தமிழகம்

லஞ்சம் வாங்கியதாக உடுமலை வட்டார வளர்ச்சி அலுவலர் கைது

திருப்பூர் மாவட்டம், உடுமலை சொளந்தர்யா கார்டன் பகுதியைச் சேர்ந்த கந்தசாமி என்பவரின் மகன் ஜெகன், ஸ்ரீராம் நகர் பகுதியில் காளிமுத்து என்பவருக்கு சொந்தமான 4.54 சென்ட் நிலத்தை வாங்க முயன்றுள்ளார். ஆனால், இந்த மனை அங்கீகாரம் இல்லாததால் அங்கீகாரம் பெற கடந்த டிசம்பர் 20ம் தேதி உடுமலை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர் கிராம ஊராட்சி (கூடுதல் ஆணையாளர்) ரமேஷ்குமாரிடம் விண்ணப்பித்துள்ளார். அப்போது, மனை அங்கீகார கட்டணமாக ரூ.10,118 ம், கூடுதலாக தனக்கு ரூ.20 ஆயிரம் லஞ்சமாக வழங்க வேண்டும் என வட்டார வளர்ச்சி அலுவலர் ரமேஷ்குமார் தெரிவித்துள்ளார். இந்த லஞ்சத் தொகையை தர மறுத்ததால் ஜெகனை பலமுறை ரமேஷ் அலை கழித்து வந்துள்ளார். இதன்பின்னர் லஞ்சத்தொகையில் ரூ.5 ஆயிரத்து குறைத்துக் கொண்ட ரமேஷ்குமார் ரூ.15 ஆயிரத்தை கட்டாயம் வழங்கினால் மட்டுமே மனை அங்கீகாரம் தர இயலும் என்று கூறியுள்ளார்.

இதனால் பெரும் அதிருப்தியடைந்த ஜெகன் இதுகுறித்து திருப்பூரில் உள்ள லஞ்ச ஒழிப்புத்துறையினரிடம் புகார் அளித்தார். இதனையடுத்து லஞ்ச ஒழிப்புத்துறை காவலர்கள் ஜெகனிடம் ரசாயனம் தடவிய ரூ. 15 ஆயிரத்தை கொடுத்து அனுப்பினர். இதன்பின் ஒன்றிய அலுவலகத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர் ரமேஷ்குமாரிடம், பணத்தை ஜெகன் கொடுத்தபோது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை துணை காவல் கண்காணிப்பாளர் ரவிச்சந்திரன் மற்றும் ஆய்வாளர்கள் கவுசல்யா, எழில்அரசி தலைமையிலான காவலர்கள் ரமேஷை கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர். இதன்பின் அவரிடம் இருந்த லஞ்சப்பணத்தை பறிமுதல் செய்து திருப்பூர் மாவட்ட குற்றவியல் தலைமை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இதைத்தொடர்ந்து நீதிபதியின் உத்தரவின்பேரில் ரமேஷ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இச்சம்பவம் உடுமலை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button