தமிழகம்

மதுவால் அதிகரிக்கும் கொலை, கொள்ளை, கற்பழிப்பு

சமீபகாலங்களாக தமிழகத்தில் அரசு மதுபான கடைகளில் மது அருந்திவிட்டு தன்னிலை மறந்து குற்றச்செயல்களில் பலர் ஈடுபட்டு வருவது அதிகரித்து வருகிறது. சமீபத்தில் நடந்த குற்றச்செயல்களே இதற்கு சாட்சி…
சமயநல்லூர் அருகே உள்ள டபேதார் சந்தை பகுதியை சேர்ந்தவர் நிருபன் சக்கரவர்த்தி. இவர், வீடுகளில் வண்ணம் தீட்டப் பயன்படும் சுண்ணாம்பு பவுடர் ஆலை நடத்தி வருகிறார்.
இந்த நிலையில் அதிகாலை நிருபன் சக்கரவர்த்தி வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த போது வீடு புகுந்த 6 பேர் கொண்ட மர்மகும்பல் அவரை சரமாரியாக அரிவாளால் வெட்டிக் கொலை செய்து விட்டு தப்பி சென்றது.


அவரது இரு கைகளும் மணிக்கட்டுகளோடு துண்டாக்கப்பட்டன. தடுக்க வந்த அவரது மனைவி பிரேமாவுக்கும் அரிவாள் வெட்டு விழுந்தது. தகவல் அறிந்து அங்கு சென்ற சமயநல்லூர் போலீசார், நிருபன் சக்கரவர்த்தியின் உடலை மீட்டு மதுரை அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர்.
கொலை நடந்த இடத்தை மதுரை எஸ்.பி., மணிவண்ணன் நேரில் சென்று பார்வையிட்டார். நிரூபன் சக்கரவர்த்திக்கும் அதே பகுதியை சேர்ந்த முத்து இருளன் என்பவருக்கும் கோவில் திருவிழா சமயத்தில் ஏற்பட்ட மோதல் தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் முத்திருளனை போலீசார் தேடி வருகின்றனர்.
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி காவல்நிலையத்தில் குடும்பத்தகராறில் தனது கணவரை கொன்றுவிட்டதாக பாண்டியம்மாள் என்ற பெண் சரணடைந்தார். உடனடியாக அவரது வீட்டுக்கு விரைந்த போலீசார், கழுத்தில் கத்திக்குத்து காயங்களுடன் கிடந்த முனியாண்டியின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பாண்டியம்மாளிடம் தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் கொலைக்கான உண்மையான காரணம் தெரியவந்தது.


முனியாண்டி – பாண்டியம்மாள் தம்பதியின் மகன் பாண்டி ரயிலில் இருந்து தவறி விழுந்து கால்களை இழந்தவர் என்று கூறப்படுகிறது. பாண்டியும் அவரது மனைவி மலரும் முனியாண்டி – பாண்டியம்மாள் தம்பதியரோடு ஒரே வீட்டில் வசித்து வந்துள்ளனர்.
பாண்டி – மலர் தம்பதியருக்கு திருமணமாகி 10 ஆண்டுகளுக்கு மேலாகியும் குழந்தை இல்லை என்று கூறப்படும் நிலையில், முனியாண்டி அவ்வப்போது மருமகள் மலருக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். இதனையறிந்து பாண்டியம்மாள் முனியாண்டியை பலமுறை கண்டித்துள்ளார்.
ஆனாலும் முனியாண்டி தனது நடவடிக்கைகளை மாற்றிக்கொள்ளாமல் தொடரவே, அவரை தீர்த்துக்கட்ட முடிவு செய்துள்ளார் பாண்டியம்மாள். அதன்படி மூன்று பேர் கொண்ட கூலிப்படை கும்பலை வைத்து கணவர் முனியாண்டியை கொலை செய்துள்ளார் பாண்டியம்மாள். பாண்டியம்மாளின் இந்த வாக்குமூலத்தை வைத்து அவரை கைது செய்த போலீசார், கூலிப்படை கும்பலை தேடி வருகின்றனர்.
சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே அழகாபுரி பகுதியை சேர்ந்தவர் வெள்ளைச்சாமி.


இவர் கொத்தனார் வேலை செய்து வருகிறார். மனைவி செல்லம்மாளும் கணவரோடு சேர்ந்து சித்தாள் வேலை செய்து வந்தார். வேலை முடித்து திரும்பும்போது மதுக்கடையில் இருவரும் சேர்ந்து மது வாங்கி வீட்டில் வைத்து குடிப்பதை வழக்கமாக கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. இவர்களுக்கு மாதவன் என்ற ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மகன் உள்ளார்.
தனது பெற்றோர் மது அருந்திவிட்டு அடிக்கடி சண்டை போடுவதால், அதே பகுதியில் உள்ள தனது சித்தி வீட்டிற்கு மாதவன் சென்று விடுவார். இந்நிலையில், வீட்டில் வெள்ளைச்சாமி, செல்லம்மாள் ஆகியோர் மது அருந்திய நிலையில், இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
அப்போது, வெள்ளைச்சாமி தனது மனைவியை கட்டையால் தலையில் பலமாக தாக்கியுள்ளார். பலத்த காயமடைந்த செல்லம்மாள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதையடுத்து, பள்ளத்தூர் காவல் நிலையத்தில், வெள்ளைச்சாமி சரணடைந்தார். அவரை கைது செய்த போலீசார் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பொள்ளாச்சி மகளிர் காவல்நிலையத்தில் 16 வயது சிறுமி ஒருவரை காணவில்லை என அவரது பெற்றோர் கடந்த 5ஆம் தேதி புகார் அளித்தனர்.


விசாரணையில் இறங்கிய போலீசார், சிறுமியோடு நெருங்கிப் பழகியதாகக் கூறப்படும் குமரன் நகர் பகுதியைச் சேர்ந்த அமானுல்லா என்ற இளைஞனை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் சிறுமியை காதலிப்பதாகக் ஆசை வார்த்தை கூறி பழகி வந்த அமானுல்லா, கடந்த 4ஆம் தேதி அவரை காரில் அழைத்துச் சென்று உல்லாசமாக இருந்துள்ளான்.
பின்னர் அவரை வீட்டுக்கு அழைத்து வர பயந்துகொண்டு வால்பாறை சாலையில் இறக்கிவிட்டுச் சென்றுள்ளான். இதனையடுத்து நண்பன் ஒருவனை செல்போனில் அழைத்த சிறுமி, தன்னை அழைத்துச் சென்று வீட்டில் விடுமாறு உதவி கேட்டுள்ளார்.
சிறுமியின் நிலையை போனிலேயே தெரிந்துகொண்ட அவரது நண்பன், மேலும் ஒரு நண்பனுடன் காரில் வந்துள்ளான். பின்னர் சிறுமியை அவர்கள் ஆழியாறு பகுதிக்கு அழைத்துச் சென்று சீரழித்துள்ளனர். அத்தோடு நில்லாமல் அவர்கள் மேலும் சில நண்பர்களை போனில் அழைக்கவே, அவர்களும் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாகக் கூறப்படுகிறது.
ஒருவழியாக அவர்களிடம் இருந்து தப்பிய சிறுமி உறவினர்களிடம் நடந்ததைக் கூறியுள்ளார். இதனையடுத்து காவல்நிலையத்தில் புகாரளிக்கப்பட்டு அமானுல்லா உட்பட 9 பேரும் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர்.
ஈரோடு அருகே நகை கடை அதிபரின் ஊழியர்களிடம் இருந்து மூன்றரை கோடி ரூபாயை கொள்ளையடித்த கும்பலை மூன்று மாதங்களுக்கு பின்னர் போலீசார் கைது செய்துள்ளனர்.
கேரளா மாநிலம் மலப்புரம் மாவட்டம் பூத்தானங்கடியை சேர்ந்த அன்வர் சதாத், மலப்புரத்திலும், கோவையிலும் சிட்டி கோல்டு என்ற பெயரில் நகைக் கடைகளை நடத்தி வருகிறார். நகைகளை தயாரிக்கும் அவர், அவற்றை,சென்னையில் உள்ள நகைகடைகளுக்கு விற்பனை செய்து வருகிறார்.
இதே போல கடந்த ஏப்ரல் மாதம் 3-ஆம் தேதி அன்று, சென்னையில் விற்பனை செய்த நகைகளுக்கான மூன்றரை கோடி ரூபாயை வாங்கி வருமாறு, ஊழியர்கள் மூன்று பேரை அனுப்பி வைத்தார். அவர்களும் பணத்தை பெற்றுக் கொண்டு கேரளாவுக்கு காரில் புறப்பட்டனர்.


ஏப்ரல் மாதம் 3 ஆம் தேதி காலை 4.30 மணி அளவில் ஈரோடு மாவட்டம் பெருந்துறையை அடுத்தள்ள விஜயமங்கலம் சுங்கச்சாவடியை அவர்களின் கார் தாண்டிபோது சுழலும் கொண்டை விளக்கு வைத்த வாகனத்தில் வந்த போலீஸ் உடை அணிந்த ஒரு கும்பல் ,அவர்களது காரை வழிமறித்து நிறுத்தியது. போலீசார் என்று கூறி ஊழியர்கள் மூன்று பேரையும் மிரட்டிய அந்த கும்பல், காரில் இருந்து மூன்றரை கோடி ரூபாயை பறித்துக் கொண்டது.
பின்னர் ஊழியர்கள் மூன்று பேரையும் கட்டிப் போட்டு விட்டு, அவர்கள் வந்த டஸ்டர் காரையும் எடுத்துக் கொண்டு சென்ற அந்த கும்பல், கோவை மாவட்டம் வாளையார் அருகே காரை நிறுத்தி, அதன் சாவியை எடுத்துக் கொண்டு சென்று விட்டது. இதன் பின்னர் ஊழியர்கள் அன்வார் சதாத்திற்கு தகவல் கொடுத்தனர். அவர் பெருந்துறை போலீசில் இதுகுறித்து புகார் கொடுத்தார்.
புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த பெருந்துறை போலீசார், விசாரணை நடத்தியதோடு, சம்பவம் நடைபெற்ற போது, அந்த இடத்தில் பயன்பாட்டில் இருந்த செல்போன் எண்களை கண்டறிந்து தேடும் பணியில் ஈடுபட்டனர். அப்போது ஒரு சில எண்கள் மட்டும் அணைக்கப்பட்டிருந்ததை கண்ட போலீசார் அவற்றை தொடர் கண்காணிப்பில் வைத்திருந்தனர்.
இதனிடையே நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்ற சூழலால், தேடும் பணியில் தீவிரத்தை குறைத்துக் கொண்டாலும், கண்காணிப்பு பணியில் தொடர்ந்து ஈடுபட்டனர். சந்தேகத்திற்கு உரிய செல்போன் எண்களை கண்காணிப்பதை போலீசார் நிறுத்தவே இல்லை.
இந்த நிலையில் கொள்ளை சம்பவம் நடைபெற்று மூன்று மாதங்கள் கடந்த நிலையில், அந்த செல்போன் எண்கள் மீண்டும் செயல்பட தொடங்கி இருப்பதை போலீசார் கண்டறிந்தனர். இதனால் செல்போன் எண்களின் சிக்னல் எங்கெங்கு தென்படுகிறது என்பதை கண்டறிய ஆரம்பித்தனர். அப்போது விஜயமங்கலம் வட்டாரத்தில் அதே எண்கள் மீண்டும் பயன்பாட்டில் உள்ளதை கண்டறிந்த போலீசார் வாகன சோதனையை தீவிரப்படுத்தினர்.
அப்போது ஒரு காரில் வந்த 3-பேரின் செல்போன் எண்கள் தான் அவை என்பதை உறுதி செய்த போலீசார், அந்த மூன்று பேரையும் பிடித்து விசாரித்தனர். அவர்கள் கேரளா மாநிலத்தை சேர்ந்த ஜோபிதாமஸ், முரளிதரன், அலியார் என்பதும் அவர்கள் தான் போலீஸ் வேடத்தில் வந்து கொள்ளையடித்தவர்கள் என்பதும் விசாரணையில் தெரியவந்தது.
இதையடுத்து மூன்று பேரையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் மேலும் விசாரித்தனர்.
கொள்ளைக்கு மூளையாக செயல்பட்ட ஜோபி தாமஸ் என்பதும், அவருடன் இணைந்து மற்றவர்கள் செயல்பட்டும் தெரியவந்துள்ளது. கத்தாரில் ஓட்டுநராக வேலை பார்த்த ஜோபி தாமஸ் நாடு திரும்பிய நிலையில் இரும்பு வியாபாரத்தில் ஈடுபட்டார்.
அந்த தொழிலில் ஏற்பட்ட நஷ்டத்தை அடுத்து, கோவை சூலூரைச் சேர்ந்த அப்துல் ஜலீல் என்பவருடன் இணைந்து வழிப்பறிக் கொள்ளையில் ஈடுபட்ட போது கைது செய்யப்பட்டு கோவை சிறையில் அடைக்கப்பட்டார்.
சிறையில் அவருக்கு சக கைதிகளான முரளிதரன், மலப்புரத்தைச் சேர்ந்த அலியார், திருவனந்தபுரத்தைச் சேர்ந்த நவுசாத் ஆகியோருடன் நட்பு ஏற்பட்டது. அனைவரும் சேர்ந்து கொள்ளையில் ஈடுபட திட்டமிட்டனர். இதற்காக கேரளா மற்றும் தமிழகத்தில் தொழிலில் ஈடுபடுவோரை இந்த கும்பல் கண்காணிக்க திட்டமிட்டது.
தமிழக – கேரளா எல்லையில் உள்ள வாளையாரில் அந்த கும்பல் ஆறு மாதங்களாக வாகனங்களை கண்காணித்து வந்தது. அப்போது வெள்ளை நிறமும், கர்நாடக மாநில பதிவு எண்ணும் கொண்ட ஒரு டஸ்டர் கார், அடிக்கடி, வாளையார் சோதனை சாவடியை கடந்து செல்வதை இந்த கும்பல் கண்டுபிடித்தது.
அந்த காரின் பதிவு எண்ணை கொண்டு, உரிமையாளர் யார் என்பதை தேடிய போது, மலப்புரத்தைச் சேர்ந்த அன்வார் சதாத்திற்கு சொந்தமான கார் என்பதும், மலப்புரம் மற்றும் கோவையில் நகைக்கடை நடத்தி வருவதும், சென்னையில் நகைகளை விற்பனை செய்து, பல கோடி ரூபாய் பணத்தை வாங்கி வருவதும் அந்த கும்பலுக்கு தெரியவந்தது.
இதையடுத்து அன்வார் சதாத்தை கண்காணித்த அந்த கும்பல் ஏப்ரல் மாதம் 2-ஆம் தேதி தனது ஊழியர்கள் மூன்று பேரையும், அன்வர் சதாத், சென்னைக்கு அனுப்பியதும், அவர்கள் மூன்றரை கோடி ரூபாயை வசூலித்து வருவதையும் அறிந்து கொண்ட ஜோபிதாமஸ் கும்பல், மூன்று கார்களில் போலீஸ் உடையுடன் காத்திருந்தது.
இதில் ஒரு கார் சேலம் மாவட்டம் சங்ககிரி தேசிய நெடுஞ்சாலையில் நின்ற நேரத்தில், மற்ற இரண்டு கார்கள் பெருந்துறையை அடுத்துள்ள விஜயமங்கலம் சுங்கச்சாவடி அருகே காத்து நின்றுள்ளன. நகைக்கடை ஊழியர்களின் டஸ்டர் காரை கண்டதும், ஜோபி தாமஸ் தலைமையில் காத்திருந்த கும்பல், டஸ்டர் காரை விரட்டிச் சென்று மடக்கி பணத்தை கொள்ளையடித்து உள்ளது.
இந்த தகவல்களை தெரிந்து கொண்ட போலீசார் ஜோபி தாமஸ், அலியார், முரளிதரன் ஆகிய மூன்று பேரை கைது செய்ததோடு அவர்களிடம் இருந்து 31 லட்ச ரூபாயையும், மூன்று கார்களையும் பறிமுதல் செய்தனர்.
மூன்று பேரையும், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீசார் சிறையில் அடைத்துள்ளதோடு, இந்த கும்பலைச் சேர்ந்த மேலும் சிலரை தேடி வருகின்றனர். சினிமா காட்சிகளை போலவே,6 மாதங்கள் திட்டமிட்டு கொள்ளையடித்த கும்பலை, 3 மாதங்களாக காத்திருந்து போலீசார் கைது செய்துள்ளனர்.
என்னதான் காவல்துறையினர் குற்றவாளிகளை கைது செய்து கொண்டிருந்தாலும் தமிழகத்தில் கொலை, கொள்ளை, கற்பழிப்பு போன்ற குற்றச்செயல்கள் அதிகரித்து வருவது வருந்தத்தக்கது. மேலும் குற்றங்களை குறைக்க ஆட்சியாளர்களும், காவல்துறை அதிகாரிகளும் இதற்கு நிரந்தர தீர்வு காணவேண்டும் என்பதே பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button