ஸ்டெர்லைட் விவகாரம்: தமிழக அரசின் உத்தரவை காற்றில் பறக்கவிட்ட பசுமை தீர்ப்பாயம்
ஸ்டெர்லைட் ஆலையை மூட உத்தரவிட்ட தமிழக அரசின் முடிவை நியாயப்படுத்த முடியாது என ஓய்வுபெற்ற நீதிபதி தருண் அகர்வாலா குழு, பசுமை தீர்ப்பாயத்தில் அளித்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி கடந்த மே மாதம் மக்கள் போராட்டம் நடத்தினர். அப்போது போலீசார் தடியடி நடத்தி துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 13 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இதனிடையே அந்த ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி தமிழக அரசு உத்தரவிட்டது. இதை எதிர்த்து ஸ்டெர்லைட் நிர்வாகம் தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் மனுவை தாக்கல் செய்தது. மனுவை விசாரித்த தேசிய பசுமை தீர்ப்பாயம் நிர்வாக பணிகளை மேற்கொள்ள ஸ்டெர்லைட் நிர்வாகத்துக்கு அனுமதி அளித்தது.
பசுமைத் தீர்ப்பாயத்தின் உத்தரவை எதிர்த்தும், பசுமை தீர்ப்பாய விசாரணைக்கு தடை கோரியும் தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது. ஆனால், தமிழக அரசின் மனுவை நிராகரித்த உச்சநீதிமன்றம் தேசிய பசுமை தீர்ப்பாய உத்தரவுக்கு தடை விதிக்க முடியாது என தெரிவித்தது. இதையடுத்து தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்யப்பட்ட சீராய்வு மனுவையும் தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
முன்னதாக இதனை விசாரித்த பசுமை தீர்ப்பாயம், ஸ்டெர்லைட் ஆலை மற்றும் அதனை சுற்றியுள்ள இடங்களில் ஆய்வு செய்ய ஓய்வுபெற்ற நீதிபதி தருண் அகர்வாலா தலைமையில் மூன்று பேர் கொண்ட குழுவை அமைத்தது. ஆய்வு மேற்கொண்ட அக்குழு சீல் இடப்பட்ட அறிக்கை ஒன்றை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தது. அந்த அறிக்கையின் முக்கிய அம்சங்களை உச்ச நீதிமன்றம் இன்று தெரிவித்துள்ளது. அதன்படி ஸ்டெர்லைட் ஆலையை மூட உத்தரவிட்ட தமிழக அரசின் முடிவை நியாயப்படுத்த முடியாது. ஆலையை மூட உத்தரவிட்டது இயற்கை நியதிக்கு முரணானது. முறையாக நோட்டீஸ் அனுப்பியிருக்க வேண்டும் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
பசுமை தீர்ப்பாயத்தில் தருண் அகர்வாலா சமர்ப்பித்த அறிக்கையினால் மீண்டும் ஒரு பதற்றம் தமிழ்நாடு முழுவதும் உருவாகியுள்ளது. குறிப்பாக தூத்துக்குடியில் அது அதிகமாகவே காணப்படுகிறது. இந்த அறிக்கைக்கு பல சமூக ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
வேதாந்தா குழுமம் நீதிமன்றங்களிலும் பசுமை தீர்ப்பாயங்களிலும் தவறான புள்ளி விவரங்களையும், போலி கையெழுத்து மனுக்களையும் கொடுத்து தற்போது தனக்கு சாதகமான தீர்ப்பு பெற்றுள்ளது. தீர்ப்பு நாங்கள் எதிர்பார்த்த ஒன்றுதான். பசுமை தீர்ப்பாயம் அமைத்த நீதியரசர் தருண் அகர்வாலா தலைமையிலான சூழலியல் நிபுணர்களான சதீஷ் , சி.கர்கோட்டி, எச்,டி. வரலட்சுமி, உள்ளிட்ட குழுவினர் ஸ்டெர்லைட் ஆலையால் நீர் ,நிலம் ,சுற்றுச்சூழல் ,காற்று ,கடல் ,பேன்றவளங்கள் கெட்டுப்போய் உள்ளதா என்று மட்டுமே பற்றி ஆய்வு செய்து வந்தனர். நீதியரசர் தருண் அகர்வால் தலைமையிலான அக்குழு வேதாந்தா குழுமத்தின் தலைவர் அனில் அகர்வாலாவுக்கு சாதகமாக பரிந்துரை செய்திருப்பது வரம்பு மீறியதாகும். ஸ்டெர்லைட் வழக்கு தொடர்பாக தூத்துக்குடி பொது மக்களிடம் பொது வாக்கெடுப்பு எடுக்க வேண்டும் என்றும் நாங்கள் வேண்டுகோள் வைக்கிறோம். மக்கள் உணர்வுகளுக்கு மாறான இந்த மக்கள் விரோத பரிந்துரையை மிகவும் கண்டிக்கதக்க ஒன்று என்கிறார்கள் சமூக ஆர்வலர்களும் பொதுமக்களும்.