60 சதவீத பேருந்துகள் இயங்கும். தொமுச
பெட்ரோல், டீசல் விலை உயர்வு, தொழிலாளர் சட்டத் தொகுப்புகளை கைவிடுதல், பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்குதலை கைவிடுதல் உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, இன்றும் நாளையும் வேலைநிறுத்த போராட்டத்திற்கு தொழிற்சங்கங்கள் அழைப்பு விடுத்தன. அதன்படி, நாட்டின் முக்கிய தொழிற்சங்கங்களாக இருக்கும் சிஐடியூ, ஏஐடியுசி, தொமுச உட்பட 11 தொழிற்சங்கங்கள் இன்று வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டன.
வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டால் சம்பளம் கிடையாது என்று தமிழக அரசு அறிவித்துள்ள நிலையில் தொழிலாளர்களின் சம்பளத்தை இழந்தாலும் பரவாயில்லை. கட்டாயம் போராட்டத்தில் ஈடுபடுவோம் என தொழிற்சங்கங்கள் அறிவித்து போராட்டத்தில் ஊழியர்கள் பங்கேற்றனர்.
தமிழகத்தில் இன்று 32 சதவீத பேருந்துகள் இயங்கவில்லை. சென்னையில் 90 சதவீத பேருந்துகள் இயக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதன் காரணமாக வேலைக்கு செல்வோர்; பள்ளி, கல்லூரி மாணவ- மாணவியர் ஆகியோர் கடுமையாக பாதிக்கப்பட்டனர். நாளையும் வேலை நிறுத்தம் தொடரும் நிலையில், போதிய அளவில் பேருந்துகளை இயக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பில் இருந்தும் கோரிகை வைக்கப்பட்டது.
இதையடுத்து நாளை 60 சதவீத பேருந்துகளை இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய தொ.மு.ச பொருளாளர் நடாராஜன், பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் நலன் கருதி, நாளை முன்னணி தோழர்கள் மட்டும் பங்குபெறும் வேலை நிறுத்தம் நடைபெறும். நாளை 60 சதவீத பேருந்துகள் ஓடுவதற்கு வாய்ப்பு உள்ளது என்று தெரிவித்தார்.