நடிகர் விஜய் 64 படப்பிடிப்பு ! பார்வையற்ற மாற்று திறனாளிகள் வேதனை
நடிகர் விஜய் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு பூந்தமல்லியில் உள்ள பார்வையற்றோர் பள்ளியில் விதியை மீறி நடத்தப்பட்டதாகவும், அங்குள்ள பார்வையற்ற மாணவர்களை சந்திப்பதாக வாக்குறுதி அளித்த விஜய், நீண்டநேரம் காத்திருக்க வைத்துவிட்டு சென்றுவிட்டதாகவும் ஆசிரியர் ஒருவர் வேதனை தெரிவித்துள்ளார்.
சென்னை பூந்தமல்லியில் உள்ள பார்வைத்திறன் குறையுடையோருக்கான அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியின் தமிழ் பட்டதாரி ஆசிரியர் சரவண மணிகண்டன் என்பவர் தான் அறிக்கை வாயிலாக நடிகர் விஜய் இப்படி செய்யலாமா? என்று நியாயம் கேட்டுள்ளார்.
தளபதி என்றழைக்கப்படும் நடிகர் விஜய்யின் 64 படத்தின் படப்பிடிப்பு பூவிருந்தவல்லி பார்வைத்திறன் குறையுடையோருக்கான அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் மூன்று நாட்கள் நடைபெற்றதாக குறிப்பிட்டுள்ள அவர், பொதுவாகவே தங்கள் பள்ளியில் எந்தவிதப் படப்பிடிப்பையும் அனுமதிக்கக்கூடாது என்பதே அங்கு பயிலும் மாணவர்கள், பணியாற்றும் ஆசிரியர்கள் உள்ளிட்ட அனைவரின் ஒருமித்த கருத்து என்றும், ஆனாலும், இதையும் மீறி, அரசியல் செல்வாக்கு, சொந்த செல்வாக்கு என்ற ஏதோ ஒரு காரணத்தில் படப்பிடிப்பிற்கு அனுமதி வாங்கிவிடுவதாகவும் சுட்டிக் கட்டியிருக்கிறார்.
தங்கள் மாணவர்களால் தடையின்றிப் பள்ளி வளாகத்தில் நடமாட முடியாதபடிக்கு எங்கு பார்த்தாலும் கார்கள், வாகனங்கள் இருந்ததாகவும், பள்ளி முதன்மை நுழைவாயிலில் விஜய்யை பார்ப்பதற்கென்றே ஒரு பெருங்கூட்டம் இருந்ததால் உள்ளே இருப்பவர்கள் வெளியேற முடியவில்லை என்றும், வெளியே இருந்து வருபவர்கள் உள்ளே நுழைய முடியாதபடிக்கு மூன்று நாட்களும் ஏக கெடுபிடிகள் செய்ததாகவும் குற்றஞ்சாட்டியுள்ளார் ஆசிரியர் சரவணன்.
ஞாயிற்றுக்கிழமையன்று மாணவர்களுக்குப் பாடப் புத்தகங்களைப் படித்துக்காட்ட வந்த தன்னார்வலர்கள் தடுத்து நிறுத்தப்பட்டதாகவும், அதில் சிலர் திருப்பி அனுப்பப்பட்டதாகவும் சுட்டிக்கட்டும் அவர், பள்ளி வளாகம் என்கிற புரிதல்கூட இல்லாமல், புகைபிடிப்பது, குப்பைகள் போடுவது என படக்குழுவினர் மிகவும் அலட்சியமாக நடந்துகொண்டதாக ஆதங்கப்பட்டுள்ளார்.
மூன்று நாட்களும் படப்பிடிப்பு குழுவினர் செலுத்திய ஆக்கிரமிப்புகள், அதிகாரங்கள், அதனால் பார்வையற்ற மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு ஏற்பட்ட அசவுகரியங்கள் என அத்தனையையும், மாணவர்களுக்கு விஜய் மீது இருக்கிற அன்பினாலும், இந்த மூன்று நாட்களில் எப்படியேனும் ஒருமுறையாவது விஜய்யிடம் பேசிவிடவேண்டும் என்ற ஆர்வத்தினாலும் பொறுத்துக்கொண்டதாக சரவணன் தெரிவித்துள்ளார்.
ஆசிரியர்கள் இருவர் படப்பிடிப்பு குழுவினரை அணுகிப் பேசியதாகவும் கடுமையான முயற்சிகளுக்குப் பிறகு, விஜய்யின் மேலாளர் என்று தன்னை அறிமுகம் செய்துகொண்ட உதயக்குமார் என்பவர், முதலில் மாலை நான்கு மணிக்கும், பிறகு ஆறு மணிக்கும் சந்திப்பார் என காத்திருக்க வைத்ததோடு மாணவர்களை ஒருங்கிணைக்குமாறும் கூறிச் சென்றதாக நினைவூட்டியுள்ளார்.
அதன்படி மாணவர்கள் படப்பிடிப்புத் தளத்திற்கு அருகிலேயே விஜய்யை சந்திக்கும் ஆர்வத்தோடும், விருப்பத்தோடும் மிக அமைதியான முறையில் விஜய்யின் கண் எதிரே, ஏறத்தாழ ஒன்றரை மணிநேரம் காத்திருந்ததாகவும், இயக்குநர் லோகேஷ் கூட இரண்டு நிமிடங்கள் வந்து மாணவர்களிடம் பேசிவிட்டுச் சென்ற நிலையில் நிச்சயம் சந்திப்பார் என்று சொல்லப்பட்ட விஜய் படப்பிடிப்பை முடித்துக்கொண்டு ரகசியமாய் கிளம்பிவிட்டதாக குற்றஞ்சாட்டி உள்ளார். அங்கிருந்து விஜய் கிளம்பியதை கூட அறியாமல், தங்களை சந்திக்க அவர் வருவார் என நம்பிக்கையோடு கூடுதலாக அரைமணி நேரம் தங்கள் மாணவர்கள் காத்துக்கிடந்ததாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
பார்வை அற்ற மாற்றுத்திறனாளி மாணவர்கள் பயிலும் பள்ளிக்கு வந்திருந்தும், சில வினாடிகளாவது அவர்களைச் சந்திக்கவேண்டும், உரையாட வேண்டும் என ஏன் தோன்றவில்லை? என்று கேள்வி எழுப்பி உள்ளார்.
பார்வையுள்ள ரசிகனைப்போல, ஸ்டைல், நடனம், முகபாவனை, மிடுக்கான ஆடை அலங்காரத்தின் வழியே அல்லாமல், குரலால் மட்டுமே ஈர்க்கப்பட்டு விஜய்யின் மீது பிரியமும், பேரன்பும் கொண்டிருக்கிற பார்வையற்ற மாற்றுத்திறனாளி ரசிகர்களுக்கு, எல்லாம் வேஷம் என்பதை புரியவைத்தமைக்காக நடிகர் விஜய்க்கு நன்றி என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்த அறிக்கை குறித்து நடிகர் விஜய் தரப்பில் விளக்கம் பெற முயன்றோம், அவர்களை தொடர்பு கொள்ள இயலவில்லை..!