ஒரே முகவரியில் பல நிறுவனங்களை பதிவு செய்த தயாரிப்பாளர்
சினிமா தயாரிப்பாளர் எல்ரெட் குமார் தொடர்புடைய இடங்களில் இரண்டு நாட்கள் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வந்தனர். இந்த சோதனையில் ஒரே முகவரியில் பல்வேறு நிறுவனங்கள் செயல்படுவதாக பதிவு செய்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2008ஆம் ஆண்டு முதல் ஜேஎஸ் மைன்ஸ் மினரல் என்ற நிறுவனத்தை முதலில் தொடங்கிய எல்ரெட் குமார் தற்போது வரை ரியல் எஸ்டேட், கட்டுமானம், பைனான்ஸ், சினிமா தயாரிப்பு நிறுவனம் என சுமார் 40 நிறுவனங்களை நடத்தி வருவதாக வருமான வரித்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர். இதில் பெரும்பாலான நிறுவனங்கள் ஒரே முகவரியில் பதிவு செய்யப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. மேற்கு தாம்பரத்தில் மூன்று முகவரியில் மட்டும் சுமார் 15 நிறுவனங்களை பதிவு செய்து இயங்கி வருவது போல் கணக்கு காண்பிக்கப்பட்டுள்ளது.
இந்த நிறுவனங்கள் பெயரளவில் பதிவு செய்யப்பட்டு அதன்மூலம் வருவாய் செலவினங்கள் போலியாக காண்பிக்கப்பட்டுள்ளதா? என்பது குறித்து வருமான வரித்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதேபோல், இராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காட்டில் கல்குவாரி தொழிலில் கொடி கட்டி பறந்த சாரதியின் வீடு, அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். வரிஏய்ப்பு செய்ததாக எழுந்த புகாரின் பேரில் ஆற்காடு சென்னை என 28 இடங்களில் சோதனை நடைபெற்றது. ஆற்காட்டில் அவரது வீடு அவருக்குச் சொந்தமான கல்குவாரி அலுவலகங்கள் மற்றும் சென்னை பெரிய மேட்டிலுள்ள அவரது வீட்டிலும் துப்பாக்கி ஏந்திய போலீசாருடன் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர்.
சென்னை, இராணிப்பேட்டை, வேலூர், பெங்களூர் உள்ளிட்ட 30 இடங்களில் வருமான வரித்துறை சோதனை இரண்டு நாட்களாக நடைபெற்றது. குவாரிகள் மூலமாக சம்பாதித்த கருப்புப் பணத்தை சட்டவிரோதமாக சினிமாவில் முதலீடு செய்திருப்பதை வருமான வரித்துறையினர் கண்டுபிடித்துள்ளதாக தெரியவருகிறது. கிட்டத்தட்ட ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் வரி ஏய்ப்பு செய்திருப்பதும் கண்டறியப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
– நமது நிருபர்