மணல் கொள்ளை… துணைபோகும் அதிகாரிகள்..? : நடவடிக்கை எடுப்பாரா சிவகங்கை மாவட்ட ஆட்சியர்..!
சிவகங்கை மாவட்டத்தில் திருப்புவனம், மானா மதுரை, இளையான் குடி ஆகிய சுற்று வட்டாரப் பகுதிகள் முழுவதும் சவுடுமண், உவரி மண் அள்ளுவதாக அனுமதி வாங்கி அந்த அனுமதியை முறைகேடாக பயன்படுத்தி ஆற்றுமணல் அள்ளி வருகிறார்கள். முறைகேடாக மணல் கடத்தும் லாரிகளை தாசில்தார் மடக்கிப் பிடித்து தனது அலுவலகத்தில் நிறுத்தினால் மேல்அதிகாரி அந்த லாரிகளை விடுவிக்கச் சொன்னதாக தாசில்தாரே கூறுவது கொடுமையிலும் கொடுமையாக இருக்கிறது.
ஆறுகளில் மணல் அள்ள சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தடை உத்தரவு பிறப்பித்து இருப்பதால் சவுடுமண், உவரி மண் அள்ளுவதாக அரசு அதிகாரிகளுக்கு பணத்தைக் கொடுத்து அனுமதி வாங்கி அந்த அனுமதியை தவறாக பயன்படுத்தி ஆற்று மணலைக் கடத்தும் மணல் கொள்ளையர்களை தடுத்து நிறுத்த வேண்டிய அரசு அதிகாரிகள் அவர்களுக்கு துணை போவது மிகவும் கொடுமையான செயலாக கருதப்படுகிறது.
சிவகங்கை மாவட்டம் விவசாயத்தை நம்பி வாழும் கிராமங்களைக் கொண்ட மாவட்டம். மனிதர்களும் கால்நடைகளும் உயிர் வாழ நீர் தேவை. அந்த நீராதாரத்தை அழித்து மணலை திருடும் மணல் கொள்ளையை தடுக்கும் வகையில் சமூக ஆர்வலர்களும், பத்திரிகையாளர்களும் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தால் தகவலை தெரிந்த அதிகாரிகள் மணல் கொள்ளையர்களுக்கு தகவல் சொல்லி பாதுகாப்பாக தொழில் செய்யுங்கள் என்பதும் சிவகங்கையில் மட்டும்தான் நடக்கிறது.
சமீபத்தில் மாலை நேரத்தில் சிவகங்கை தாசில்தார் ஏழு லாரிகளை மடக்கிப் பிடித்து வட்டாட்சியர் அலுவலகத்தில் நிறுத்தி வைக்கிறார். அந்த ஏழு லாரிகளில் இருந்தது அனைத்தும் ஆற்றுமணல். ஆனால் வழக்கு பதிவு எதுவும் செய்யாமல் ஒரு நாள் முழுவதும் நிறுத்தப்பட்டிருந்த லாரிகள் விடுவிக்கப்பட்டது. லாரிகளை பிடித்தவுடன் வீடியோ, போட்டோ ஆதாரங்களுடன் கலெக்டருக்கு அனுப்பி ஏன் வழக்கு பதிவு செய்யவில்லை என்று கேட்டால் பதில் தரவும் இல்லை.
இதுகுறித்து தாசில்தாரை தொடர்பு கொண்டு கேட்கும் போது மணல் கொள்ளையை தடுக்க வேண்டிய முறையில் நான் லாரிகளை பிடித்து வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் நிறுத்திவிட்டேன். என்னுடைய அதிகாரம் அவ்வளவுதான். எனக்கு மேல் அதிகாரம் படைத்த அதிகாரிகள் இருக்கிறார்கள். நான் லாரிகளை சிறைப் பிடித்து அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்து விட்டேன். அதற்குமேல் நடவடிக்கை எடுப்பதும் லாரிகளை விடுவிப்பதும் கலெக்டரின் அதிகாரத்திற்குட்பட்டது. நான் என்ன செய்ய முடியும் என்கிறார்.
மனிதர்களும், கால்நடைகளும் உயிர் வாழ முக்கியமாக நீராதாரத்தை அழித்து சுற்றுச்சூழலை சீரழித்துக் கொண்டு இருக்கும் மணல் திருட்டை தடுத்து மணல் கொள்ளைக்கு பயன்படுத்திய வாகனங்களின் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்காததற்கான காரணத்தை மாவட்ட ஆட்சியர் விளக்க வேண்டும். இல்லையெனில் சமூக ஆர்வலர்களும் பொதுமக்களும் சிவகங்கை மாவட்ட நிர்வாகத்திற்கு எதிராக போராடத் தயாராகி வருகிறார்கள். பிடிபட்ட வாகனங்களின் வீடியோ போட்டோ ஆதாரங்கள், தாசில்தார் பேசிய ஆதாரங்களுடன் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரவும் பொதுமக்கள் தயாராகி வருகிறார்கள்.
சுற்றுச்சூழலையும், நீராதாரத்தையும் அழித்துக் கொண்டிருக்கும் மணல் கொள்ளையை ஆட்சியர் தடுத்து நிறுத்தி இந்த மண்ணையும், மக்களையும் காப்பாற்ற வேண்டிய பொறுப்பும் கடமையும் சிவகங்கை மாவட்ட ஆட்சியருக்கு இருக்கிறது.
இதையடுத்து அரசியல்வாதிகளுக்கும், மணல் திருட்டில் ஈடுபடுபவர்களுக்கும் துணைபோகாமல் மணல் திருட்டை தடுத்து நிறுத்தி அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பெரும்பாலான பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் விரும்புகின்றனர்.
– நமது நிருபர்