தமிழகம்

ராமநாதபுரம் அரசு மருத்துவரின் பேராசை -: நோயாளிகள் திண்டாட்டம்!

அரசு மருத்துவர்கள் பலரும் தனியாக மருத்துவமனை நடத்துவதுடன் அரசு மருத்துவமனைகளைவிட தங்களது மருத்துவமனையிலேயே நேரம் செலவிடுகின்றனர் என்ற குற்றச்சாட்டு எழுந்துவருகிறது. ராமநாதபுரத்தில் இப்படியான ஒரு சம்பவம் நடைபெற்றுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளியைச் சேர்ந்தவர் மகேந்திரன். இவருடைய மனைவி காளீஸ்வரி. இவர் கல்லூரியில் முதலாம் ஆண்டு பிஎட் படிப்பு படித்து வருகிறார்.
இந்த நிலையில் மகேந்திரன் விபத்து ஒன்றில் சிக்கியதால், கால் முறிவு ஏற்பட்டு ராமநாதபுரம் தலைமை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்படுகிறார். ஆனால் அங்கு முறையான சிகிச்சை வழங்காமல் மருத்துவர்கள் அவரை அலைக்கழித்து வந்துள்ளனர்.

இதனை அடுத்து எலும்பு சிகிச்சை டாக்டர் ஆனந்தை அணுகி, மகேந்திரனின் மனைவி முறையான சிகிச்சை அளிக்க கோரிக்கை வைத்தபோது, “இங்கு அதற்கெல்லாம் போதிய கருவிகள் இல்லை என்பதால் இங்கு சிகிச்சை அளிக்க முடியாது. நான் நடத்திவரும் ஆரோக்யா மருத்துவமனைக்கு உங்கள் கணவரை அழைத்து வந்தால், தேவையான சிகிச்சை அளித்து குணப்படுத்தி விடுவேன்” என கூறிய அவர், அதற்காக ரூபாய் 40 ஆயிரம் செலவாகும் எனவும் தெரிவித்துள்ளார்.

மருத்துவர் ஆனந்த்

இதனால் அதிர்ச்சி அடைந்த காளீஸ்வரி மனமுடைந்து, அரசு தரப்பில் எங்களை போன்ற ஏழை மற்றும் நடுத்தரக் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் சிகிச்சை பெறுவதற்காக ராமநாதபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் தேவையான அனைத்து உபகரணங்கள், சிகிச்சை பிரிவுகள் இருந்தும், அங்கு பணிபுரியும் அரசு மருத்துவர்கள் தனியே ஒவ்வொருவரும் கிளினிக் நடத்தி கொண்டு அரசு மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் தங்கள் மருத்துவமனைக்கு வந்து சிகிச்சை பெறுமாறு வற்புறுத்துவது மிகவும் ஒரு இழிவான செயல் என வாட்ஸ் அப்பில் ஆடியோ வெளியீட்டு தன் மனவேதனையும் வெளிப்படுத்தியுள்ளார்.

இது சமூக வலைதளங்களில், வைரலாகப் பரவி தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த சம்பவம் தொடர்பாக விசாரித்தபோது, அரசு மருத்துவமனையில் வேலை பார்த்துக் கொண்டே தனக்குச் சொந்தமாக ஆரோக்யா மருத்துவமனை என்ற பெயரில் தனியாக கிளினிக் நடத்தி வருகிறாராம் ஆனந்த். அரசு மருத்துவமனைக்கு வரும் ஓரளவு பணம் செலவு செய்யும் நோயாளிகளை தனது மருத்துவமனைக்கு வருமாறு மிரட்டுவதையே வாடிக்கையாக கொண்டுள்ளாராம். நோயாளிகளை இவரது மருத்துவமனைக்கு இழுப்பதற்கு அங்கு பணிபுரியும் ஊழியர்களையே பயன்படுத்துகிறாராம். இதன் மூலம் வரும் பணத்தின் அளவுக்கு தகுந்தாற்போல் கமிஷனும் வழங்குகிறாராம். இவரது தில்லாலங்கடி வேலையை வெளிப்படுத்துவதற்காக பத்திரிகையாளர் ஒருவர் செய்தி சேகரிக்க அரசு மருத்துவமனைக்கு சென்றிருக்கிறார். தனது கைபேசியில் புகைப்படம் எடுக்க முயலும்போது மருத்துவர் ஆனந்த் மற்றும் சக ஊழியர் ஒருவரும் இணைந்து அந்த பத்திரிகையாளரை பிடித்து கைபேசியை பறித்து தாக்கியிருக்கிறார்கள். பிறகு மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் பணிபுரியும் காவலர் ஒருவருக்கு போன் பண்ணி வரவழைத்து அருகில் உள்ள காவல்நிலையத்தில் குடித்துவிட்டு கலாட்டா செய்ததாக பொய் புகார் கொடுத்திருக்கிறார் ஆனந்த்.

பத்திரிகையாளர் மது அருந்தி இருந்தால் மருத்துவமனையிலேயே அவரை சோதனை செய்து அவர்மீது வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்திருக்கலாமே. மருத்துவமனைக்கு அருகிலேயே காவல்நிலையம் இருக்கும் போது மூன்று கிலோமீட்டர் தூரம் உள்ள மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில் உள்ள காவலரை அழைத்ததின் பின்னணி என்ன?

அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும் மருத்துவர்கள் மருத்துவமனை அருகிலேயே சொந்தமாக மருத்துவமனை நடத்தி அப்பாவி மக்களை ஏமாற்றுவதை தமிழக அரசு தடுத்து நிறுத்த புதிய நடைமுறைகளை கொண்டு வரவேண்டும் என்பதே பெரும்பாலான பொதுமக்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button