அரசியல்தமிழகம்

காவிரியில் தமிழ்நாட்டின் உரிமைக்கு ‘சமாதி’ எழுப்பும் பா.ஜ.க. அரசு! வைகோ கண்டனம்

காவிரி ஆற்று நீர் பங்கீட்டு சிக்கல் குறித்து 17 ஆண்டுகளுக்கு மேலாக விசாரித்து வந்த காவிரி நடுவர் மன்றம், பிப்ரவரி 5, 2007 இல் வழங்கிய இறுதித் தீர்ப்பைச் செயல்படுத்த மிகத் தெளிவான வழிகாட்டு விதிகளை வகுத்திருந்தது.

பக்ரா – பியாஸ் மேலாண்மை ஆணையத்தை முன்மாதிரியாகக் கொண்டு, காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் காவிரி ஒழுங்காற்றுக் குழு ஆகிய அமைப்புகளை மத்திய அரசு உருவாக்க வேண்டும் என்று காவிரி நடுவர் மன்றம் இறுதித் தீர்ப்பில் உத்தரவிட்டது. 6 ஆண்டுகள் காலதாமதமாக 2013 பிப்ரவரி 19 இல் மத்திய அரசிதழில் வெளியிடப்பட்டாலும் அதனைச் செயல்படுத்த முன்வரவில்லை.

காவிரி நீர் பங்கீடுதொடர்பான வழக்குகளை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, யூ.யூ.லலித் ஆகியோர்அடங்கிய அமர்வு, பிப்ரவரி 16, 2018 இல் காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்க வேண்டும் என்றுஉத்தரவிட்டது. அதன் பின்னர் 2018 மே மாதம் காவிரி மேலாண்மை ஆணையம் ஒன்றை மத்திய அரசுஅமைத்தது.

மத்திய பா.ஜ.க. அரசு அமைத்துள்ள காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு கர்நாடகத்தின கட்டுப்பாட்டின் கீழ் உள்ள அணைகளிலிருந்து நீர் திறப்பு, நீர் இருப்பு மேலாண்மை ஆகியவற்றை மேற்கொள்ள உரிய அதிகாரம் அளிக்கப்படவில்லை. காவிரி நீரை பிரச்சினைக்குரிய மாநிலங்களுக்குகிடையே பகிர்ந்து அளிக்கும் அதிகாரமும் இல்லை என்பதை மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டபோதே நான் சுட்டிக்காட்டி இருந்தேன்.

கடந்த இரண்டு ஆண்டுகளாக காவிரி மேலாண்மை ஆணையம் கூட்டிய கூட்டத்தில் தமிழக அரசு முன்வைத்த கோரிக்கைகளைச் செயல்படுத்த, மேலாண்மை ஆணையம் உத்தரவிட்ட போதெல்லாம் கர்நாடக மாநிலம் மறுத்து வந்தது. நீர் திறப்பு பற்றிய மேலாண்மை ஆணையத்தின் அதிகாரம் கேள்விக்குள்ளானதைக் கண்கூடாகப் பார்த்தோம்.

காவிரி நடுவர்மன்றத்தின் இறுதித் தீர்ப்பை நீர்த்துப்போகச் செய்யும் வகையில் உப்புச் சப்பற்ற காவிரி மேலாண்மை ஆணையம், ஒழுங்காற்றுக் குழு ஆகியவைகளை அமைத்த மத்திய அரசு, தற்போது காவிரியில் தமிழகத்தின் உரிமையை ஆழக் குழிதோண்டிப் புதைத்து சமாதி எழுப்பும் வேலையில் இறங்கி இருக்கிறது.

காவிரி ஆணையத்தின் 5ஆவது கூட்டம், மத்திய நீர்வள ஆணையத் தலைவர் ராஜேந்திரகுமார் தலைமையில், கடந்த பிப்ரவரி மாதம் 25 ஆம் தேதி டெல்லியில் நடந்தது. இதுவே காவிரி ஆணையத்தின் இறுதிக் கூட்டமாகக்கூட இருக்கலாம்.

ஏனெனில், மத்திய நீர்வளத்துறை அமைச்சகமான ஜல்சக்தித் துறை, காவிரி மேலாண்மை ஆணையத்தைத் தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்து, உத்தரவு பிறப்பித்து இருக்கின்றது. இதன் மூலம் காவிரி மேலாண்மை ஆணையத்தின் அற்ப சொற்ப அதிகாரத்தையும் மத்திய பா.ஜ.க. அரசு பறித்துவிட்டது.

நதிநீர் பங்கீட்டுச் சிக்கல்களுக்குத் தீர்வு காண அமைக்கப்பட்ட அனைத்துத் தீர்ப்பாயங்களையும் இணைத்து ஒரே தீர்ப்பாயம் அமைப்பதற்கு முயற்சிக்கும் மத்திய அரசின் முதல் நடவடிக்கையாக காவிரி மேலாண்மை ஆணையம் ஒழித்துக்கட்டப்பட்டு இருக்கின்றது.

அரசியல் அமைப்புச் சட்டத்தின்படி, மாநிலங்களுக்கு இடையேயான நதிநீர் தவா சட்டம் 1956 மற்றும் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புகள் அனைத்தையும் அலட்சியம் செய்து வரும் மத்திய பா.ஜ.க. அரசின் ஏதேச்சாதிகாரப் போக்கு வன்மையான கண்டனத்துக்கு உரியது.

காவிரி மேலாண்மை ஆணையத்தை ஜல்சக்தித் துறையில் இணைக்கும் முடிவை மத்திய அரசு உடனடியாகக் கைவிட வேண்டும்.

கொரோனா பேரிடர் தமிழ்நாடு உள்ளிட்ட அனைத்து மாநிலங்களிலும் துயரங்களை ஏற்படுத்தி வரும் இந்தச் சூழலில், தமிழ்நாட்டின் காவிரி உரிமையைப் பறிக்கும் பா.ஜ.க. அரசின் வஞ்சகத்திற்கு எதிராக பெரும் போராட்டத்தைச் சந்திக்க வேண்டிய நிலை ஏற்படும் என்று சுட்டிக்காட்டுகிறேன்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button