ஆவடி மாநகராட்சி கவுன்சிலருக்கு கௌரவ டாக்டர் பட்டம் : விருது வழங்கி கௌரவித்த அமெரிக்க பல்கலைக்கழகம்
சென்னைக்கு அருகே புதிதாக உருவாக்கப்பட்ட ஆவடி மாநகராட்சியில் 40வது வார்டில் மாமன்ற உறுப்பினராக வெற்றி பெற்ற சத்யா கோ.ரவி என்பவரின் செயல்பாடு சிறப்பாக இருப்பதாக அப்பகுதிவாசிகள் பேசிக் கொண்டதின் அடிப்படையில் அப்பகுதியில் நமது குழுவினர் கள ஆய்வு செய்ததில் சத்யா கோ.ரவி ஆக்டிவ் கவுன்சிலர் என்று குறுகிய காலத்தில் பெயரெடுத்துள்ளார் என்பது தெரிய வருகிறது.
இவர் தினசரி அதிகாலையிலே இவரது வார்டுக்கு உட்பட்ட தெருக்களை ஆய்வு செய்வதை வழக்கமாக கொண்டுள்ளாராம். அவ்வாறு ஒருநாள் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் சென்றபோது, சில நாட்களாக குப்பைகள் சேகரிக்கும் மாநகராட்சி துப்பரவு பணியாளர்கள் குப்பைகளை சேகரிக்க வரவில்லை. இதனால் இப்பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. மேலும் தொற்றுநோய் ஏற்படும் அபாயம் உள்ளதாக அப்பகுதியினர் இவரிடம் கூறியுள்ளனர்.
உடனடியாக வீட்டுவசதி வாரியக் குடியிருப்புவாசிகளை அழைத்துச் சென்று ஆவடி மாநகராட்சி அலுவலகத்திற்குச் சென்று மாநகராட்சி அதிகாரிகளை முற்றுகையிட்டு தனது வார்டில் உள்ள அவலநிலையை எடுத்துச் சொல்லியிருக்கிறார். அதிகாரிகள் துப்புரவு பணியாளர்களை அழைத்து விசாரணை செய்தபோது அந்தப் பகுதிக்கு இரண்டு வாகனங்கள் குப்பைகளை சேகரிப்பதற்காக பயன்படுத்தப்பட்டது. தற்போது இரண்டு வாகனங்களும் பழுதாகி இருப்பதால் குப்பைகள் சேகரிக்க இயலவில்லை என கூறியிருக்கிறார்கள்.
மாநகராட்சி அதிகாரிகள் அன்றைய தினமே 40வது வார்டில் உள்ள வீட்டு வசதி வாரியக் குடியிருப்பு பகுதியில் குப்பைகளை சேகரிக்க நான்கு வாகனங்களை ஒதுதுக்கியதோடு, எட்டு மாநகராட்சி துப்புரவு பணியாளர்களையம் நியமித்துள்ளனர். இனிமேல் வார்டில் உள்ள அனைத்து தெருக்களிலும் குப்பைகள் தேங்காமல் பார்த்துக் கொள்வதாக மாநகராட்சி அதிகாரிகள் உறுதியளித்துள்ளனர். இதனால் கவுன்சிலருடன் சென்ற அப்பகுதியினர் கோரிக்கை வைத்ததும் உடனடியாக நிவர்த்தி செய்த கவுன்சிலர் சத்யா கோ.ரவியை பாராட்டிச் சென்றுள்ளனர்.
மேலும் தனது வார்டில் கழிவுநீர் வாய்க்கால்களில் ஆங்காங்கே அடைப்புகள் ஏற்பட்டு கழிவு நீர் செல்லாமல் தேங்கி கிடக்கும் இடங்களில் உடனடியாக மாநகராட்சி ஊழியர்களை வரவழைத்து கழிவுநீர் வாய்க்காலில் ஏற்பட்டுள்ள அடைப்புகளை சரிசெய்து கழிவு நீர் தேங்காதவாறு தூர்வாரும் பணிகளையும் மேற்கொண்டுள்ளாராம். பதவியேற்ற சில நாட்களிலேயே தினசரி தனது வார்டு பகுதிகளை ஒவ்வொரு தெருவாக சுற்றி வந்து அன்றாடம் மக்களுக்குத் தேவையான அத்தியாவசிய தேவைகளில் அதாவது குடிநீர், மின்சாரம், சாலைகள், கழிவுநீர் சீரமைப்பு போன்றவற்றில் குறைகள் ஏற்படாமல் இருக்குமாறு பார்த்துக்கொள்வதாக அப்பகுதியினர் கூறுகின்றனர்.
சமீபத்தில் சவுத் வெஸ்டர்ன் அமெரிக்க பல்கலைக்கழகம் சார்பில், குளோபல் அச்சீவர்ஸ் கவுன்சில் நிறுவனத்தின் சாதனையாளர்களுக்கு விருது வழங்கும் விழா சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்றது. ஆவடி மாநகராட்சி 40வது வார்டு மாமன்ற உறுப்பினர் சத்யா கோ.ரவியின் பணிகளைப் பாராட்டி இவருக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கி கௌரவித்துள்ளது. இந்த விழாவில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத் தலைவர் பூச்சி முருகன் இவருக்கு விருது வழங்கி பாராட்டியுள்ளார்.
உள்ளாட்சியில் நல்லாட்சி நடைபெற அல்லும்பகலும் உழைத்து வரும் தமிழக முதல்வரின் கரங்களை வலுப்படுத்தும் வகையில் பணியாற்றி வரும் மாமன்ற உறுப்பினர் சத்யா கோ.ரவி போல் அனைவரும் பணியாற்றிட வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.