பரமக்குடி சட்டமன்றத் தொகுதி: அதிமுக வேட்பாளர் யார்?
அகில இந்திய அளவில் நாடாளுமன்றத் தேர்தலுக்கு அனைத்து தேசிய மற்றும் மாநில கட்சித் தலைவர்கள் தயாராகி வருகிறார்கள். தமிழகத்திலும் அதிமுக தவிர மற்ற கட்சித் தலைவர்கள் நாடாளுமன்றத் தேர்தலோடு சட்டமன்றத் தேர்தலும் வரும் என்று எதிர்பார்ப்பில் இருக்கிறார்கள்.
இந்நிலையில் ஆளும் கட்சியான அதிமுக இடைத்தேர்தல் பொறுப்பாளர்களை நியமித்து தீவிர தேர்தல் வேலைகளை செய்து வருகிறது. வேட்பாளர் தேர்வு செய்யும் படலமும் நடைபெறுகிறது.
இடைத்தேர்தலில் போட்டியிட விரும்புபவர்களிடம் மனுக்களை பெற்று யாருக்கு தலைமை வாய்ப்பு வழங்க இருக்கிறதோ அவர்களைப் பற்றி காவல்துறை விசாரித்து தலைமைக்கு அறிக்கை அனுப்புவதும் அந்த அறிக்கை வந்ததும் வேட்பாளர் பெயர் அறிவிப்பு செய்வதும் கடந்த கால நடைமுறை வழக்கம்.
அதேபோல பரமக்குடி சட்டமன்றத் தொகுதி (தனி)யில் அதிமுக தலைமையில் இருந்து இருவருக்கு காவல்துறை விசாரணை வந்திருக்கிறது. ஒருவர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆ.பாலுச்சாமியின் மகன் வழக்கறிஞர் இந்திரஜித் ஆவார். இவரைப் பற்றி ஏற்கனவே நாம் எழுதியிருந்தோம்.
மற்றொருவர் அரசு போக்குவரத்து கழக காரைக்குடி மண்டல மத்திய சங்க துணைச்செயலாளராக பணியாற்றியவரும், எம்ஜிஆர் மன்ற பரமக்குடி ஒன்றியச் செயலாளரும், பரமக்குடி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் உக்கிரபாண்டியனின் மருமகன் பாலசுப்பிரமணியன்.
இவரைப் பற்றி பரமக்குடி தொகுதி அதிமுகவினர் மத்தியில் விசாரித்தபோது, அதிமுகவின் நிறுவனர் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் 1979&ல் தனது திருக்கரங்களால் தாலி எடுத்துக் கொடுத்து இவரது திருமணத்தை நடத்தி வைத்திருக்கிறார். முப்பது ஆண்டுகாலம் போக்குவரத்து கழக தொழிற்சங்க செயலாளராக பணியாற்றி இருக்கிறார். அதன் பிறகு 2011 இல் ஜெயலலிதாவால் எம்ஜிஆர் மன்ற ஒன்றிய செயலாளராக நியமிக்கப்பட்டு இன்று வரை சிறப்பாக பணியாற்றி வருகிறார். கடந்த 1996, 2001, 2006, 2011 மற்றும் 2016 ஆகிய ஐந்து முறை பரமக்குடி சட்டமன்றம் (தனி) தொகுதிக்கு போட்டியிட வாய்ப்பு கேட்டு விண்ணப்பித்து இருக்கிறார்.
அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா இறப்பிற்கு பிறகு ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் இருவரின் தலைமையில் கட்சி நிகழ்ச்சிகளையும், நலத்திட்ட உதவி வழங்கும் நிகழ்ச்சிகளையும் தொடர்ந்து நடத்தி தன்னால் முடிந்த உதவிகளை செய்து வருகிறார். தற்போது அதிமுக இரண்டாக பிரிந்து செயல்படுகிற இந்த சமயத்திலும் இரட்டை இலை இருக்கும் இடத்தில் அதாவது ஓபிஎஸ், இபிஎஸ் தலைமையில் இயங்கும் அதிமுகவிலேயே தொடர்ந்து கட்சிப் பணியாற்றுகிறார். இவர் சாதி சமய வேறுபாடு பார்க்காமல் அனைத்து சமூக மக்களின் அன்பைப் பெற்றவர் என்று இவரைப் பற்றி அதிமுக தொண்டர்கள் மட்டுமின்றி தொகுதி மக்களும் மேற்கண்டவாறு கூறுவதை கேட்டபோது நமக்கும் வியப்பாக இருந்தது.