வெளிநாடுகளிலும், திரைப்படங்களிலும், சமூக வலைதளங்களிலும் கண்டுகளித்த வேர்ல்ட் பெஸ்ட் வாட்டர் ஃபிஷ் அக்வாரியம்
கடந்த இரண்டு வருடங்களாக கோவிட் நோய் தொற்று காரணமாக உலக சுற்றுலாத்தலமான கன்னியாகுமரியில் சுற்றுலா பயணிகளுக்கு, கடற்கரை மற்றும் சுற்றுலா பகுதிகளுக்கு செல்ல தடை விதித்த நிலையில் கடந்த சில மாதங்களாக சில தளர்வுகளுடன் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. கன்னியாகுமரியில் பலவிதமான வண்ணங்களில் சிறியது முதல்பெரிய அளவிலான மீன்கள் கடலுக்கடியில் நீந்தி செல்வதைப் போன்றுதத்ரூபமாக பெரிய ராட்சத கண்ணாடி தொட்டிகளில் கடலுக்கு அடியில் மீன்கள் அணிவகுத்து செல்வது போன்று பிரமாண்டமாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
வெளிநாடுகளில் பல லட்ச ரூபாய் செலவு செய்து கண்டுகளித்த காட்சியை குமரியில் பெரிய பெரிய கண்ணாடிகளால் உருவாக்கப்பட்டுள்ள இந்த மீன் அக்வேரியம் கன்னியாகுமரியில் பழத்தோட்டம் அருகே உள்ள சுற்றுச்சூழல் பூங்காவிற்கு எதிரே அமைக்கப்பட்டுள்ளது. இந்த மீன் அக்வேரியமானது நீல் என்டர்டைன்மென்ட் நிறுவனத்தின் மூலம் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த அக்வேரியத்தை பொதுமக்கள், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் கண்டு ரசிப்பதற்காக குறைந்த கட்டணத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் பலரும் இந்த கண்காட்சியை கண்டுகளித்து வருகின்றனர்.
சிறுவர்கள், பெரியவர்கள், பெண்கள் மற்றும் இளைஞர்கள் இந்த மீன் அக்வேரியம் கண்டு வியந்து புகைப்படம் எடுத்துச்செல்கின்றனர்.
குமரி மாவட்டத்தில் கோவிட் ஊரடங்கு உத்தரவுக்கு பிறகு பொதுமக்களுக்கும், சுற்றுலாப் பயணிகளுக்கும் இந்த காட்சி வரப்பிரசாதமாக உள்ளது. இங்கு நுழைவு கட்டணமாக சிறுவர்களுக்கு 50 ரூபாயும், பெரியவர்களுக்கு 100 ரூபாயும் வசூலிக்கப்படுகிறது. இந்த அக்வேரியம் தினமும் காலை 11 மணி முதல் இரவு 9 மணி வரை பொதுமக்களின் பார்வைக்காக திறந்து வைக்கப்படுகிறது.
– நமது நிருபர்