தமிழகம்

அனைத்து கட்சியினருக்கும் பகுதிநேர ஆசிரியர்கள் வேண்டுகோள்..!

தமிழக அரசு பட்ஜெட் மார்ச் 18 வெள்ளிக்கிழமை சட்டசபையில் தாக்கல் செய்தது.இதில் பள்ளிக் கல்வித்துறைக்கு சுமார் 37ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது திமுக அரசின் முதல் பட்ஜெட்டை காட்டிலும் 4300 கோடி அதிகமாக ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இந்த பட்ஜெட்டில் 300 கோடி ஒதுக்கி பகுதிநேர ஆசிரியர்களை நிரந்தரம் செய்ய வேண்டுகோள் வைத்து வருகிறார்கள். திமுக தேர்தல் அறிக்கை 181ஐ நிறைவேற்ற, ஆட்சிக்கு வந்த நாள் முதல் 10 மாதமாக எதிர்பார்ப்போடு உள்ளார்கள்.

2012 ஆம் ஆண்டு ரூபாய் 5ஆயிரம் தொகுப்பூதியத்தில் நியமித்த 16ஆயிரம் பேரில், கடந்த 10 ஆண்டுகளில் 4ஆயிரம் காலியிடங்கள் ஏற்பட்டது போக, எஞ்சியுள்ள 12ஆயிரம் பகுதிநேர ஆசிரியர்கள் தற்போதைய ரூபாய் 10ஆயிரம் தொகுப்பூதியத்தில் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு உள்ளார்கள்.

16வது சட்டசபையில் இதுவரை கொ.ம.தே.க பொதுச்செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன் (திருச்செங்கோடு), பாமக தலைவர் கோ.க.மணி (பெண்ணாகரம்), மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மா.சின்னதுரை (கந்தர்வக்கோட்டை), த.வா.க தலைவர் தி.வேல்முருகன் (பண்ருட்டி) மற்றும் அதிமுக முன்னாள் அமைச்சர் ரெ.வைத்திலிங்கம் (ஒரத்தநாடு) ஆகியோர்கள் பணி நிரந்தரம் கேட்டு குரல் எழுப்பி உள்ளார்கள்.

இதில் அதிமுக எம்எல்ஏ கேள்விக்கு, பள்ளிக்கல்வி அமைச்சர் தேர்தல் அறிக்கையின்படி பகுதிநேர ஆசிரியர்களை நிரந்தரம் செய்வோம் என பதில் அளித்துள்ளார்.இதை செயல்பாட்டுக்கு கொண்டு வர அரசாணை இதுவரை பிறப்பிக்கப் படவில்லை. பட்ஜெட்டில் அறிவிப்பில் இடம்பெறும் என இவர்கள் எதிர்பார்த்தனர். முதல் நாள் அறிவிப்பில் பகுதிநேர ஆசிரியர்கள் குறித்து எதுவும் சொல்லப்படவில்லை.எனவே வருகின்ற கூட்டத்தொடரில் அரசியல் கட்சி எம்.எல்.ஏக்கள் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வர வேண்டுகோள் வைக்கிறார்கள்.

இது குறித்து தமிழ்நாடு அனைத்து பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு மாநில ஒருங்கிணைப்பாளர் எஸ்.செந்தில்குமார் கூறும்போது பகுதிநேர ஆசிரியர்களை நிரந்தரம் செய்ய 300 கோடி ஒதுக்கினால் போதும். நிரந்தரம் செய்தால் 12ஆயிரம் குடும்பங்கள் வாழும். பகுதிநேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம் குறித்து 16வது சட்டசபையில் கொ.ம.தே.கட்சி,பாமக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், த.வா.கட்சி, அதிமுக கட்சி கோரிக்கை வைத்து பேசி உள்ளது.

அதுபோல இம்முறையும் அனைத்து கட்சியும் சட்டசபையில் தீர்மானம் கொண்டு வந்து பேசிட வேண்டுகோள் வைக்கிறோம். கடந்த 10 ஆண்டாக திமுகவும் சட்டசபையில் பகுதிநேர ஆசிரியர்களை நிரந்தரம் செய்ய குரல் எழுப்பியதை நினைவூட்டுகிறோம். எனவே, திமுக எம்.எல்.ஏக்களும் எங்களுக்கு இம்முறை குரல் கொடுத்து முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டுகிறோம். பெரும்பாலும் ஏழை, பின்தங்கிய நிலையில் இந்த வேலையில் உள்ளார்கள். 50 சதவீதம் பெண்கள் இதில் உள்ளார்கள்.

மேலும், இதில் உள்ள மாற்றுத்திறனாளிகள், விதவை நிலை மேம்பட தற்போது உள்ள 12ஆயிரம் பகுதிநேர ஆசிரியர்களை மாண்புமிகு முதல்வர் இந்த பட்ஜெட் கூட்டத் தொடரில் நிரந்தரம் செய்ய இதன் மூலமாக வேண்டுகோள் வைக்கின்றோம் என்றார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button