அதிமுக ஆட்சியின் மீது ஊழல் குற்றச்சாட்டு சொன்னால் நாக்கை அறுப்போம் என்று அமைச்சர் துரைக்கண்ணு பேசியிருப்பது பொதுமக்கள் மத்தியில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து அமமுக இராமநாதபுரம் மாவட்ட கழக செயலாளர் வ.து.ந.ஆனந்திடம் நாம் கருத்து கேட்டபோது,
தமிழகத்தில் அதிமுக ஆட்சிக்கு எதிராக லஞ்சம், ஊழலைப் பற்றி யாராவது பேசினால் அவர்களது நாக்கை அறுப்போம் என்று தஞ்சாவூரில் அமைச்சர் துரைக்கண்ணு பேசியது அதிர்ச்சியளிக்கிறது. தமிழக அரசின் செயல்பாடுகள், நடவடிக்கைகள் குறித்து கேள்வி கேட்க தமிழக மக்கள் அனைவருக்கும் உரிமை இருக்கிறது. ஒரு அமைச்சரே வன்முறையை தூண்டும் வகையில் பேசுவது தமிழகத்திற்கு நல்லதல்ல. தமிழகத்தில் எல்லா துறைகளிலும் லஞ்சம், ஊழல் மலிந்து விட்டது என்று பிரதான எதிர்க்கட்சி உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் குரல் எழுப்புவது ஒரு தனிமனிதன் மீதான குற்றச்சாட்டு அல்ல. தமிழக அரசு மீதான குற்றச்சாட்டு. தமிழக அரசு மீதான ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு ஆட்சியாளர்கள்தான் விளக்கம் தரவேண்டுமே தவிர, கேள்வி கேட்பவர்களை நாக்கை அறுப்போம் என்று சொல்வது அடிப்படை பேச்சுரிமையை நசுக்குவதாகும். அமைச்சர் துரைக்கண்ணுவின் இந்த பேச்சுதான் ஜனநாயகத்திற்கும், கருத்துரிமைக்கும் எதிரானது. ஜெயலலிதாவின் மறைவிற்கு பின்னால் அதிமுக அமைச்சர்கள் எல்லாம் கட்டுப்பாடு இல்லாமல் பேசி வருகிறார்கள். ஏற்கனவே இராமநாதபுரத்தில் அமைச்சர் மணிகண்டன் வேட்டியை உருவுவேன் என்று பேசினார். திண்டுக்கல் சீனிவாசனோ நாட்டின் பிரதமர் மன்மோகன்சிங் என்கிறார்.
அமைச்சர் ராஜேந்திர பாலாஜி எல்லாம் மேலே இருக்கிறவர் பார்த்துக் கொள்வார் என்று மோடியை குறிப்பிட்டு பேசுகிறார். திருப்பூரில் சாயக்கழிவுகளால் ஆற்றுநீர் நுரையுடன் வருவதைப் பார்த்து பெண்கள் சோப்பு போட்டு குளிப்பதால் தான் ஆற்றில் நுரை பொங்கி வழிகிறது என்று பேசியவர்தான் கருப்பண்ணன். செல்லூர் ராஜூ நீர் ஆவியாகாமல் இருக்க வைகை அணையில் தெர்மாகோல் போட்டு அரசுப் பணத்தை வீணடித்தார். தற்போது இருக்கும் அமைச்சர்கள் தான் அமைச்சர் என்பதை மறந்து விஞ்ஞானிகளாக செயல்படுகிறார்கள்.
ஆளும்கட்சியின் மக்கள் பிரதிநிதிகள் இப்படி பேசுவது தமிழகத்தை தவறான பாதைக்கு கொண்டு செல்லும். இப்படி கட்டுப்பாடற்று பேசுபவர்கள் அமைச்சர்களாக இருக்க தகுதியற்றவர்கள். முதல் நடவடிக்கையாக துரைக்கண்ணுவை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும். இதுமற்ற அமைச்சர்களுக்கு பாடமாக அமையும். வன்முறையை தூண்டும் விதத்தில் யார் பேசினாலும் அவர்களின் மீது தமிழக அரசு தீவிர நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும் என்று நாட்டு மக்கள் கருதுகிறார்கள். ஆனால் மக்களின் கருத்துக்களுக்கு செவிசாய்க்காத காரணத்தால் தான் இந்த அரசை மக்கள் விரோத அரசு என்று விமர்சிக்கிறார்கள். இனிமேலாவது மக்கள் பிரதிநிதிகள் தங்களின் பதவியின் மாண்பை உணர்ந்து செயல்பட வேண்டும்” என்று கூறினார்.