என்னதான் ஆச்சு – பல்லடத்தை உலுக்கும் தொடர் சம்பவங்கள்
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் கடந்த சில நாட்களாக ஊருக்கு ஒதுக்குப்புறமாக உள்ள குடோன்களில் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் விற்பனை மற்றும் ஆன்லைன் லாட்டரி விற்பனை, கஞ்சா விற்பனை உள்ளிட்ட சட்டவிரோத பொருட்கள் விற்பனை அதிகரித்து வந்ததால் பொதுமக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில் பல்லடம் சுற்றுவட்டார பகுதிகளில் கண்காணிப்பை பலப்படுத்த தணியாக சிறப்பு போலீஸ் படை உருவாக்கப்பட்டு கண்காணிப்பை தீவிரப்படுத்தப்பட்டு வந்தது.
இந்நிலையில் போலீசாரின் அதிரடி வேட்டையில் சுமார் ஒன்றரை டண் குட்கா போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டு நான்கு பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும் மகாலட்சுமிநகர் பகுதியில் மெடிக்கல் கடை மற்றும் துணிக்கடையில் ஆன்லைன் லாட்டரி விற்பனையில் ஈடுபட்டுவந்த இருவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்நிலையில் இதன் தொடர்ச்சியால் பல்லடம் அருகே ஆறுமுத்தாம்பாளையம் பண்ணைக்காடு தோட்டம் பகுதியில் முத்துக்குமார் என்பவருக்கு சொந்தமான குடோனில் பிரபல தயாரிப்பு நிறுவனங்களான சர்பெக்சல், டிஎஸ் பட்டணம் பொடி ஆகியவற்றை போலியாக தயாரிக்கும் தொழிற்சாலை இயங்கி வருவதாக கோவையை நஞ்சப்ப கவுண்டர் வீதியை சேர்ந்த டிஎஸ் பட்டணம் பொடி நிறுவனத்தின் விற்பனை மேலாளர் சத்தியமூர்த்தி 36 என்பவர் பல்லடம் போலீசில் புகார் அளித்தார். இதையடுத்து இன்ஸ்பெக்டர் கோபாலகிருஷ்ணன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு அப்பகுதிக்கு சென்ற போலீசார் அந்த குடோனை சுற்றி வளைத்தனர். உள்ளே சென்று சோதனையிட்டபோது பிரபல நிறுவனத்தின் பெயரில் போலியாக சோப்பு பவுடர் மற்றும் டி எஸ் பட்டணம் பொடி நிறுவனத்தின் பெயரில் போலி பாக்கெட்டுகள் மற்றும் அவற்றை தயாரிக்கும் இயந்திரங்கள் ஆகியவை இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
பின்னர் அவற்றை பறிமுதல் செய்து குடோனுக்கு சீல் வைத்தனர். மேலும் இச்சம்பவம் தொடர்பாக போலியாக பிரபல நிறுவனத்தின் பெயரில் பொருட்கள் தயாரித்து விற்பனை செய்யும் தொழிற்சாலையை திருநெல்வேலியைச் சேர்ந்தவரும் தற்போது திருப்பூர் தென்னம்பாளையம் சந்தை எதிரே சுயம்புலிங்கம் ஸ்டோர் என்ற பெயரில் மளிகை கடை வைத்து நடத்தி வரும் லிங்கம் என்பவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
பல்லடத்தில் பிரபல நிறுவனங்களின் பெயரில் போலியாக பொருட்களை தயாரிக்கும் தொழிற்சாலையை போலீசார் கண்டுபிடித்து இருக்கும் சம்பவம் தொடர்பாக திருநெல்வேலியைச் சேர்ந்த மளிகை கடை அதிபர் லிங்கம் என்பவரை போலீசார் வலைவீசித் தேடி வருவது இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.