அரசியல்தமிழகம்

விவசாயிகளின் கோரிக்கையை செவிசாய்த்து கேட்க வேண்டும்: கமல்ஹாசன்

கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அடுத்த 8 வருடங்களுக்கு, தொடர்ந்து தேவையான உதவிகளைச் செய்திட வேண்டும் என புயல்பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்ட பின் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
கஜா புயலால் டெல்டா மாவட்டங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வந்தாலும், மக்கள் தங்களின் வாழ்வாதாரத்தை இழந்து நிற்கும் காட்சி பார்ப்பவர்களை மனமுடையச் செய்கிறது. தங்களின் வீடுகளை முற்றிலுமாக இழந்த மக்கள் முகாம்களில் தங்கியுள்ளனர். அடுத்து என்ன செய்வதென்று தெரியாமல் உள்ளனர். அரசு சார்பில், கான்க்ரீட் வீடுகள் கட்டித்தரப்படும் என அரசு உறுதி அளித்தாலும், அந்தத் திட்டங்கள் நடைமுறைக்கு வர எத்தனை காலம் ஆகும் எனத் தெரியாத சூழலே உள்ளது.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசு அறிவித்துள்ள நிவாரணம் தொடர்பாக மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கருத்து தெரிவித்துள்ளார். முன்னதாக அவர் கஜா புயல் பாதித்த புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆய்வு நடத்தினார். அப்போது பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருள்களை வழங்கினார். பின்னர் இது தொடர்பாக ட்விட்டரில், “தன்மானத்துடன் வாழ்ந்த டெல்டா பகுதி மக்கள், இன்று நட்ட நடுத்தெருவில் செய்வதறியாது, திகைத்து நிற்கின்றனர். நமக்கு நல்ல சோறு போட்டவர்கள் இன்று அரசு வழங்கும் புழுத்துப்போன அரிசியை சாப்பிட்டுக்கொண்டிருக்கின்றார்கள்.
கஜா புயலால் பாதிக்கப்பட்டிருக்கும் மக்களுக்கு, அரசு அறிவித்திருக்கும் நிவாரணத்தொகை போதுமானதல்ல. ஆனால் அதைக்கூட 3 தவணையாக அறிவித்திருப்பது மிகக்கொடுமையானது என்பதே எங்கள் குற்றச்சாட்டு. மக்களுக்கு முழு நிவாரணத் தொகையும் உடனடியாக, ஒரே தவணையில் வழங்கப்பட வேண்டும்.
அரசு இயந்திரம் மேலிருந்து கீழ் வரை துரிதமாக செயலாற்றிட வேண்டும். நாங்கள் சென்று பார்த்த பல கிராமங்களில் கிராம நிர்வாக அதிகாரிகள்கூட சென்று பார்க்கவில்லை. மக்களுக்கு அரசு வழங்கும் உதவிகள், வெறும் அறிக்கையாகக் காகிதத்தில், மீளாத தூக்கத்தில் ஆழ்ந்து விடக் கூடாது.
வீடுகளை இழந்ததாக அரசு கூறும் கணக்கும், முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படும் கணக்கும் முற்றிலும் முரணாக இருக்கின்றது. முகாம்கள் என்று சொல்லப்படும் இடங்கள் மிகவும் மோசமான சூழலில் இருக்கின்றது. பல இடங்களில் அரசுப்பள்ளிகளில் தான் முகாம்கள் அமைக்கப்பட்டிருக்கின்றது.
கடைமடைப் பகுதிகளுக்கு காவிரி வருவதற்கு வழியில்லாத நிலையில், இப்புயலுக்குப் பின்னர் விவசாயிகள் தாம் இழந்த வாழ்வாதாரத்துக்கு என்ன செய்வார்கள் என்பது கேள்விக்கு உரியதாக இருக்கின்றது. இது தமிழ்நாட்டுக்கு மட்டுமான சோகம் இல்லை, ஒட்டுமொத்த இந்தியாவுக்கான சோகம்.
இப்பொழுது வரை நாம் அனைவரும் செய்திருப்பது முதலுதவி மட்டுமே. முழு சிகிச்சை அளித்து, அடுத்த 8 வருடங்களுக்கு, தொடர்ந்து தேவையான உதவிகளைச் செய்திட வேண்டும். அரசியலுக்கு அப்பாற்பட்டு மனிதத்துடன் அனைவரும் ஒன்று சேர்ந்து மக்களின் துயரைத் துடைத்திட வேண்டும்” எனப் பதிவிட்டுள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button