தமிழகம்

கஷ்டடி எடுத்து விசாரணை செய்ய அமலாக்கத்துறைக்கு அதிகாரம் உள்ளதா..?

ஜெயலலிதா முதலமைச்சராக இருந்தபோது கடந்த 2013ஆம் ஆண்டு போக்குவரத்துதுறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி ஓட்டுநர், நடத்துனர் பணிகளுக்கு பணி நியமனம் செய்வதாக பணம் வாங்கிக் கொண்டு பணிநியமனம் செய்யாமல் ஏமாற்றிவிட்டார் என்கிற குற்றச்சாட்டு எழுந்தது. அப்போது செந்தில்பாலாஜியிடம் இருந்த போக்குவரத்துத்துறை அமைச்சர் பதவியை பறித்தார். அதன்பிறகு 2016ஆம் ஆண்டு நடைப்பெற்ற சட்டசபைத் தேர்தலில் போட்டியிட ஜெயலலிதா செந்தில்பாலாஜிக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கினார்.

அந்தத் தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்ததாக தேர்தல் ஆணையம் அந்தத் தொகுதியில் தேர்தலை நிறுத்தியது. பிறகு நடைப்பெற்ற தேர்தலில் செந்தில் பாலாஜி வெற்றி பெற்றார். அதன்பிறகு ஜெயலலிதா மறைவிற்குப் பின் டிடிவி தினகரன் அணி, பின்னர் திமுக என தனது அரசியல் பயணத்தைத் தொடர்ந்தார். 2021ல் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் திமுக சார்பில் கரூர் தொகுதியில் போட்டியிட்டு முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரைத் தோற்கடித்து வெற்றி பெற்றார். அதனைத் தொடர்ந்து மின்சாரம் மற்றும் ஆயத்தீர்வை துறைகளுக்கு அமைச்சராகவும் நியமிக்கப்பட்டார்.

இந்நிலையில் பத்து வருடங்களுக்குப் பிறகு போக்குவரத்துத் துறையில் பணிநியமனங்களுக்கு பணம் வாங்கிய வழக்கு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டு விசாரித்த நீதிபதிகள் இரண்டு மாதங்களில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளது. அதன்பிறகு அமலாக்கத் துறை, வருமானவரித்துறை அதிகாரிகள் அமைச்சர் செந்தில் பாலாஜி உள்ளிட்ட அவரது உறவினர்கள் வீடுகளில் சோதனை நடத்தினார்கள். அதனைத் தொடர்ந்து சென்னையில் உள்ள அமைச்சரின் முகாம் அலுவலகத்தில் சோதனை நடத்தி அவரைக் கைது செய்தனர். இந்தச் செய்தி தமிழகம் முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டது. ஆளும்கட்சி உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் பாரதிய ஜனதா கட்சியினரின் அரசியல் பழிவாங்கும் நிகழ்வாக செந்தில் பாலாஜியின் கைதைப் பார்ப்பதாக கருத்துக்களை தெரிவித்தனர். பின்னர் கோவையில் எதிர்கட்சித் தலைவாகள் அனைவரும் மத்திய பாரதிய ஜனதா அரசுக்கு எதிராக கண்டன பொதுக்கூட்டம் நடத்தினர்.

இந்நிலையில் அமலாக்கத்துறையினர் செந்தில் பாலாஜியை கஷ்டடி எடுத்து விசாரணை மேற்கொள்ள வேண்டும் என நீதிமன்றத்தில் முறையிட்டு எட்டு நாட்கள் விசாரணை மேற்கொள்ள அனுமதியும் பெற்றனர். செந்தில் பாலாஜி தரப்பில் அவரை சட்டவிரோதமாக கைது செய்துள்ளனர் எனவும், அவரது மனைவி சார்பில் அவரை கண்டுபிடித்து நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டும் என ஆட்கொணர்வு மனுவுக்கு அமலாக்கத்துறை அதிகாரிகள் கடும் எதிர்ப்பை பதிவு செய்தனர். இதோடு அமலாக்கத்துறைக்கு கைது செய்யும் அதிகாரம் உள்ளது. அவர்கள் கஷ்டடி எடுத்து விசாரிக்க அதிகாரம் உள்ளதா என செந்தில்பாலாஜி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் கேள்வியை எழுப்பி நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளார்.

இதுபோன்ற வழக்குகளில் முன்னாள் நிதிஅமைச்சர் ப.சிதம்பரம், அவரது மகன் கார்த்தி சிதம்பரம், டில்லி துணை முதல்வர் மணிஷ்சிசோடியா உள்ளிட்ட பல தலைவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அப்போதெல்லாம் அமலாக்கத்துறை மீது யாரும் அவர்களுக்கு கஷ்டடி எடுத்து விசாரணை மேற்கொள்ள அதிகாரம் உள்ளதா? என்ற கேள்வியை எழுப்பவில்லை. செந்தில்பாலாஜி தரப்பில் ஆஜரான என்ஆர் இளங்கோவின் இந்த கேள்விக்கு நீதிமன்றம் அளிக்கும் பதிலுக்காக நாடே காத்திருக்கிறது. காவல்துறை அதிகாரிகள், கஸ்டம்ஸ் அதிகாரிகள், ஜிஎஸ்டி அதிகாரிகள் ஆகியோருக்கு மட்டுமே கஷ்டடி எடுத்து விசாரிக்கும் அதிகாரம் சட்டத்தில் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் அமலாக்கத்துறை அதிகாரிகளுக்கு அதிகாரம் உள்ளதா என்கிற வாதத்தை முன்வைத்துள்ளார். வழக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

செந்தில் பாலாஜி விஷயத்தில் கைது செய்யப்பட்டு 15 நாட்களில் ஒருவரை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கஷ்டடியில் எடுத்து விசாரிக்க வேண்டும். கைது செய்யப்பட்டு 15 நாட்கள் கடந்தால் ஒருவரை கஷ்டடியில் எடுத்து விசாரணை செய்ய இயலாது என சட்டம் சொல்கிறது எனவும் செந்தில் பாலாஜி வழக்கறிஞர் தனது வாதத்தை முன்வைத்துள்ளார். அமலாக்கத்துறை கஷ்டடி எடுத்து விசாரிக்க வேண்டி தாக்கல் செய்த மனுவில் செந்தில்பாலாஜியின் வங்கிக் கணக்கில் 1 கோடியே 35 லட்சம் பணமும், அவரது மனைவியின் வங்கிக் கணக்கில் 30 லட்சம் பணமும் அந்தக் காலகட்டத்தில் இருந்துள்ளது. இதனை அவரிடம் விசாரிக்க வேண்டும் என்கின்றனர்.

அமலாக்கத்துறை அதிகாரிகள் ஏற்கனவே இரண்டு நாட்கள் அவரிடம் விசாரணை நடத்திய பிறகு தான் அவரை கைது செய்துள்ளனர். இந்த வழக்கு கஷ்டடி எடுத்து விசாரிக்கும் அளவுக்கு பெரிய வழக்கும் அல்ல. பணி நியமனத்துக்கு பணம் வழங்கி வழக்கை விசாரணை செய்து இரண்டு மாதங்களில் அறிக்கை தாக்கல் செய்ய மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கில் அமலாக்கத்துறை இவ்வளவு நெருக்கடி கொடுத்து விசாரிக்க வேண்டிய அவசியமே இல்லை. முழுக்க முழுக்க எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் திமுகவை அரசியல் காழ்ப்புணர்ச்சியில் செந்தில் பாலாஜி மூலம் பழிவாங்கும் நடவடிக்கையில் பாரதிய ஜனதா கட்சி அமலாக்கத்துறை அதிகாரிகளை ஏவி விட்டுள்ளது என சாதாரண பொதுமக்களே பேசி வருகின்றனர்.

மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரிக்க வேண்டிய வழக்கில், அமலாக்கத்துறை தலையிட வேண்டிய அவசியம் என்ன இருக்கிறது. செந்தில் பாலாஜி, அவரது மனைவி வங்கி கணக்கில் உள்ள ஒன்றரைக் கோடி பணம் வருமான வரித்துறையில் கணக்கு காட்டப்பட்டுள்ளதா இல்லையா? அந்தப் பணம் எங்கிருந்து வந்தது என ஏற்கனவே விசாரித்த பிறகு மீண்டும் கஷ்டடி எதற்கு என வழக்கறிஞர்கள் கேள்வியை எழுப்புகின்றனர்.

செந்தில்பாலாஜி விஷயத்தில் அமலாக்கத்துறை நடந்து கொண்டவிதம் மக்கள் மத்தியில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அவர் குற்றவாளியா இல்லையா என்பதை மத்திய குற்றப்பிரிவு போலீசார் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தபிறகு நீதிபதிகள் முடிவெடுப்பார்கள். அமலாக்கத்துறைக்கு கஷ்டடி எடுக்கும் உரிமை இருக்கிறதா என்கிற வாதத்திற்கு நீதிபதிகள் அளிக்கும் பதிலுக்காக நாடே காத்திருக்கிறது. ஒட்டுமொத்த இந்திய மக்களும் எதிர்பார்க்கும் முக்கிய தீர்ப்பாக சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு அமையும்.

சூரியன்

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button