ஹிஜாவு நிதி மோசடி… பாதிக்கப்பட்டவர்கள் கண்ணீர்
ஹிஜாவு நிதி நிறுவன மோசடியால் ஏமாந்த 5,000 பேரின் பட்டியலை, பொருளாதார குற்றப்பிரிவு போலீசாரிடம் 150 பேர் ஒன்றாக சென்று ஒப்படைத்தனர். ஆருத்ரா கோல்டு நிதி நிறுவனம், ஹிஜாவு நிதி நிறுவனம், LNS IFS நிதி நிறுவனங்களை நடத்தி மக்களிடம் மோசடி செய்த நபர்களை பிடிக்க பொருளாதார குற்றப்பிரிவு ஐஜி ஆசியம்மாள் தலைமையில் மாவட்ட அளவில் 30 காவலர்களைக் கொண்டு தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. இதில் ஹிஜாவுவால் ஏமாந்தவர்கள் பட்டியல் தற்போது ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இந்த ஹிஜாவு நிறுவனம் தொடங்கி 89,000 முதலீட்டாளர்களிடம் இருந்து ரூ. 4,400 கோடி வரை டெப்பாசிட்டாக பெற்றுள்ளது. ஆனால் இதற்கான மாதாந்திர வட்டி மற்றும் தொகையை திருப்பிச் செலுத்தவில்லை. இதுதொடர்பாக பயணாளிகள் புகார் அளித்ததன் பேரில் விசாரணை தொடங்கப்பட்ட நிலையில், ஹிஜாவுவின் 19 துணை நிறுவனங்களின் மேலாண்மை இயக்குநர்கள், கமிட்டி உறுப்பினர்கள் என 52 பேர் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டனர். அவர்களில் நேரு, குரு மணிகண்டன், முகம்மது ஷெரிப், சாந்தி, பால முருகன் கல்யாணி, பாலாஜி, பாரதி, ரவிச்சந்திரன், சுஜாதா, அலெக்சாண்டர், மகாலட்சுமி ஆகிய 10 பேர் கைதும் செய்யப்பட்டனர். இதையடுத்து 162 வங்கிக் கணக்குகளில் உள்ள 14.47 கோடி முடக்கப்பட்டுள்ளது. குற்றவாளிகளிடம் உள்ள சுமார் 45 கோடி மதிப்பிலான அசையா சொத்துகள் கண்டறியப்பட்டன.
இந்நிலையில், இந்த நிதி நிறுவன மோசடியால் ஏமாந்த 5 ஆயிரம் பேரின் பட்டியலை பொருளாதார குற்றப்பிரிவிடம் ஒப்படைத்துள்ளனர்.
இதையடுத்து செய்தியாளரிடம் பேசிய பாதிக்கப்பட்ட ஆட்டோ ஓட்டுநர், “ஹிஜாவு நிறுவனத்தில் ஷேர் மார்கட்டுல பணத்த போடுறதா சொல்லி எங்கள சேத்தாங்க. அதை நம்பி, 2021 டிசம்பர்ல ஒரு லட்சம் ரூபாய் பணம் போட்டேன். நாங்க விவசாய துறையில் வணிகத் துறையில முதலீடு பண்றோம். அதுல வர்ற 40 சதவீத லாபத்துல உங்களுக்கு 15 சதவீதம் கொடுக்குறோம்னு சொன்னாங்க. அதன் அடிப்படையிலதான் நாங்க பணத்த போட்டோம்.
முதலமைச்சரின் நிவாரண நிதிக்கு 25 லட்சம் ரூபாய் கொடுத்தாங்க. அதேமாதிரி கரியாபட்டியில சாய்பாபா கோயில் கட்டியிருக்காங்க. இதையெல்லாம் பாத்துட்டுதான் நல்ல கம்பெனியா இருக்குன்னு பணத்த கட்டுனோம். எங்கள ஏமாத்திட்டாங்கன்னு புகார் கொடுத்து 3 மாசமாச்சு. எந்த நடவடிக்கையும் எடுக்கல. இன்னிக்கு யார் யார் எவ்வளவு தொகை போட்டீங்கன்னு புகார் கொடுக்கச் சொன்னாங்க அதுக்குதான் வந்திருக்கோம்” என்றார்.
இந்த நிதி நிறுவன மோசடியில சிக்கி ரூ.60 லட்சம் பணத்தை ஏமாந்த பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் பேசியபோது “நீங்க எங்க நிறுவனத்துல முதலீடு செய்யுங்க, நீங்க 1 லட்சம் ரூபாய் முதலீடு செஞ்சா நாங்க 15 சதவீதம் ஷேர் தர்றோம்ன்னு சொல்லிதான் எங்கள சேர்க்க சொன்னாங்க. இதுல முக்கியமா குறிப்பிட்டுச் சொன்னது ‘ஏழை மக்கள இங்க கூப்பிட்டு வாங்க. அவங்கதான் முன்னேறனும்’ என்பதுதான். நான் 2021ல் 3வது மாசம் சேர்ந்தேன். அதுக்கு அப்புறமா 10 மாசமா யாரையும் நான் சேர்க்க விரும்பல. பண விஷயம் என்பதால, பயந்து கொண்டு பிரச்னையில் மாட்டிக் கொள்ளக் கூடாது என்பதால, நம்ம பொருளாதாரம் முன்னேறுனா போதும்னு இருந்தேன்.
அதுக்கு அப்புறமா என்கிட்ட ‘அதுல போடுங்க, இதுல போடுங்க’ன்னு சொல்லிச் சொல்லி பணம்போட வச்சாங்க. நான் அப்படி 60 லட்சம் ரூபாய் போட்டிருக்கேன். ஆனா இதுவரைக்கும் நான் 5 லட்சம் ரூபாய் தான் வாங்கியிருக்கேன். மிச்ச 55 லட்சத்துக்கு வழியும் கிடையாது. நாங்க தினக்கூலிதான். எங்களால இருக்குறத வச்சு நாலஞ்சு பேருக்கு உதவிதான் பண்ண முடுஞ்சது. அதுக்கு நான் வட்டியும் கட்டிக்கிட்டு இருக்கிறேன். புகார் கொடுத்ததுக்கு ஒரு ரசீது கூட இவங்க தரல. இப்ப மொத்தமா புகார் கொடுக்குறதுக்காக வந்திருக்கோம்.
இதன் மூலமா எங்களுக்கு தீர்வு கெடச்சா மிக மிக சந்தோஷம். ரோடு ரோடா நின்னுட்டோம். இதுக்கு மேல எங்களால் நடு ரோட்டுல நிற்க முடியல. ரோடு ரோடா நின்ன நாங்க இங்கேயும் நிக்கிறோம். எத்தனை நாளைக்குதான் நிக்க வைப்பாங்கன்னு தெரியல. தயவு செஞ்சு அதிகாரிகள் அத்தனை பேரும், இதில் தலையிட்டு எங்களுக்கு ஒரு நல்ல தீர்வை கூடிய சீக்கிரம் சொல்லனும்” என்றார்.
நாள்தோறும் 100 கோடி ரூபாய் மோசடி, 200 கோடி ரூபாய் மோசடி, 500 கோடி ரூபாய் மோசடி என்று செய்திகள் வந்தாலும் அதிக வட்டிக்கு ஆசைப்பட்டு மோசடி நிதி நிறுவனங்களிடம் சிறுக சிறுக சேர்த்த பணத்தை ஏமாறும் ஏழை மக்களின் துயரம் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. அரசு இவ்விஷயத்தில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே மக்களின் மிகப்பெரிய கோரிக்கையாக இருக்கிறது.
– நமது நிருபர்