நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாத வக்பு வாரியம்
மதுரையின் மையப்பகுதியான பெரியார் பேருந்து நிலையம் அருகில் அமைந்துள்ளது காஜிமார் பெரிய பள்ளி வாசல். இந்த பள்ளிவாசல் 800 வருடங்களுக்கும் மேல் பழமையும், பெருமையும் வாய்ந்த பள்ளிவாசல்.
சங்கம் வைத்து தமிழ் வளர்த்த பாண்டிய மன்னரால் இஸ்லாமியர்கள் தொழுகை நடத்துவதற்காக இந்த இடம் வழங்கப்பட்டிருக்கிறது. இந்த பள்ளிவாசலை பராமரிப்பதற்காக மதுரையைச் சுற்றி பல ஏக்கர் நிலங்களையும் இலவசமாக வழங்கியிருக்கிறார்கள். தற்போது இந்த நிலங்கள் பல கோடி மதிப்புள்ள நிலங்களாக திகழ்கிறது. இந்த பள்ளிவாசலில் தற்போது இஸ்லாமியர்கள் இருபிரிவினராக செயல்பட்டு பள்ளி வாசலையும், சொத்துக்களையும் யார் பராமரிப்பது என்று சண்டையிட்டுக் கொண்டு நீதிமன்றம் வரை சென்று போராடி வருகிறார்கள் என்று கேள்விப்பட்டதும் என்னதான் நடக்கிறது என்று நமது குழுவினர் சென்று விசாரிக்கையில் பல திடுக்கிடும் தகவல்களை கேட்டதும் நமக்கே அதிர்ச்சியாக இருந்தது. இந்த பள்ளிவாசலைச் சேர்ந்த பெயர் குறிப்பிட விரும்பாத ஒருவர் நம்மிடம் கூறுகையில்,
“பாண்டிய மன்னரால் இலவசமாக வழங்கப்பட்ட நிலங்களை பராமரிக்கவும், பள்ளிவாசலை சுத்தம் செய்யவும் பணியமர்த்தப்பட்டவர்கள் இன்று அந்த நிலங்களை சொந்தம் கொண்டாடுகிறார்கள். உலகத்திலேயே எங்குமே இல்லாத சட்டம் இந்த பள்ளிவாசலில் மட்டும் இருக்கிறது. அதாவது மொழிவாரியாக உருது பேசும் முஸ்லீம்கள் மட்டும் தான் தொழுகையின் போது முன் வரிசையில் அமர்ந்து தொழுகை நடத்த வேண்டும். தமிழ் பேசும் முஸ்லீம்கள் பின் வரிசையில்தான் தொழுகை நடத்த வேண்டும்.
தமிழ் வளர்த்த பாண்டிய மன்னரால் வழங்கப்பட்ட பள்ளிவாசலில் தமிழ் பேசும் இஸ்லாமியர்களின் இறந்த சடலங்களை அடககம் செய்ய இடம் தர மறுக்கிறார்கள்.
இஸ்லாத்தில் இல்லாத ஜாதி வேறுபாட்டை இவர்கள் கடைபிடிக்கிறார்கள். உருது பேசும் முஸ்லீம்கள்தான் உயர்ந்த ஜாதி, தமிழ்நாட்டில் தமிழ் பேசும் முஸ்லீம்கள் தாழ்ந்த ஜாதி என்று வேறுபடுத்தி இறந்தவர்களின் சடலத்தை அடக்கம் செய்ய மறுக்கிறார்கள். இந்த அநீதிக்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்க ஒரு பிரிவினர் உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். பள்ளி வாசலை வக்பு வாரியம் கையகப்படுத்தி நிர்வகிக்க வேண்டும் என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர் தற்போது நிர்வகித்து வரும் நிர்வாகத்தினர். ஆனால் இவர்களின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்.
இந்நிலையில் கடந்த 26.2.19 அன்று ஆர்.டி.ஓ தலைமையில் வக்பு வாரியம் பள்ளிவாசலை கையகப்படுத்த சென்றபோது நிர்வாகிகளும், குண்டர்களும் அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்தி வெளியே அனுப்பிவிட்டு பள்ளிவாசலைப் பூட்டி தங்கள் வசப்படுத்தினார்கள். நீதிமன்ற உத்தரவை நிறைவேற்ற வந்த அரசு அதிகாரிகளை தங்கள் பணியை செய்ய விடாமல் தடுத்துவிட்டார்கள். இதனால் இருபிரிவினருக்கிடையில் மிகப்பெரும் கலவரம் ஏற்படும் சூழல் நிலவுகிறது. தமிழக அரசு உடனடியாக தலையிட்டு பள்ளிவாசலையும் அதற்கு சொந்தமான சொத்துக்களையும் கையகப்படுத்தி வக்பு வாரியத்திடம் ஒப்படைக்க வேண்டும்.
நடவடிக்கை எடுப்பார்களா? ஆட்சியாளர்கள். பொறுத்திருந்து பார்ப்போம்.