தமிழகம்

அதிகரிக்கும் இணைய வழி மோசடிகள்..! கடுமையான நடவடிக்கை எடுக்கப்படுமா..?

அறிவியல் வளர்ச்சியின் காரணமாக ஏராளமான நன்மைகள் இருந்தாலும் அதை தவறாகப் பயன்படுத்தும் நபர்கள் சமீபகாலங்களில் அதிகரித்து வருகிறார்கள். சில நாட்களாக இணைய வழி மோசடி சம்பந்தமாக காவல் நிலையங்களில் அதிகமான வழக்குகள் பதிவாவதாக தெரியவருகிறது.

இந்நிலையில் இணையவழி திருமணத் தகவல் மையம் மூலம் ஆசை வார்த்தை கூறி கோடிக்கணக்கில் பணம் நகைகளை சுருட்டியதோடு, கொலை மிரட்டல் விடுத்து மிரட்டப்பட்டதாக சென்னை பெரம்பூரைச் சேர்ந்த செந்தில் பிரகாஷ் என்பவர் மீது கனடாவில் வசித்து வந்த பச்சையப்பன் என்பவர் காவல்துறை கூடுதல் ஆணையர் (தெற்கு) அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

கனடாவில் வசித்து வரும் பச்சையப்பனுக்கு வித்யா என்பவருடன் திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். கடந்த 2020 ஆம் வருடம் பச்சையப்பனுக்கும் அவரது மனைவி வித்தியாவுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு கணவன், மனைவி இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இதுசம்பந்தமாக சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டு, வழக்கில் தற்போது இருவரும் சேர்ந்து வாழ்வதாக இருவரும் சமாதானமான நிலையில் வழக்கும் முடித்து வைக்கப்பட்டுள்ளது.

கணவன், மனைவி இருவரும் பிரிந்து வாழ்ந்த சமயத்தில் அதாவது 2020 ஆம் ஆண்டில் மறுமணம் செய்வதற்காக இணையதளம் மூலமாக விவாகரத்தான மற்றும் விதவை பெண் தேவை என திருமணத் தகவல் மையத்தில் தனது தொடர்பு எண்ணுடன் பதிவு செய்து வைத்திருக்கிறார் பச்சையப்பன்.

சென்னை பெரம்பூரில் வசித்துவரும் பிரகாஷ் என்பவர் பச்சையப்பனைத் தொடர்பு கொண்டு தனது தங்கை இளம் வயது விதவை எனவும், அவருக்கு உங்களை மிகவும் பிடித்திருக்கிறது. திருமணம் செய்து கொள்ள சம்மதம் தெரிவித்து ஆசை வார்த்தைகளைக் கூறி பச்சையப்பனை மயக்கியுள்ளார் பிரகாஷ். இதனைத் தொடர்ந்து பிரகாஷின் ஆசை வார்த்தைகளை நம்பி ஆன்லைன் மூலமாக (1,35,25,925) ஒரு கோடியே முப்பத்தி ஐந்து லட்சத்து இருபத்தி ஐந்தாயிரத்து தொள்ளாயிரத்து இருபத்தி ஐந்து ரூபாயை பறித்துள்ளார் பிரகாஷ்.

இந்நிலையில் பிரகாஷின் தங்கை ராஜேஸ்வரியை பார்ப்பதற்காக கடந்த மார்ச் 2 ஆம் தேதி கனடாவிலிருந்து சென்னைக்கு வந்து ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள நட்சத்திர விடுதியில் தங்கியுள்ளார் பச்சையப்பன். பிறகு பிரகாஷை தொடர்பு கொண்டு உனது தங்கைக்கு பரிசுப் பொருட்கள் வாங்கி வந்துள்ளேன் வந்து அதனை பெற்றுக் கொள்ளுமாறு அழைத்துள்ளார். பிரகாஷ் தனது தங்கையை அழைத்து வராமல் தனியாக வந்து பொருட்களைத் தருமாறு மிரட்டி தகராறு செய்து ரூ 3,60,903 மதிப்புடைய பொருட்களை எடுத்துக் கொண்டதோடு கொலைமிரட்டல் விடுத்து சென்றுள்ளார். பச்சையப்பனும் பயத்தில் கனடா புறப்பட்டுச் சென்றுள்ளார்.

இந்நிலையில் கடந்தவாரம் மீண்டும் சென்னை வந்து காவல்துறை துணை ஆணையர் (தெற்கு) அலுவலகத்தில் புகார் கொடுத்துள்ளார். இதனைத் தொடர்ந்து இராயப்பேட்டை துணை ஆணையர் புகாரைப் பெற்று வழக்குப் பதிவு செய்துள்ளார். இதனைத் தொடர்ந்து ஆய்வாளர் பசுபதி தலைமையில் காவல்துறையினர் பிரகாஷின் வீட்டிற்குச் சென்று அவரை கைது செய்துள்ளனர். அவரிடமிருந்து பரிசுப் பொருட்கள், பணம் உள்ளிட்ட தங்க நகைகளை பறிமுதல் செய்துள்ளனர். அதோடு பிரகாசை காவல்நிலையம் அழைத்து வந்து வாக்குமூலம் பெற்று சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.

அரசாங்கமும், காவல்துறையும் இணையவழி மோசடிகள் குறித்து எவ்வளவு விழிப்புணர்வு பிரச்சாரங்கள் செய்தாலும், இதுபோன்ற மோசடிகள் நடந்து கொண்டுதான் இருக்கிறது. இணையவழி மோசடிகளை குறைக்க அரசும் காவல்துறையும் கடுமையான நடைமுறைகளைப் பின்பற்ற வழிவகை ஏற்படுத்த வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

– நமது நிருபர்

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button