கக்கூஸ் முதல் கம்ப்யூட்டர் வரை: கமிஷன் கேட்கும் அமைச்சர்: புலம்பலில் அதிமுகவினர்…
ஆங்கிலேயர்கள் நமக்கு சுதந்திரம் கொடுத்தபோதே மன்னராட்சி முடிவுக்கு வந்து மக்களாட்சி நடைமுறைக்கு வந்துவிட்டது. ஆனால் இன்றும் தமிழக அமைச்சர்களில் ஒருவர் தன்னை மன்னராகவே பாவித்து வலம் வந்து கொண்டிருக்கிறார் என்று இராமநாதபுரம் மாவட்ட மக்கள் புலம்பி வருகிறார்கள்.
என்னதான் நடக்கிறது இராமநாதபுரத்தில் என்று நாம் விசாரித்தபோது, இராமநாதபுரம் மாவட்டத்தில் நான்கு சட்டமன்றத் தொகுதிகள். கடந்த 2016 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக, பரமக்குடி (தனி), இராமநாதபுரம் ஆகிய இரண்டு தொகுதிகளிலும், அதன் கூட்டணி கட்சியான முக்குலத்தோர் புலிப்படையின் சார்பில் நடிகர் கருணாஸ் திருவாடனையிலும் வெற்றி பெற்றார். எஞ்சிய ஒரு தொகுதியான முதுகுளத்தூரில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் வெற்றி பெற்றது. இராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினராக டாக்டர் மணிகண்டன் வெற்றி பெற்றார். இவருக்கு அப்போதைய முதல்வர் ஜெயலலிதா கட்சியின் மாவட்டச் செயலாளர் பதவி கொடுத்தது மட்டுமல்லாமல் அமைச்சர் பதவியும் கொடுத்து அழகு பார்த்தார். அமைச்சரான சில நாட்களிலேயே இவருடைய கட்சி செயல்பாடுகள் சிறுபிள்ளைத்தனமாக இருந்ததால் இவரிடம் இருந்து மாவட்டச் செயலாளர் பதவியை பறித்து முதுகுளத்தூர் சட்டமன்றத் தொகுதியில் தோல்வி அடைந்த அதிமுக வேட்பாளர் கீர்த்திகாவின் கணவர் முனியசாமியிடம் வழங்கினார். அதன்பிறகும் அமைச்சர் என்ற அகந்தையில் கட்சியின் கடைக்கோடி தொண்டன் முதல் மாவட்டச் செயலாளர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் வரை யாரையும் சட்டை செய்யாமல் நடந்து கொண்டதால் ஓரிரு தினங்களில் மணிகண்டனின் அமைச்சர் பதவியை பறிக்கும் மனநிலையில் இருந்த ஜெயலலிதா திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிலமாதங்களில் உயிரிழந்தார். அதன்பிறகு மணிகண்டனின் செயல்பாடுகள் அனைத்தும் தலைகீழாக மாறியது. இராமநாதபரத்தில் தான்தான் அதிமுக, தான் சொல்வதுதான் சட்டம். நான் சொல்வதை மட்டுமே ஆட்சியர் முதல் அதிகாரிகள் வரை அனைவரும் செயல்படுத்த வேண்டும் என்று உத்தரவுகளை பிறப்பிக்கத் தொடங்கினார். மாவட்டத்தில் காண்ட்ராக்ட் டெண்டர்கள் கக்கூஸ் முதல் கம்ப்யூட்டர் வரை எதுவானாலும் இவருக்கு கப்பம் கட்டுபவர்களுக்கு மட்டுமே கிடைக்கச் செய்தார்.
இவரைப் பற்றி கோட்டை வட்டாரத்தில் மேலும் விசாரிக்கையில், இராமநாதபுரம் ராம்கோ கூட்டுறவு சங்கத்தின் தலைவராக தனது தந்தையை அமர வைத்தார். ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் தகவல் தொழில்நுட்பத் துறையில் பல கோடி ரூபாய் முறைகேடு செய்ததாக ஓரங்கட்டப்பட்ட ஒரு நிறுவனத்திற்கு பல கோடி ரூபாய் கமிஷன் பேசி மீண்டும் அந்த நிறுவனத்திற்கு டெண்டர் கொடுத்திருக்கிறார். அவர்கள் இவர் கேட்ட கமிஷன் தொகையை வழங்காததால் அந்த டெண்டரை மீண்டும் இவரே ரத்து செய்துவிட்டாராம். தற்போது எடப்பாடி தரப்பினர் செட்டாப் பாக்ஸ்கள் வாங்க அதே நிறுவனத்திற்கு டெண்டர் கொடுக்க ஏற்பாடுகள் செய்தார்களாம். தனது துறையில் தனக்குத் தெரியாமல் முதல்வர் தரப்பில் டெண்டர் கொடுத்தால் தனக்கு கிடைக்க வேண்டிய கமிஷன் தொகை கிடைக்காது என்ற ஆத்திரத்தில் தலைமை செயலாளரிடம் சென்று புகார் கொடுத்திருக்கிறார். ஆனால் இவரது புகாரை தூக்கி ஓரமாக வைத்து விட்டு இவர் எதிர்ப்பு தெரிவித்த நிறுவனத்திற்கு மேலும் 15 லட்சம் மடிக்கணிணிகளை வாங்க மூவாயிரம் கோடி ரூபாய் டெண்டரை அதே நிறுவனத்திற்கு வழங்க தயாராகி விட்டார்களாம் முதல்வர் தரப்பினர்.
இதனை அறிந்த அமைச்சர் கோபத்தின் கடைசி எல்லைக்கே சென்று விட்டாராம். டெண்டர் மட்டும் அந்த கம்பெனிக்கு போகட்டும்.. அப்போது நான் யாரென்று தெரியும் என்று தன்னைச் சுற்றி இருப்பவர்களிடம் கூறி வருகிறாராம்.
இவரைப் பற்றி மூத்த நிர்வாகிகள் நம்மிடம் கூறுகையில், எங்களுக்கு நன்மைகள் செய்வார் என்று அம்மா அவர்கள் எங்களிடம் வாக்கு கேட்டதால் இவருக்கு வாக்களித்து சட்டமன்ற உறுப்பினராக இவரைத் தேர்ந்தெடுத்தோம். ஆனால் இவர் இந்த தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் என்பதை மறந்து இந்த மாவட்டத்தின் மன்னராக (கிங் ஆப் ராம்நாட் & KING OF RAMNAD) தன்னை நினைத்துக் கொண்டு வலம் வருகிறார் என்று புலம்புகிறார்கள்.