கருணாநிதியின் நினைவேந்தல் கூட்டத்தில் கலந்து கொண்ட மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, ஒரு மாநில கட்சி தேசிய அரசியலில் மிகப்பெரிய சக்தியாக திகழ முடியும் என்பதை முதலில் நிரூபித்துக் காட்டியவர் கருணாநிதி என்று புகழாரம் சூட்டியுள்ளார்.
மறைந்த திமுக தலைவர் கலைஞர் கருணாநிதியின் நினைவேந்தல் கூட்டம் சென்னை நந்தனத்தில் நடைபெற்றது. திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்திற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலை வகித்தார். விழாவில் மத்திய அமைச்சர் நிதின்கட்கரி, முன்னாள் பிரதமர் தேவகவுடா, காங்கிரஸ் கட்சியை சேர்ந்த குலாம்நபி ஆசாத், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீத்தராம்யெச்சூரி, பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார், ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் ஃபரூக்அப்துல்லா, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் டி.ராஜா, புதுவை முதலமைச்சர் நாராயணசாமி, உள்ளிட்ட தேசிய தலைவர்கள் கலந்து கொண்டனர். முன்னாள் பிரதமர் தேவுகவுடா, கலைஞர் படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். கூட்டத்தில் பேசிய மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, நாட்டில் கூட்டணி அரசியலை முன்னிறுத்தி அதில் வெற்றியும் கண்டதில் கருணாநிதி முன்னோடி என்று கூறினார். மேலும் அவசர நிலையை ஜனசங்கத்தோடு சேர்ந்து எதிர்த்தவர் கருணாநிதி என்றும் நிதின் கட்கரி கூறினார்.
விழாவில் பேசிய பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார், கலைஞர், தன் வாழ்நாள் முழுவதும் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக உழைத்தவர் என்று புகழாரம் சூட்டினார். கிராமங்கள் மின்சார வசதி பெறவும், பேருந்து வசதி பெறவும் திட்டங்களை வகுத்தவர் கருணாநிதி என்று கூறினார். 2016-ல் கருணாநிதி ஆட்சிக்கு வந்திருந்தால் மதுவிலக்கை முழுமையாக அமல்படுத்தியிருப்பார் என்று நிதிஷ்குமார் கூறினார். கருணாநிதியின் கனவை அவரது மகன் ஸ்டாலின் ஆட்சிக்கு வந்ததும் நிறைவேற்றுவார் என நம்புவதாக நிதிஷ்குமார் கூறினார்.
மானுடத்தின் சமத்துவம், சகோதரத்துவம், சமூக நீதிக்காக போராடியவர் கலைஞர் கருணாநிதி என்று, இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் டி.ராஜா தெரிவித்துள்ளார். கலைஞர் நினைவேந்தல் நிகழ்ச்சியில் பேசிய அவர், கருணாநிதி ஒரு கட்சிக்கு சொந்தமானவர் அல்ல என்றும், இந்தியா முழுமைக்கும் அவர் சொந்தமானவர் என்று கூறினார். கருணாநிதிக்கு மரணம் இல்லை என்ற அவர், தமிழ் வாழும் வரை கருணாநிதி வாழ்வார் என்று கூறினார்.
இவரைத் தொடர்ந்து பேசிய புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி, மாநிலத்தில் சுயாட்சி, மத்தியில் கூட்டாட்சி என்ற கொள்கையை நாடு முழுவதும் பறைசாற்றியவர் கலைஞர் கருணாநிதி என்று கூறினார்.
நினைவேந்தல் கூட்டத்தில் பங்கேற்ற தலைவர்களுக்கு ‘Let us unite – Victory will be ours’ என்ற புத்தகத்தை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.