நாகப்பட்டினத்தில் சில நாட்களுக்கு முன்னர், கஜா நிவாரணப் பணிகளைப் பார்வையிடச் சென்ற அமைச்சர் ஓ.எஸ்.மணியனை, இளைஞர் ஒருவர் அரிவாளுடன் துரத்தும் வீடியோ காட்சி வெளியாகி பரபரப்பைக் கிளப்பியுள்ளது.
அந்த வீடியோவில் அரிவாளுடன் அமைச்சரின் காரைத் துரத்தும் நபரின் பெயர் ராஜா என்று பின்னர் தெரியவந்தது. இந்த சம்பவத்தை அடுத்து, காருடன் தப்பித்துச் சென்ற அமைச்சர் மணியன், தனது பாதுகாவலருடன் பைக்கில் எஸ்கேப் ஆனார்.
இது குறித்து போலீஸ் தரப்பில் விசாரித்தபோது, ‘இந்த சம்பவம் கடந்த நவம்பர் 18 ஆம் தேதி நடந்தது. நாகையின் விழுந்தாமண்டியில் கஜா நிவாரணப் பணிகளை அமைச்சர் பார்வையிட சென்ற போது இப்படி நடந்துள்ளது.
இது குறித்து 6 பேரை நாங்கள் கைது செய்து விசாரித்து வருகிறோம். 40 பேர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளோம். அரிவாளுடன் அமைச்சரைத் துரத்திய நபர், கடந்த சில நாட்களாக தலைமறைவாக உள்ளார். அவரை கூடிய சீக்கிரம் கண்டிப்பாக பிடிப்போம்‘ என்று கூறியுள்ளது.
கஜா புயல் தாக்கி, இரண்டு நாட்களுக்குப் பிறகும் அரசு தரப்பிலிருந்து எந்த வித நிவாரண உதவியும் வராததை அடுத்து, விழுந்தாமண்டி மக்கள் கொதிப்பில் இருந்ததாக தெரிகிறது.
அந்த நேரத்தில் அமைச்சர் மணியன், அங்கு வந்தது மக்களை மேலும் எரிச்சலூட்டியுள்ளது. அதன் தொடர்ச்சியாகத் தான் அரிவாளுடன் துரத்தும் சம்பவம் நடந்துள்ளது.