ரேசன் அரிசி கடத்தலில் வளம் கொழிக்கும் பலே கில்லாடி ! கண்டுகொள்ளாத அதிகாரிகள் !.?

தமிழ்நாடு அரசு ஏழை மற்றும் நடுத்தர குடும்பங்கள் பயன்பெறும் வகையில், பொது விநியோகத் திட்டத்தின் மூலம் அத்தியாவசியப் பொருட்களை விநியோகம் செய்து வருகிறது.
திருப்பூர் மாவட்டம், தாராபுரம், மூலனூர், வெள்ளக்கோவில் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில், பொது விநியோகம் திட்டத்தின் கீழ் ரேஷன் கடைகள் மூலம் பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கப்படும் அரிசியை குறைந்த விலைக்கு வாங்கி சக்திவேல் என்பவர், சட்டவிரோதமாக கடத்தி கள்ள சந்தையில் விற்று லாபம் சம்பாதித்து வருவதாக நீண்ட நாட்களாக அப்பகுதியினர் தெரிவித்து வந்ததையடுத்து, சமூக ஆர்வலர்கள் மூலனூர் பகுதியில் ரகசியமாக கண்காணித்து வந்துள்ளனர்.
அப்போது அந்த வழியாக வந்த ( TN 38 Q 0410 ), ( TN 38 3667 ) எண் கொண்ட இரண்டு மாருதி ஆம்னி வேன்களை மறித்து பார்த்தபோது, வாகனம் முழுவதிலும் சாக்கு மூட்டைகளில் ரேசன் அரிசி இருப்பது தெரியவந்துள்ளது.
பின்னர் அந்த வாகனத்தை ஓட்டிவந்த ஓட்டுநர்களிடம் விசாரித்தபோது, சக்திவேல் என்பவரிடம் வேலை பார்பதாகவும், தினசரி தாராபுரம் மூலனூர் வெள்ளக்கோவில் ஆகிய சுற்று வட்டாரங்களில் பொதுமக்களிடம் ரேசன் அரிசியை ஒரு கிலோ பத்து ரூபாய்க்கு வாங்கி, குடோனில் சேமித்து வைப்போம். பின்னர் அப்பகுதிகளில் உள்ள நிறுவனங்களில் வேலை பார்க்கும் வெளிமாநில தொழிலாளர்களுக்கு விற்பனை செய்தது போக மீதமுள்ள ரேசன் அரிசியை வெளிமாநில வியாபாரிகளுக்கு விற்பனை செய்வதாகவும் கூறியுள்ளார். மேலும் அப்பகுதியில் செல்வாக்கு மிக்க நபராக சக்திவேல் இருப்பதாகவும், அவரை யாரும் ஒன்றும் செய்யமுடியாது. இதேபோல் தினந்தோறும் 50 ஆம்னி வேன்களில் தினந்தோறும் தொழில் செய்து வருகிறார் எனவும் கூறுகின்றனர். பின்னர் நடந்த சம்பவங்களை வீடியோ பதிவு செய்துகொண்டதோடு, எச்சரிக்கை விடுத்து இரண்டு வாகனங்களையும் அனுப்பி வைத்துள்ளனர்.
மேலும் குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத் துறையினர்,
அத்தியாவசியப் பொருட்கள் கடத்தல் மற்றும் பதுக்கல் செய்தவர்கள் மீதும், அவர்களுக்கு உடந்தையாக இருந்தவர்கள் மீதும் அத்தியாவசியப் பொருட்கள் கடத்தல் சட்டம் 1955-ன் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, கடத்தலுக்குப் பயன்படுத்திய வாகனங்களையும் பறிமுதல் செய்வதோடு, உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.