நீதிமன்ற வளாகத்தில் கணவன், மனைவி தற்கொலை முயற்சி..! பல்லடம் அருகே பரபரப்பு…!
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்துள்ளது வேலப்பக்கவுண்டன் பாளையம். இப்பகுதியில் நடந்த திருட்டு வழக்கில் தொடர்புடைய வாலிபர் நீதிமன்ற வளாகத்தில் தற்கொலைக்கு முயன்றதை கண்ட மனைவியும் தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. மதுரை ஜெய்ஹிந்த்புரத்தை சேர்ந்தவர் பாண்டி இவரது மகன் கருப்பசாமி(29), இவருக்கு மஞ்சுளா என்கிற மனைவியும், நான்கு குழந்தைகளும் உள்ளனர். இதனிடையே கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் வேலப்பகவுண்டன்பாணையத்தில் செயல்பட்டுவரும் காற்றாலை நிறுவனத்தில் நடந்த திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட கருப்பசாமியை கைது செய்த காமநாயக்கன்பாளையம் போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில் கடந்த 6 மாதங்களுக்கு முன்னர் நிபந்தனை ஜாமினில் வெளியே வந்த கருப்பசாமி வழக்கு விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவாகியுள்ளார். இதனை அடுத்து பல்லடம் குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி கருப்பசாமி மீது பிடியாணை பிறப்பித்தார். இந்நிலையில் கருப்பசாமியை கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
இந்நிலையில் ஆவணங்கள் எதுவும் இன்றி கருப்பசாமி நீதிமன்றத்தில் ஆஜரானதால் தனக்கு தண்டனை கிடைத்துவிடுமோ என்கிற அச்சத்தில் நீதிமன்ற வளாகத்தில் அருகில் கிடந்த பிளேடு போன்ற ஆயுதத்தால் அறுத்துக்கொண்டு தற்கொலைக்கு முயன்றதாக கூறப்படுகிறது. இதனால் கழுத்து பகுதியில் ரத்தம் வெளியேறியது. இதனை கண்ட போலீசார் கருப்பசாமியை மீட்டு சிகிச்சைக்காக பல்லடம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
இதனிடையே கணவர் தற்கொலைக்கு முயன்றதை கண்ட அவரது மனைவி மஞ்சுளா கையை பிளேடால் அறுத்து தற்கொலைக்கு முயன்றார். இருவரும். சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சைக்கு பின்னர் நீதிபதி முன்னால் கருப்பசாமி ஆஜர்படுத்தப்பட்டார். பின்னர் கருப்பசாமியை சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு போலீஸ் பாதுப்புடன் கொண்டு சென்றனர்