திருப்பூர் அருகே காரில் கஞ்சா கடத்தி வந்த இருவர் கைது!
திருப்பூர் அருகே காரில் கஞ்சா கடத்தி வந்த கும்பலை போதை தடுப்பு பிரிவு போலீசார் அதிரடியாக மடக்கி பிடித்து கைது செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் தேவாரம் பகுதியில் இருந்து ஒரு கும்பல் திருப்பூருக்கு கஞ்சா கடத்தி வருவதாக சேலம் சரக போதை தடுப்பு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலை அடுத்து தேவாரம் சென்ற போதை தடுப்பு போலீசார் சந்தேகத்திற்கிடமான காரை பி ன் தொடர்ந்து வந்தனர்.
இந்நிலையில் கார் பல்லடத்தை அடுத்த அருள்புரம் பகுதியில் சென்றுகொண்டிருந்தபோது அதிரடியாக போதை தடுப்பு பிரிவு அதிகாரிகள் காரை மடக்கி பிடித்து சோதனை மேற்கொண்டனர். சோதனையின் போது காரில் 48 கிலோ கஞ்சா பதுக்கி வைத்து கடத்தி வரப்பட்டது தெரிய வந்தது. இந்நிலையில் காரில் இருந்த மூவரையும் பிடித்து விசாரணை மேற்கொண்டபோது அதில் ஒருவர் தப்பி ஓடிவிட்டார். இந்நிலையில் பிடிபட்ட இருவரிடம் நடத்திய விசாரணையில் பல்லடத்தை அடுத்த இடுவாய் அண்ணாமலை கார்டனை சேர்ந்த அலெக்ஸ்(33) மற்றும் தேவாரம் பகுதியை சேர்ந்த செல்வம்(41) என்பதும் தெரிய வந்தது.
மேலும் தப்பி ஓடியது தேனி மாவட்டத்தை சேர்ந்த புரோட்டா மாஸ்டர் மகேஸ் என்பதும் தெரியவந்தது. இதனை அடுத்து கடத்தப்பட்ட கஞ்சாவுடன் காரையும் கைப்பற்றிய போலீசார் இருவரையும் கைது செய்து விசாரணைக்காக அழைத்துச்சென்றனர். மேலும் தப்பி ஓடிய மகேஸ் என்பவரை தீவிரமாக தேடி வருகின்றனர். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.