“வேளாண் செம்மல்” விருது வழங்கும் விழா
நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் வட்டத்தில் உள்ள ஆயக்காரன்புலத்தில் நடைபெற உள்ள விவாசாயிகளுக்கு விருது வழங்கும் விழாவில் இயக்குனர் தங்கர் பச்சான் கலந்து கொண்டு விவசாயத்தின் முக்கியத்துவம் குறித்து பேச இருக்கிறார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் நாளை முழுதும் உழவர்களுடனான சந்திப்புக்கு ஆயத்தமாகிக் கொண்டிருக்கிறேன். அரசுகளும் தனியார் அமைப்புகளும்,நிறுவனங்களும் சளைக்காமல் யார் யாருக்கெல்லாமோ விருது வழங்கி புளகாங்கிதப்பட்டுக்கொண்டிருப்பதை காணுகின்றோம்! வாழ்வு முழுதும் கடனாளிகளாகவே வாழ்ந்து அடுத்த தலைமுறையையும் கடனில் வைத்து விட்டு நமக்கெல்லாம் உழைத்து மடியும் உழவனை மாத்திரம் எவரும் கண்டு கொள்வதில்லை.
தமிழகத்திலுள்ள ஒவ்வொரு அரிமா சங்கங்களும் (Lions Club) ஒரு சிறந்த உழவரை தேர்ந்தெடுத்து 220 பேருக்கு “வேளாண் செம்மல்” விருது வழங்கும் நிகழ்வில் சிறப்பு விருந்தினராக பங்கேற்கிறேன். இவ்விழாவில் இந்திய விவசாயிகள் சங்கத்தலைவர் திரு. இராகேஷ் தியாகத் அவர்கள் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்கிறார்.
விவசாயிகளை மேம்படுத்த இயற்கை,மரபு,நவீன வேளாண்மை,மதிப்புக்கூட்டி பொருட்களை விற்பனை செய்தல் போன்றவைகளை ஊக்குவிக்கும் கலந்துரையாடலும் நடைபெறுகின்றன. விருப்பமுள்ளவர்கள் இதில் பங்கேற்க வேண்டுகிறேன். என்று தங்கர் பச்சான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பட்டுள்ளது.