6 TET தேர்வுகளில் மிகப்பெரும் முறைகேடு : சிபிஐ விசாரணை கோரும் தேர்ச்சி பெற்றோர் நல சங்கம்
ஆசிரியர் தகுதி தேர்வுகளில் இதுவரை நடைப்பெற்ற முறைகேடுகளில் வெளிப்படைத் தன்மையுடன் கூடிய சிபிஐ விசாரணை வேண்டும் என 2013 ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றோர் நல சங்கம் தெரிவித்துள்ளது.
நுங்கம்பாக்கத்தில் உள்ள டி.பி.ஐ (DPI) வளாகத்தில் இயங்ககூடிய ஆசிரியர் தேர்வு வாரிய இயக்குனரிடம் முறைகேடுகள் தொடர்பாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி 2013 ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றோர் நல சங்கம் சார்பில் மனு அளிக்கப்பட்டது.
இது தொடர்பாக, ஆசிரியர் தகுதித் தேர்வு தேர்ச்சி பெற்றோர் நல சங்கத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் இளங்கோவன் செய்தியாளர்களிடம் பேசிய போது, 2012-ம் ஆண்டு முதல் ஆசிரியர் தேர்வு வாரியத்தால் தகுதித் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. 2012 முதல் 2019 வரை 6 தேர்வுகள் நடைபெற்றுள்ளது.
நடைப்பெற்ற ஆசிரியர் தகுதி தேர்வுகள் அனைத்திலும் மிகப்பெரிய முறைகேடு நடந்துள்ளது. கடந்தவாரம் முதல்வர் தனிப்பிரிவிற்கு, முறைகேடுகள் நடந்துள்ளது குறித்தும் சிபிஐ விசாரணை வேண்டும் எனவும் மனு அளித்தோம். ஆனால் அந்த மனு மொட்டை மனுவாக பதில் அளிக்கப்பட்டுள்ளது. அந்த மனுவில் முகவரி தொலைபேசி உள்பட அனைத்தும் கொடுத்தும் மொட்டை மனு என தெரிவித்திருக்கிறார்கள்.
ஆசிரியர் தேர்வு வாரிய தேர்வு முடிவுகளில் இதுவரை வெளியிட்டுள்ள பட்டியல்களில் எந்த அதிகாரியின் கையெழுத்தும் இல்லாமல் பட்டியல் வெளியிட்டு இருப்பது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. ஜெயலலிதா ஆட்சியின் பொழுது 2016 குடியரசு தின விழாவிற்கு பிறகு தேர்ச்சி பெற்றவர்களுக்கு பணி வழங்க அறிவித்திருந்தார்கள்.
ஆனால் அதன் பிறகு எந்த பணியும் வழங்கவில்லை. 2018-ம் ஆண்டு சிபிஐ விசாரணை வேண்டுமென சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்து இருந்தோம் வழக்கு விசாரணையில் 2019-ல் அரசு பதில் மனு தாக்கல் செய்யச் வேண்டும் என நீதிமன்றத்தில் நீதிபதிகள் தெரிவித்தனர். ஆனால் இதுவரை எந்த பதில் மனுவும் தாக்கல் செய்யப்படவில்லை. முறைகேடுகளுக்கான ஆதாரங்களை நாங்கள் தெரிவித்தும் முறைகேடு நடக்கவில்லை என அரசு தெரிவிக்கிறது. 2012-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் ஒன்றரை மணி நேரம் நடந்த தேர்வில் நேரம் போதவில்லை என்று மறு தேர்வு நடத்தப்பட்டது. ஆனால் அந்த தேர்வில் 150-க்கு 140 மதிப்பெண்களை பலர் பெற்று இருப்பது சந்தேகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இதுகுறித்து புகார் தெரிவித்தும் இதுவரை நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை அதன் பிறகு மறு தேர்வில் 21,000 பணியிடங்கள் நிரப்பப் பட்டது.
ஆனால் இதுவரை அவர்களின் பட்டியலை வெளியிடாமல் அரசு பணி அமர்த்தி உள்ளது. 2013-ம் ஆண்டு நடைபெற்ற தேர்வு வாரியத்தில் முறைகேடு அதிகமாக நடைபெற்றது முறைகேடுகளில் இதுவரை எந்த அதிகாரியும் கைது செய்யப்படவில்லை.
குறிப்பாக மற்ற மாவட்டங்களில் நடைபெற்ற 42 மையத்தில் நடைபெற்ற தேர்தலில் 200 பேருக்கும் குறைவாக தேர்ச்சி பெற்றிருக்க கூடிய சூழலில் சேலத்தில் 2 மையங்களில் மட்டும் 600-க்கும் மேற்பட்டவர்கள் தேர்ச்சி பெற்றிருக்கிறார்கள். அது மிகப்பெரிய சந்தேகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
2013-ல் நடைபெற்ற ஆசிரியர் தகுதித் தேர்வில் இறுதி பட்டியலில் தேர்ச்சி பெற்றவர்களின் எந்த மதிப்பெண்ணும் குறிப்பிடப்படவில்லை மிகப்பெரிய அளவில் முறைகேடு நடந்திருக்கிறது. இது வரை நடைப்பெற்ற தேர்வுகளில் தேர்வர்கள் தான் முறைகேடுகளை தற்போது வரை வெளிக் கொண்டு வந்துள்ளார்கள். நியாயமான வெளிப்படைத் தன்மையுடன் கூடிய சிபிஐ விசாரணை வேண்டும்.
கணினி முறையில் நடைபெற்ற தேர்வுகளிலும் வெளியிட்ட பட்டியலில்களிலும் பல திருத்தங்கள் செய்யப்பட்டு இருக்கிறது. மாநிலம் முழுவதும் உள்ள மையங்களில் திருத்தங்கள் செய்யப்பட்டிருக்கிறது நிரூபிக்க முடியும்.தேர்வுகளில் வெளிப்படைத்தன்மை முற்றிலுமாக அற்றுப்போய்விட்டது.
முறைகேடுகளுக்கு தாயகமே ஆசிரியர் தேர்வு வாரியம் தான் நாங்கள் சொல்லும் முறைகேடு உண்மை இல்லை என்றால் நீதிமன்றம் மூலம் கொடுக்கும் தண்டனையை இரண்டு மடங்காக ஏற்றுக் கொள்ள தயாராக இருக்கிறோம் என கூறியுள்ளார்.
- செந்தில்குமார்