஒப்படைக்கவில்லை எனில், போலீசார் உதவியுடன் கைப்பற்றப்படும் என அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்ததை அடுத்து, ஊர்மக்கள் சம்மதித்தனர். கும்பாபிஷேக விழாவின் போது, புதையலை கொண்டு வந்து வைக்க வேண்டும் என்ற நிபந்தனையுடன் ஊர்மக்கள் ஒப்புக் கொண்டுள்ளனர்.
16ஆம் நூற்றாண்டில் நாயக்கர் காலத்தில் அன்னியர்கள் படையெடுப்பு காரணமாக சாமி சிலைகளுக்கு அலங்காரம் செய்வதற்காக உருவாக்கப்பட்ட நகைகளை கோயிலின் பல்வேறு பகுதிகளில் புதைத்து வைத்து இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
இதனிடையே, கோயிலில் கிடைத்த தங்கப் புதையலை ஒப்புக்கொண்டப்படி, கிராம மக்கள் காஞ்சிபுரம் கோட்டாட்சியர் வித்யாவிடம் ஒப்படைத்தனர். அதன் பின்னரும், கோயில் கும்பாபிஷேக விழாவுக்கு புதையலை கொண்டுவந்து வைக்க வேண்டும் என்ற நிபந்தனைக்கு எழுத்துப்பூர்வமாக உறுதியளிக்கக்கூறி அதிகாரிகள் வாகனத்தை முற்றுகையிட்டு, புதையலை கொண்டு செல்ல விடாமல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து கோட்டாட்சியர் வாகனத்தை அங்கேயே விட்டுவிட்டு சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் நடந்தே சென்றார்.
தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமாரிடம் ஆலோசனை நடத்திய கோட்டாட்சியர் வித்யா, கும்பாபிஷேகத்தின் போது நகைகள் கோவிலுக்கு எடுத்து வரப்படும் என ஊர்மக்களுக்கு எழுத்துப்பூர்வமான உறுதியை அளித்தார்.
– ராபர்ட் ராஜ்