தமிழகம்

வேலம்மாள் பள்ளியின் செஸ் வீரர், வீராங்கனைகளை ஊக்குவித்த அமைச்சர் மா. சுப்பிரமணியன்.

இந்தியாவில் முன்பு எப்போதும் இல்லாத அளவில் சர்வதேச அளவிலான 44 -வது ‘செஸ் ஒலிம்பியாட்’ சதுரங்க போட்டிகள்
வருகிற ஜூலை 28-ந் தேதி தொடங்கி ஆகஸ்டு 10-ந் தேதி வரை நடைபெற உள்ளது. செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் செஸ் ஒலிம்பியாட் போட்டிகளுக்கான பிரமாண்ட ஏற்பாடுகளை தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் செய்துள்ளது. 188 நாடுகளை சேர்ந்த 2 ஆயிரத்து 500-க்கும் மேற்பட்ட வீரர்கள் செஸ் ஒல்ம்பியாட் போட்டிகளில் பங்கேற்று விளையாட உள்ளனர்.

இந்த போட்டியில் இந்தியா சார்பில் உலக செஸ் சாம்பியன்களான அதிபன் பாஸ்கரன், எஸ்.பி.சேதுராமன், கார்த்திகேயன், முரளி, வைஷாலி, பிரக்யானந்தா, குகேஷ் ஆகியோர் பங்கேற்று விளையாட உள்ளனர். செஸ் ஒலிம்பியாட் போட்டியில்
இந்தியாவின் முகங்களாக இருக்கும் இந்த ஆறு மாணவர்களும்  சென்னை வேலம்மாள் நெக்சஸ் பள்ளியைச் சேர்ந்த முன்னாள், இந்நாள் மாணவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இது தவிர செஸ் ஒலிம்பியாட் போட்டிகளுக்கான பயிற்சியாளர்களாக இந்தியா சார்பில் அறிவிக்கப்பட்டுள்ள நாராயண் ஸ்ரீநாத், ஷியாம் சுந்தர் மற்றும் பிரேசில் சார்பில் பிரியதர்ஷன் ஆகிய மூவரும் வேலம்மாள் பள்ளியின் முன்னாள் மாணவர்கள் ஆவர். இது தவிர அண்மையில் துபாயில் நடைபெற்ற உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டிகளில் வேலம்மாள் பள்ளியைச் சேர்ந்த ரிந்தியா, பிரணவ், சவிதா ஸ்ரீ, தேஜஸ்வினி, மிருத்தியுஞ்சய், வி.எல்.சந்தோஷ், மிதுன் பிரணவ் உள்ளிட்ட வீரர் தங்கம் வென்று அசத்தினர்.

இந்நிலையில், 44–வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகளில் பங்கேற்கும் வேலம்மாள் பள்ளியின் உலக செஸ் சாம்பியன்களையும், துபாயில் நடைபெற்ற உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டிகளில் தங்கம் வென்ற வேலம்மாள் பள்ளி மாணவர்களையும் கவுரவிக்கும் நிகழ்ச்சியானது ஆலப்பாக்கத்தில் உள்ள வேலம்மாள் வித்யாலயா பள்ளி வளாகத்தில் ஜூலை 25-ந்தேதி நடைபெற்றது. இந்நிகழ்வில் ஒலிம்பியாட்  பயிற்சியாளர்கள் நாராயண் ஸ்ரீநாத், ஷியாம் சுந்தர், பிரியதர்ஷன் மற்றும் உலக செஸ் சாம்பியன்ஷிப் பயிற்சியாளர் வேலவன் ஆகியோரும் கவுரவிக்கப்பட்டனர். தமிழக சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இந்த நிகழ்சிக்கு தலைமை தாங்கியதுடன், செஸ் ஒலிம்பியாட் போட்டிகளில் பங்கேற்கும் வேலம்மாள் பள்ளியின் உலக செஸ் சாம்பியன்களையும், துபாயில் நடந்த செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்ற வீரர், வீராங்கனைகளுக்கு ரூ.30 லட்சம் பரிசுத் தொகை வழங்கி சிறப்பித்தார். இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக, 44 –வது செஸ் ஒலிம்பியாட் இயக்குனரும், அகில இந்திய செஸ் கூட்டமைப்பின் செயலாளருமான பாரத் சிங் சவுகான் பங்கேற்றார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button