ஆளுநர் பதவி என்பது அண்ணா சொன்ன ‘ஆட்டுக்கு தாடி’ தேவையா?
தமிழக முதல்வராக பேரறிஞர் அண்ணா பதவியேற்றநாள் 06.03.1967. எந்த ஆர்ப்பாட்டமின்றி அமைதியாக பதவி இருக்கையில் அமர்கிறார் அண்ணா. காங்கிரஸ் கட்சியின் ஆட்சி தமிழகத்தில் அன்றைக்கு முடிந்தது.
ஆளுநர்களை வி.ஆர்.கிருஷ்ணய்யர் ராஜ்பவனுக்கு வாடகை கொடுக்காத வாடகைதாரர்கள் என்று கூறுவார். காங்கிரஸ் ஆட்சி காலத்தில் இருந்தே சிலரை திருப்திப்படுத்த இந்த ஆளுநர் பதவி கொடுக்கப்பட்டது. அப்படித்தான் சரோஜினி நாயுடு முக்கிய தலைவர், அவருக்கு அமைச்சரவையில் பதவி கொடுக்க வில்லை, அவரை கவர்னராக மேற்கு வங்காளத்திற்கு அனுப்பினார்கள்.
அரசியல்வாதிகளை ஆளுநர்களாக நியமிப்பதற்கு மூன்று காரணங்கள் உண்டு. தலைவர்கள், அவர்களால் செயல்பட முடியவில்லை என்றால் கவர்னர் பதவி.
ஏதோ விதமாக, விசுவாசிகள் ஓய்வு காலத்தில் ஏதாவது கொடுக்க வேண்டும் என்கிற நிலையில் கவர்னர் பதவி. மத்திய அமைச்சர் பதவி வழங்க முடியவில்லை என்றால், கவர்னர் பதவி. அடுத்து ஆட்சிக்கு வில்லங்கம் செய்கின்றார்களா, அவர்கள் வாயை மூட கவர்னர் பதவி. இப்படித்தான் கவர்னர் பதவிகள் வழங்கப்படுகின்றன. அதற்கான தகுதிகளும், வேறு திறன்களும் மனதில்கொண்டு கவர்னரை இதுவரை நியமித்ததில்லை. நேரு காலத்தில் இருந்து இது தான் நடக்கின்றது.
இந்தநிலையில் மாநில ஆளுநர்களை பற்றி சில சிந்தனைகள் வந்தன. இன்றைக்கு மகாராஷ்டிராவில், மேற்கு வங்கத்தில், கேரளாவில் கவர்னர் சர்ச்சைகள் எழுந்த வண்ணம் உள்ளன. தமிழ்நாட்டிலும் ஆங்காங்கு சலசலப்புகள் கேட்டுக்கொண்டு இருக்கின்றது. தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவ், ஆளுநர் உரை இல்லாமல் சட்டமன்றத்தை நடத்தியுள்ளார்.
ஆளுநர் பதவி தொடர்ந்து இருந்திட வேண்டும் எனக் கருதினால், பின்னர் சர்க்காரியா ஆணையம் குறிப்பிட்டிருந்த அளவுகோல்களை நிறைவேற்றும் விதத்தில், மாநில முதலமைச்சரால் பரிந்துரைக்கப்படும் மூன்று புகழ்பெற்ற நபர்களிலிருந்து ஒருவர் குடியரசுத் தலைவரால் நியமனம் செய்யப்பட வேண்டும்.
கேரள மாநில அரசாங்கமும் ஆளுநர்கள் நியமனம் அல்லது ஆளுநர்களை திரும்ப அழைப்பது தொடர்பாக, மாநில அரசுகளுக்கு அதிகாரம் அளித்திடும் வகையில், அரசியலமைப்பு சட்டத்திருத்த சட்டத்திற்கு திருத்தங்களை முன்மொழிந்து, ஒன்றிய அரசாங்கத்திற்கு எழுதி இருக்கின்றது. ஒன்றிய அரசு, மாநிலங்கள் அரசு ஆகியவற்றுக்கு இடையிலான உறவுகளில் மேற்கொள்ளப்பட வேண்டிய சீர்திருத்தங்கள் குறித்து ஆய்வு செய்த நீதியரசர் புஞ்ச்சி ஆணையம் அளித்த பரிந்துரைகளின் அடிப்படையில் இது செய்யப்பட்டு இருக்கிறது. ஆளுநர்களின் பங்கு குறித்து மாற்றங்கள் தேவை என்று நீண்டகாலமாக உணரப்பட்டு வந்ததன் அடிப்படையை பிரதிபலிக்கும் வகையில், கேரள அரசாங்கம் எடுத்துள்ள நிலைப்பாட்டை கூறும் விதமாக இக்கடிதம் எழுதப்படுகிறது. ஏனெனில் இப்போது ஒன்றிய அரசாங்கத்தால் நியமிக்கப்படும் ஆளுநர்கள் ஒன்றிய அரசாங்கத்தின் ஏஜென்ட்டாகவே செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
156 வது பிரிவில் திருத்தம் வேண்டும். ஆளுநர் ஒருவர் தன்னுடைய அரசமைப்புச் சட்ட கடமைகளை செய்கையில், அரசமைப்புச் சட்டத்தின் விதி முறைகளை மீறுகிறார் என்று காணும் போது, அவரை திரும்ப அழைத்திடும் விதத்தில் மாநில சட்டத்திற்கு அதிகாரம் அளித்ததிட, அரசியலமைப்புச் சட்டத்தின் 356 ஆவது பிரிவில், திருத்தங்கள் கொண்டு வர வேண்டும் என்று கடிதத்தில் கேரள அரசாங்கம் மேலும் கேட்டிருக்கிறது.
மகாராஷ்டிராவில் ஆளுநர் பகத்சிங் கோஷ்பாரி மாநில அரசாங்கத்தால் மாநில சட்டமன்ற மேலவைக்கு நியமனம் செய்யப்பட்ட 12 உறுப்பினர்களுக்கான பரிந்துரையின் மீது முடிவு எதுவும் எடுக்காது அவற்றின் மீது உட்கார்ந்திருந்தார். பல்கலைக்கழக துணைவேந்தர்கள் நியமனத்திலும், வேந்தர் என்ற அந்தஸ்தில் தன் இஷ்டத்திற்கு தலையிட்டார். இவ்வாறு மகாராஷ்டிரா மாநிலத்தில் ஆளூநர் தலையிட்டதன் காரணமாக, சட்டமன்றத்தில் 2021 டிசம்பரில் மகாராஷ்டிரா பொது பல்கலைக்கழகங்கள் சட்டத்தில் திருத்தங்கள் கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ளன.
இந்தத் திருத்தங்கள் ஆளுநரான வேந்தருக்கும், துணைவேந்தருக்கு மிடையே உயர்கல்வி மற்றும் தொழில் நுட்ப கல்வித்துறை அமைச்சரை, இணை வேந்தனாக நியமிக்கப்படுவதற்காகவும், துணைவேந்தர்கள் நியமனங்களில் மாற்றத்தைக் கொண்டு வருவதற்காக ஏற்படுத்தப் பட்டன. இந்த திருத்தத்தின் மூலம் ஆளுநர், அவருக்கு அனுப்பப்படும் இரு நபர்களின் பெயர்களில் ஒருவரை அவர் ஒரு மாத காலத்திற்குள் தேர்ந்தெடுக்க வேண்டுமென்று காலவரம்பு நிர்ணயிக்கப்பட்டது.
தமிழ்நாட்டில் ஆளுநர் ஆர்.என்.ரவியும் கூட பல்கலைக்கழக துணைவேந்தர்கள் சம்பந்தமாக நேரடியாக பிரச்சினைகளை கையாண்டு கொண்டு இருக்கிறார். நீட் தேர்வு சம்பந்தமாக சட்டமன்றத்தில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை நீண்ட நாட்கள் கிடப்பில் போட்டு வைத்திருந்து விட்டு திரும்பி அனுப்பியிருந்தார். பிரச்சினை என்னவென்றால், ஒரு குறிப்பிட்ட ஆளுநர் அல்லது வேறு ஒருவர் தவறாக நடந்து கொள்கிறார் என்பது அல்ல. அதற்கும் மேல் ஆழமான அளவில் பிரச்சினைகள் இதில் அடங்கியிருக்கிறது.
ஒன்றிய அரசாங்கம்- மாநில அரசாங்கங்கள் உறவுகள் தொடர்பாக 1980ல் ஸ்ரீநகரில் நடைபெற்ற எதிர்க்கட்சிகளின் மாநாட்டில், ஆளுநர் பதவிக்கு, சம்பந்தப்பட்டமாநிலஅரசாங்கத்தினால் அனுப்பப்படும் நபர்களின் பட்டியலில் இருந்து ஒருவரை குடியரசுத் தலைவர் தேர்ந்தெடுத்து நியமனம் செய்திட வேண்டும் என்று பரிந்துரை அறிக்கை வெளியிடப்பட்டது. இந்த புத்தகத்தை 1986இல் என்னுடைய திருமணத்திற்கு பிறகு, ஸ்ரீநகர் சென்ற பொழுது பரூக் அப்துல்லா எனக்கு பரிசாக ஷிணீtவீ ஷிணீலீஸீவீ தொகுத்த இந்த நூலை கொடுத்தார் என்பதெல்லாம் கடந்த கால நினைவுகள்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், நீதிபதி சர்க்காரியா ஆணையத்திற்கு அனுப்பியிருந்த முன்மொழிவிலும், புஞ்ச்சி ஆணையத்திற்கு அனுப்பியிருந்த முன்மொழியிலும் இதையே கூறியிருந்தது. 2006 அக்டோபரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழு, ஒன்றை அரசாங்கம்-மாநில அரசாங்கங்கள் இடையே உறவுகளை மாற்றியமைப்பது தொடர்பான அணுகுமுறை ஆவணம் (கிஜீஜீக்ஷீஷீணீநீலீ றிணீஜீமீக்ஷீ ஷீஸீ ஸிமீstக்ஷீuநீtuக்ஷீவீஸீரீ ஷீயீ சிமீஸீtக்ஷீமீ-ஷிtணீtமீ க்ஷீமீறீணீtவீஷீஸீs) ஒன்றை நிறைவேற்றியது இந்த ஆவணத்தில் கூறப்பட்டிருப்பதாவது,
“ஒன்றிய அரசாங்கத்தால் மாநிலங்களுக்கு ஆளுநர்கள் நியமனம் செய்யப்படும் முறை காலத்திற்கு ஒவ்வாததாக இருக்கிறது. இது கூட்டாட்சி ஜனநாயக அரசியலுக்கு உகந்ததல்ல. ஆளுநர் பதவி தொடர்ந்திட வேண்டும் எனக் கருதினால், அது சர்க்காரியா ஆணையம் குறிப்பிட்டிருந்த அளவுகளை நிறைவேற்றும் விதத்தில், மாநில முதலமைச்சர்கள் பரிந்துரைக்கப்படும் மூன்று புகழ்பெற்ற நபர்களிலிருந்து ஒருவர் குடியரசுத் தலைவரால் நியமனம் செய்யப்பட வேண்டும்”.
இப்போதெல்லாம் ஒன்றிய அரசாங்கத்தின் கீழ் ஆளுநர் நியமனம் தொடர்பாகவோ மற்றும் அவரின் செயல்பாடுகள் தொடர்பாகவோ எந்தவிதமான சீர்திருத்தமும் சாத்தியமில்லை. என்ன செய்ய முடியும் என்றால் எதிர்க் கட்சி மாநில அரசாங்கங்கள், தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசாங்கம் மற்றும் சட்டமன்றங்களில் உரிமைகள் பறிக்கப்படுவதற்கு எதிராக விழிப்புடன் இருக்க வேண்டும். இத்துடன் மாநில சட்டமன்றங்கள், பல்கலைகழகங்கள் சட்டங்கள் போன்றவற்றில், சட்டத்தில் அளிக்கப்பட்டுள்ள விதிகளையும் மரபுகளையும் ஆளுநர் மீற முடியாத விதத்தில் தேவையான சட்டத் திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும்.
– கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.