தமிழகம்

ஒரு குடும்பத்தையே சிதைத்த 3 நம்பர் லாட்டரி..!

விழுப்புரத்தில் நகை தொழிலாளி குடும்பத்துடன் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், அதற்குக் காரணமானதாகக் கூறப்படும் சட்டவிரோத லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்ததாக 13 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

விழுப்புரம் சித்தேரிக்கரை சலாமத் நகரில் மனைவி சிவகாமி மற்றும் பிரியதர்ஷினி, யுவஸ்ரீ, பாரதி என 3 பெண்குழந்தைகளோடு வசித்து வந்தவர் அருண். நகைப்பட்டறை வைத்து தொழில் நடத்தி வந்த அருணுக்கு ஆரம்ப காலத்தில் நல்ல வருமானம் கிடைத்துள்ளது. 30 லட்ச ரூபாய்க்கு சொந்தமாக வீட்டைக் கட்டி சந்தோஷமாக வாழ்ந்து வந்தவர் தொழிலில் நஷ்டம் ஏற்பட்டு, குடிப்பழக்கத்துக்கு அடிமையானதாக அக்கம்பக்கத்தினர் கூறுகின்றனர்.

அந்த குடிப்பழக்கம், அவருக்கு வந்துகொண்டிருந்த கொஞ்சநஞ்ச வருமானத்துக்கும் முட்டுக்கட்டை போட, கடன் சுமை அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. அதன் விளைவாக ஆசை ஆசையாய் கட்டிய வீட்டை விற்றுவிட்டு, வாடகை வீட்டுக்குக் குடிவந்துள்ளார் அருண்.

எப்படியாவது கடன் சுமையிலிருந்து மீண்டு, மீண்டும் பழைய நிலைக்குத் திரும்ப வேண்டும் என எண்ணியவருக்கு, குடிகார நண்பர்களால் அறிமுகம் ஆகியிருக்கிறது, இந்த 3ஆம் நம்பர் லாட்டரி. குடிபோதையோடு இந்த லாட்டரி போதையும் சேர்ந்துகொள்ள, அதனை ஏகபோகமாக வாங்கி, மேலும் கடனாளி ஆகியிருக்கிறார் அருண்.


ஒரு கட்டத்தில் இனி மீளவே முடியாது என்ற மனநிலைக்கு வந்தவருக்கு 3 பெண் குழந்தைகளின் எதிர்காலமும் அச்சத்தை ஏற்படுத்தி இருக்கிறது. கடந்த ஒரு வார காலமாகவே இந்தப் பிரச்சனைகள் குறித்து புலம்பியவாறே இருந்ததாகக் கூறுகின்றனர் நண்பர்கள்.

சம்பவத்தன்று நகைகளை பாலிஷ் செய்யப் பயன்படுத்தும் சையனைடு விஷத்தை 3 பெண் குழந்தைகளுக்கும் முதலில் கொடுத்துள்ளனர் தம்பதியர். விஷத்தை அருந்திய அந்தக் குழந்தைகள் துடிதுடித்து இறந்ததை தனது செல்போனில் படம் பிடித்திருக்கிறார் அருண். அந்தக் காட்சிகள் காண்போரின் மனதை உலுக்குவதாக உள்ளன.


குழந்தைகள் ஒவ்வொன்றாக மயக்க நிலைக்குச் செல்ல, தனது இந்த முடிவுக்குக் காரணம் என்ன என்பதை விளக்கி ஒரு வீடியோவை எடுத்திருக்கிறார் அருண். “3 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து கொன்றுவிட்டேன், நாங்கள் இருவரும் இன்னும் கொஞ்ச நேரத்தில் விஷமருந்தி சாகப் போகிறோம்” என்று அதில் கூறும் அருண், விழுப்புரத்தில் லாட்டரி சீட்டை ஒழித்துவிடுமாறும் கூறுகிறார்.

அவரது இந்த வீடியோக்கள் வாட்சப்பில் பரவ, பதறிக்கொண்டு உறவினர்கள் ஓடி வந்து 5 பேரையும் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்துள்ளனர். அங்கு 5 பேருமே சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக விசாரித்து வரும் போலீசார், முதற்கட்டமாக சட்டவிரோத லாட்டரிகளை விற்பனை செய்த 13 பேரை கைது செய்துள்ளனர்.

இந்நிலையில் கோலியனூரில் நடைபெற்ற அரசு விழாவில் பங்கேற்க வந்த அமைச்சர் சி.வி. சண்முகம், சட்டவிரோதமாக லாட்டரி விற்பனையில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். பறிபோன இந்த 5 உயிர்களே கடைசியாக இருக்கட்டும் என்று கூறும் விழுப்புரம் மக்கள், சட்டவிரோத லாட்டரி விற்பனைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதனிடையே செய்தியாளர்களை சந்தித்த விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார், ஆன்லைன் லாட்டரி விற்பனையில் ஈடுபடுவோர் கடுமையான தண்டனைக்கு உள்ளாவார்கள் என்றும், அவர்களது செயல்களுக்கு உடந்தையாக செயல்படும் காவல்துறையினர் மீதும் நடவடிக்கைகள் பாயும் என்றும் கூறினார்.


இதையடுத்து, தமிழகம் முழுவதும் லாட்டரி விற்பனையில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதன் ஒருபகுதியாக நாகர்கோவில் அருகே வடசேரி பகுதியில் மூன்று நம்பர் லாட்டரி சீட்டு விற்பனையில் ஈடுபட்டு வந்த அருண், விக்னேஷ் பாண்டியன் மற்றும் சுரேஷ் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், திண்டிவனம் பகுதிகளில் 3 நம்பர் லாட்டரி விற்பனை நடைபெறுவதாக போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதனடிப்படையில் அங்கு விரைந்த போலீஸார், லாட்டரி சீட்டு விற்பனையில் ஈடுபட்டதாக விழுப்புரம் அதிமுக பிரமுகர் கோல்டு சேகர், திண்டிவனம் ரோஷன், ஷேக் அப்துல்லா, பெருமாள் உள்ளிட்ட 6 பேரை கைது செய்தனர். அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் மூணு நம்பர் லாட்டரியை ஓழிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஜனநாயக மக்கள் எழுச்சி கழகத்தின் மாநில தலைவர் காயல் அப்பாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது,
விழுப்புரம் மாவட்டம், சித்தேரிக்கரை, சலாமத் நகரை சேர்ந்த அருண் மூணு நம்பர் லாட்டரி கடனால் பெரும் அளவிற்கு பாதிக்கபட்டு தனது மணைவி மூன்று குழந்தைகளுடன் சையனடு சாப்பிட்டு உயிரை மாய்த்து கொண்ட சம்பவம் மிகுந்த வேதணை அளிக்கிறது.

காயல் அப்பாஸ்

தமிழகத்தில் தடை செய்யப்பட்டுள்ள லாட்டரி சிட்டை மீண்டும் மூணு நம்பர் லாட்டரி என்கிற பெயரில் சட்டத்திற்கு முரணாக விற்பணை செய்து பலரின் வாழ்க்கையை கேள்வி குறியாக்கி வருகிறார்கள். இந்த சமூக விரோதிகளை கண்டறிந்து சட்டபடி கடும் நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும். உயிரிழந்தோர்களின் குடும்பத்திற்கு ஜனநாயக மக்கள் எழுச்சி கழகத்தின் சார்பில் ஆழ்ந்த இரங்களையும் அனுதாபங்களையும் தெரிவித்து கொள்கிறோம்.

எனவே இந்த பரிதாபமான உயிரிழப்பிற்கு காரணமான மூணு நம்பர் லாட்டரி சிட் விற்பனையாளர்களை கைது செய்ய வேண்டும். தமிழகத்தில் மூணு நம்பர் லாட்டரியை ஓழிக்க தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அக்கட்சியின் மாநில தலைவர் காயல் அப்பாஸ் கூறியுள்ளார்.

  • உதுமான் அலி

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button