மாசு கட்டுப்பாடு வாரிய முறைகேடுகள்… கண்டுகொள்ளாத அதிகாரிகள்..!
தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடரில் மானியக்கோரிக்கை மீதான விவாதங்கள் நடைபெற்று வரும் நிலையில், சில துறைகளில் நிறைவேற்ற வேண்டிய திட்டங்கள் குறித்து உறுப்பினர்கள் கோரிக்கை எழுப்பும்போது சம்பந்தப்பட்ட அமைச்சர்கள் அரசின் நிதிநிலை உயரும்பட்சத்தில் வரும் காலங்களில் உறுப்பினர்களின் கோரிக்கைகள் பரிசீலிக்கப்படும் என்று பதில் அளித்து அமர்ந்து விடுகிறார்கள்.
ஏற்கனவே தமிழக அரசின் கருவூலத்திற்கு வருமானம் வருவது டாஸ்மாக் மட்டும்தான். அதற்கு மாற்றாக கிரானைட் மற்றும் மணல் குவாரிகளை அரசே ஏற்று நடத்தினால் அரசின் நிதிநிலையை உயர்த்தலாம் என பொருளாதாரம் பற்றி அறிந்தவர்கள் கூறிவரும் நிலையில், தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தை கையில் வைத்துள்ள சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் அதிகாரிகளை இழுத்துப் பிடித்தால் தமிழக அரசின் நிதிநிலைமையை ஒரே ஆண்டில் ஓரளவுக்கு சரி செய்யலாம் என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.
தொழில் நிறுவனங்கள் தொழிலை தொடங்குவதற்கு முன் மாசு கட்டுப்பாடு வாரியத்தில் அனுமதி பெற வேண்டும் என்பது விதி. ஆனால் பல நிறுவனங்கள் அனுமதி இல்லாமல் தான் இயங்கி வருகிறது. அப்படி அனுமதி பெற்று இயங்கும் நிறுவனங்களில் சில நிறுவனங்கள் தவிர பல நிறுவனங்கள் மாவட்ட அளவிலான அதிகாரிகளை சரிசெய்து கொண்டு தங்கள் நிறுவனத்தின் சொத்து மதிப்பை குறைத்து காண்பித்து மாசு கட்டுப்பாடு வாரியத்தின் விதிகளை பின்பற்றாமல் அனுமதியை பெற்றுவிடுகிறார்கள்.
நிறுவனங்களின் உண்மையான சொத்து மதிப்பை காண்பிக்காமல் குறைத்து காண்பிக்கும் நிறுவனத்தின் உரிமையாளர்கள், அதற்கு துணைபோகும் ஆடிட்டர்கள் மீது தமிழக அரசு நடவடிக்கை எடுத்தாலே அரசின் கஜானா உயரத்தொடங்கும். ஏற்கனவே போலியான ஆடிட்டர் சர்டிபிகேட் கொடுத்து மாசு கட்டுப்பாடு வாரியத்தில் அனுமதி பெற்ற 117 நிறுவனங்கள் மீது இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. அந்த நிறுவனத்திற்கு சோகாஸ் நோட்டீஸ் வழங்கப்பட்டதோடு அப்படியே இருக்கிறது.
ஆனால் போலியான ஆடிட்டர் சர்டிபிகேட் கொடுத்த நிறுவனம் வேறு ஆடிட்டர் பெயரில் ஏற்கனவே கொடுத்த தொகையை அப்படியே பதிவு செய்து கொடுத்து மாவட்ட அதிகாரிகளை சரிசெய்து கொண்டு மீண்டும் அனுமதியை வாங்கியுள்ளனர். சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் இயங்கிவரும் பெருநிறுவனங்கள், மருத்துவமனைகள், நட்சத்திர விடுதிகள் போன்ற பல்வேறு நிறுவனங்கள் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தில் அனுமதி வேண்டி விண்ணப்பிக்கும் போது மதிப்பை குறைத்து காண்பித்து அரசுக்குச் செலுத்த வேண்டிய பணத்தை செலுத்தாமல் மாவட்ட அதிகாரிகளுக்கு சில லட்சங்களை கொடுத்து அனுமதியை பெற்றுள்ளதாக ஏராளமான புகார்கள் நம்மிடம் தெரிவித்திருக்கிறார்கள். உதாரணத்திற்கு சென்னை ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள நட்சத்திர விடுதி ஏற்கனவே 130 அறைகள் இருப்பதாகவும், அதனால் இவ்வளவு லிட்டர் தண்ணீர் உபயோகப்படுத்தப்படுவதாகவும் கூறி அனுமதி வாங்கியுள்ளனர். அதன்பிறகு அந்த ஹோட்டலின் பெயரை மாற்றி தற்போது 90 அறைகள் இருப்பதாக கூறி அதற்கான கட்டணத்தை மட்டும் மாசு கட்டுப்பாடு வாரியத்தில் செலுத்தி அனுமதி வாங்கியிருக்கிறார்கள்.
ஏற்கனவே கடந்த ஆட்சிக்காலத்தில் மாசு கட்டுப்பாடு வாரிய அதிகாரி வீட்டில் அதிகாரிகள் சோதனையின்போது கோடி கோடியாக பணம் கைப்பற்றப்பட்டது அனைவரும் அறிந்ததே. ஒரு மாவட்ட அதிகாரி வீட்டில் சோதனை செய்தபோது 40 லட்சம் பணம், 35 சவரன் தங்கம் கைப்பற்றப்பட்டு லஞ்ச ஒழிப்புத்துறையில் வழக்கு நிலுவையில் உள்ளது. மற்றொரு மாவட்ட அதிகாரி மீது தொடுக்கப்பட்ட வழக்கில் முக்கியப் பொறுப்புகளில் அவரை பணிசெய்ய அனுமதிக்கக்கூடாது என்று நீதிமன்றம் கூறியுள்ள நிலையில் கடந்தகால ஆட்சியாளர்களின் ஆசியுடன் மாசுகட்டுப்பாடு வாரிய மாவட்ட செயற்பொறியாளராக இப்போது வரை தொடர்ந்து வருகிறார் மாவட்ட செயற்பொறியாளர்கள் பற்றிய மேலும் விரிவான செய்தியை தனிகட்டுரையாக பார்க்கலாம்.
மாசு கட்டுப்பாடு வாரியத்தில் நடைபெறும் முறைகேடுகளை தடுத்து நிறுத்தினாலே தமிழகத்தின் நிதிநிலையை உயர்த்தலாம். மாசுகட்டுப்பாடு வாரியத்தலைவர், மாநில லஞ்ச ஒழிப்புத்துறை ஆகிய இருவரும் தங்களுக்கு வரும் புகார்களை தாமதிக்காமல் விசாரணை செய்து நடவடிக்கை எடுத்தாலே ஓரளவிற்கு குற்றங்கள் நடைபெறாமல் தடுக்கலாம். சில மாவட்ட அதிகாரிகளிடம் புகார்கள் கொடுத்தால் அந்தப் புகாரை சம்பந்தப்பட்ட நிறுவனத்திடம் காண்பித்து அவர்கள் வருமானத்தை பெருக்கிக் கொள்வதாகவும் தகவல்கள் வருகிறது. கடந்த காலங்களில் நடைபெற்ற முறைகேடுகள் ஆட்சிமாற்றம் ஏற்பட்டும் இன்னும் தொடர்ந்து நடந்து கொண்டுதான் இருக்கிறது. இதில் மாசு கட்டுப்பாடு வாரியத் தலைவர் மட்டும் புதியவர்.
இந்தத் துறையை தமிழக முதல்வரும், சுற்றுச்சூழல்துறை அமைச்சர் மெய்யநாதனும் முறைகேடு செய்த நிறுவன உரிமையாளர்கள் மீதும், அதற்கு துணைபோன அதிகாரிகள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுத்தாலே, மாசு கட்டுப்பாடு வாரியத்திற்கு வரவேண்டிய பணம் தானாக வரும். முறைகேடு நிறுவனங்களிடம், சுற்றுச்சூழல் இழப்பீடு (Environmental Compensation) வசூலித்தாலே அரசுக்கு பல கோடி வருமானம் வரும் என்கிறார்கள்.
– குண்டூசி